நூறு ஆண்டுகள் வாழ 100 ஆண்டுகள் வாழ்ந்தோர் கூறும் ஆலோசனை!

Compiled by S NAGARAJAN

Article No.1872; Dated 18 May 2015.

Uploaded in London at 9-15

 

By .நாகராஜன்

 

  ” கிழக்கில் பரிசுத்தமாக உதிக்கும் சூரியனை நூறாண்டு கண்டு வணங்குவோம். நூறாண்டு வாழ்வோம். நூறாண்டு உறவினருடன் கூடிக் குலவுவோம். நூறாண்டு மகிழ்வோம். நூறாண்டு கீர்த்தியுடன் விளங்குவோம். நூறாண்டு இனியனவற்றையே கேட்போம். நாறாண்டு இனியனவற்றையே பேசுவோம். நூறாண்டு தீமைகளால் ஜெயிக்கப்படாதவர்களாக வாழ்வோம்

                                                – வேத பிரார்த்தனை

நூறு ஆண்டுகள் ஆரோக்கியமாக செயலூக்கத்துடன் வாழ ஆசைப்படாதவர் யாருமே இருக்க முடியாது. இன்றைய நவீன காலத்தில் முப்பது வயதிலேயே மாரடைப்பு, கான்ஸர், எய்ட்ஸ் போன்ற வியாதிகளால் அவஸ்தைப் படுவோர் பெருகி வரும் வேளையில் பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட புதுப் புது வியாதிகள் வேறு வந்து பயமுறுத்துகின்றன.

டீயன்னா கெர்லி என்ற எழுத்தாளர் பல்வேறு பத்திரிக்கையாளர்கள் பேட்டி கண்ட நூறு வயது அல்லது நூறு வயதை நெருங்கும் பெரியோர்கள் தரும் ‘செல்லமான’ அறிவுரைகளைத் தொகுத்துள்ளார். அவற்றில் சில:

ருத் என்ற பெண்மணி நூறு ஆண்டை எட்டிப் பிடிப்பவர். அவரது நீடித்த வாழ்நாள் இரகசியத்தை அறிய, ஹஃப்பிங்டன் போஸ்ட் என்ற பத்திரிக்கை அவரைப் பேட்டி கண்டது.

அவர் தந்த டிப்ஸ்:-

1) காலண்டரை தினமும் பார்க்காதீர்கள்! ஒவ்வொரு நாளையும் நன்கு கொண்டாடி மகிழுங்கள்

2) எனது வீட்டைச் சுற்றியாவது தினசரி நடக்கிறேன். இயக்கம் என்பது மிகவும் முக்கியமானது. நடந்து கொண்டே இருங்கள். இயங்கிக் கொண்டே இருங்கள்!

3)தரமான எதிலும் முதலீடு செய்யுங்கள். அவற்றை எந்த புது ஸ்டைல் வந்தாலும் வெல்ல முடியாது.

என்பிசி தொலைக்காட்சி நூறு வயது ஆன டாக்டர் ஒருவரைப் பேட்டி கண்டது. அவர் தினசரி தனது க்ளினிக்கிற்கு வந்து நோயாளிகளை நன்கு பரிசோதித்து பிரிஸ்கிரிப்ஷன் தருகிறார். அவர் கூறும் அறிவுரை இதோ:-

1)வைட்டமின் மாத்திரைகளா? அவை வேண்டவே வேண்டாம். நிறைய டாக்டர்களைப் பார்த்துக் கொண்டே இருக்கிறீர்களா? அதையும் வேண்டாம் என்கிறேன் நான்!

2) திருமணம் செய்து கொள்ளுங்கள். செக்ஸ் உறவு இன்றியமையாதது. நலமுடன் ஜோடியாக வாழுங்கள்!

3) யாரையாவது வெறுத்தீர்கள் என்றாலும் கூட, அதை மனதிலேயே வைத்துக் கொள்ளுங்கள். யாரையும் மனம் புண்படும்படி வெளிப்படையாகப் பேசி விடாதீர்கள். அன்பு பாராட்டுவதை மட்டும் நிறுத்தி விடாதீர்கள்.

