ஹிந்துக்களின் குணங்கள்- உண்மைச் சம்பவங்கள் – 1 (Post No.5077)

Written by S NAGARAJAN

 

Date: 5 JUNE 2018

 

Time uploaded in London –  7-21 am  (British Summer Time)

 

Post No. 5077

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

இது தான் இந்தியா

ஹிந்துக்களின் உயரிய குணங்கள்-சில உண்மைச் சம்பவங்கள் – 1

 

ச.நாகராஜன்

 

1

ஹிந்துக்களின் பாரம்பரிய தர்மம் சத்தியம் பேசுவது; பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருப்பது; உண்மையாக உழைப்பது; நேர்மையாக இருப்பது: எளிமையாக வாழ்வது உள்ளிட்ட பல உயரிய குணங்களைக் கொண்டதாகும்.

 

இதை விளக்கும் சம்பவங்கள் கடந்த பல நூற்றாண்டுகளில் ஏராளம், ஏராளம் உண்டு.

 

அதைத் தொகுத்தால் ஒரு பெரிய கலைக்களஞ்சியம் ஆகி விடும்.

மெய் சிலிர்க்க வைக்கும் சம்பவங்கள் பலவற்றை ஆங்கிலேயர்கள் தங்கள் நூல்களில் எழுதியுள்ளனர்.

நெகிழ வைக்கும் சில சம்பவங்களை இங்கே காணலாம்.

2

1943ஆம் ஆண்டு!

 

பிரான்சை சேர்ந்த மருத்துவக் கம்பெனி ஒன்று கல்கத்தாவில் உள்ள பிரபல டாக்டர் ஒருவரைத் தங்கள் தயாரிப்புகளைப் பரிந்துரைத்து விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டது.அதன் பிரதிநிதிகள் டாக்டரை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் டாக்டரிடம் கூறி வியந்த சொற்கள் இவை:

“நாங்கள் உலகெங்கும் சுற்றி வருகிறோம். இங்கு இந்தியாவில் பஞ்சத்தால் மக்கள் வாடி வதங்குகிறார்கள். பிச்சை எடுத்தாலும் கூட உணவு கிடைப்பதில்லை. பெரிய மளிகைக் கடைக்கு அருகில் கூட பஞ்சத்தால் மக்கள் இறப்பதைக் காண்கிறோம்.  ஆனால் அதிசயம் என்னவெனில் இப்படிப்பட்ட கொடுமையான காலத்தில் அவர்கள் மளிகைக் கடையைச் சூறையாடி இருக்க வேண்டும். அவர்கள் எங்கும் திருடவும் இல்லை; கொள்ளை அடிக்கவுமில்லை; சூறையாடவும் இல்லை.”

 

 

கடுமையான சோதனை காலத்தில் கூட உயிரை இழக்க ஹிந்துக்கள் தயாராக இருந்தார்களே தவிர கொள்ளையிலோ, கொலையிலோ அவர்கள் இறங்கியதில்லை!

 

3

1942ஆம் ஆண்டு. நவம்பர் மாதம்.

கல்கத்தா ஹை கோர்ட்டைச் சேர்ந்த ஒரு பிரபல அட்வகேட் கூறியது இது:

 

எங்கள் கிராமத்தில் இருந்த ஒரு விவசாயி ஒரு கனவானிடம் வேலை பார்த்து வந்தார். அந்த கனவான் அவருக்கு 10 ரூபாய் தர வேண்டும். அவர் அந்த விவசாயியிடம் அதைப் பின்னால் தருவதாகக் கூறினார். அந்த விவசாயி என்னிடம் வந்து, “ஐயா! இந்த பஞ்ச காலம் மகா கொடுமையானது. எனக்கு வேலை தந்த அந்த கனவானிடம் இரண்டு  மூன்று  முறை எனக்கு வர வேண்டிய பணத்தைக் கேட்பதற்காகச் சென்றேன். ஆனால் என்னால் அதைக் கேட்க முடியவில்லை. எனக்கு ஏழ்மையின் கொடுமை தெரியும். அவரும் அப்படியே அதில் வாடி இருக்கும் போது அவரிடம் எப்படி நான் கேட்பது?”

 

4

 

சிசு பாபு பெரிய பணக்காரர்.தர்மாத்மா. சந்தன் நகரில் வசித்து வந்தார் அவர். அவரைப் பற்றிய இரு சம்பவங்கள் உண்டு.

 

 

  1. ஒரு ஏழை பிராமணர் தன் பெண்ணின் கல்யாணத்திற்காக உதவி வேண்டி சிசுபாபுவைச் சந்தித்தார். மாப்பிள்ளை யார் என்று கேட்டார் சிசு பாபு. கல்யாண தேதி, கல்யாணத்திற்கு ஆகும் செலவு எவ்வளவு என்பதையும் அந்த பிராமணரிடம் அவர் கேட்டுத் தெரிந்து கொண்டார். அங்கிருந்து சென்ற பிராமணருக்கோ ஒரே கவலை. வெளிப்படையாக உதவுகிறேன் என்று சிசுபாபு சொல்லவில்லை. உதவி செய்வாரா என்றெல்லாம் கவலைப்பட்டு உருகினார் அவர்.

கல்யாணம் நிச்சயமானவுடன கல்யாண தேதியை சிசு பாபுவிடம் சென்று அவர் கூறினார்.

திருமண தினத்திற்கு முந்தைய நாள் தேவையான அனைத்தையும் வழங்கிய சிசுபாபு செலவிற்கான பணத்தையும் தந்தார்.

பிராமணரின் கண்களிலிருந்து கண்ணீர் தாரைதாரையாகக் கொட்டியது. நன்றியைத் தெரிவித்த கண்ணீர் அது.

 

 

  1. சிசுபாபுவின் மாளிகை வீட்டில் ஒரு பெரிய சாண்ட்லியர் விளக்கு ஹாலில் எரிந்து கொண்டிருக்கும். ஒரு நாள் வீட்டைச் சுத்தம் செய்யும் வேலைக்காரி வீட்டை சுத்தம் செய்யும் போது அதைத் தவறுதலாக உடைத்து விட்டார். அந்த விளக்கின் மேல் சிசுபாபு கொண்டிருந்த பிரியத்தை அவர் அறிவார். கண்ணீர் விட்டுக் கதறினார் அந்த வேலைக்காரி.

இதைப் பார்த்த வீட்டின் திவான் (மானேஜர்) அந்த வேலைக்காரியைக் கடுமையாகத் திட்டியதோடு, அவளை அடிக்கவும் ஆரம்பித்தார்.

கங்கையிலிருந்து திரும்பி வந்த சிசுபாபு நடந்ததை அறிந்தார்.

மானேஜரைக் கடிந்து கொண்டார்:” அவளே தன் தவறுக்காக வருந்தி அழுகிறாள்; நீங்கள் அவளை அடிக்கிறீர்களே! இது சரிதானா?” என்றார் அவர்.

வேலைக்காரி தேம்பித் தேம்பி அழுதாள். கடைசி வரை சிசுபாபுவிற்கு விசுவாசமாக இருந்தாள் அவள்!

எளியவர்களிடம் பரிவு என்பது உயர்ந்தோர் குணம். ஒரு ஹிந்துவுக்கு இயல்பாகவே அது உண்டு!

 

***

ஆதாரம் : ட்ரூத் ஆங்கில வார இதழ் (30-3-2018)