4) யாரையும் உங்களை கண்ட்ரோல் செய்வதை அனுமதிக்காதீர்கள்,

5) கொஞ்சம் அழுது மன ஆறுதல் பெறவும் நேரத்தை ஒதுக்குங்கள்.

6) இளமையாக இருக்கும் போதே நிறைய பயணம் செய்யுங்கள். பணம் செலவாகுமே என்று தயங்காதீர்கள். சமாளித்து பல இடங்களுக்குச் செல்லுங்கள். இதில் கிடைக்கும் அனுபவத்தை எந்தப் பணமும் ஈடு செய்ய முடியாது.

7) யாருடனும் உங்களை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். இப்படி ஒப்பிட்டால் உங்களால் மகிழ்ச்சியாக வாழவே முடியாது. தூரத்துப் பச்சை கண்ணுக்கு அழகு என்பதை மனதில் கொள்ளுங்கள்.

8) ஒரு சமயத்தில் ஒரு வேலை என்ற கொள்கையைக் கடைப்பிடியுங்கள்.

9) உங்களுக்குப் பிடித்தது எதுவோ அந்த வேலையைச் செய்யுங்கள்.

10) காலம் தனக்குத் தானே அனைத்தையும் சரி செய்து விடும். எதைப் பற்றியும் ரொம்பவும் அலட்டிக் கொள்ளாதீர்கள்.

11) உங்கள் மதம் எதுவானாலும் சரி, ஒன்றை மட்டும் சொல்வேன். நீங்கள் நம்புவதை மட்டும் விட்டு விடாதீர்கள்.

12) சூழ்நிலைக்குத் தக நெகிழ்வுடன் வாழக் கற்றுக் கொள்ளுங்கள். மன்னிக்கப் பழகுங்கள்.

13) ஏதேனும் இழப்பு ஏற்பட்டு விட்டதா, இழந்ததற்கு துக்கப்படுங்கள். துக்கத்திற்கும் கூட நேரம் ஒதுக்குங்கள்.

அட்ரின் லீ என்ற நூறு ஆண்டு வயது நிரம்பிய பெரியவர் கூறும் ஆலோசனை இது:-

  • படிப்படியாக முன்னேறுவதை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள்.
  • தினசரி நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.
  • சுத்தமான நீரை அருந்துங்கள்.
  • இறக்க வேண்டும் என்பதற்காக இறந்து விடாதீர்கள். வாழப் பழகுங்கள்,

வாழ்க்கை ஒரு வேடிக்கை தான். எப்படி வாழ்வது என்பது மனிதரைப் பொறுத்த ஒரு விஷயம். திருப்தியுடன் இருங்கள். எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது முடியாத காரியம் என்றாலும் கூட திருப்தியுடன் இருப்பது முடியக்கூடிய ஒன்றே!

  • எந்த ஒருவரிடமும் ஏதாவது ஒன்று நமக்குப் பிடிக்கத்தானே செய்யும்! நாம் எல்லாம் மனிதர்கள் தானே! ஆகவே அன்பு செலுத்துங்கள்.

வேறு சில பெரியோர்கள் கூறும் அறிவுரை:-

  • நல்ல பெரிய படிப்பைப் படித்து விடுங்கள். அந்தக் கல்விச் செல்வத்தை உங்களிடமிருந்து யாரும் பிடுங்கி விட முடியாது. அதில் இழப்பே இல்லை.
  • பாஸிடிவாக எண்ணப் பழகுங்கள். பாஸிடிவாக எதையும் நினைக்கும் போதே அனைத்துமே வெற்றிதான். நெகடிவாக எண்ண ஆரம்பிக்கும் போது உடலில் நச்சு கலக்கிறது. ஆகவே புன்னகை செய்யுங்கள். சிரித்துப் பழகுங்கள். சிரிப்பே சிறந்த மருந்து.
  • வேளாவேளைக்கு உணவு உட்கொள்ளுங்கள். நல்ல காற்று, நல்ல சூரிய ஒளி இரண்டுமே நீண்ட நாள் வாழ அவசியம்.

எப்படி நூறு ஆண்டுகளை எட்டிப் பிடித்தோரின் அன்புரை! அவர்கள் சொன்னால் சரியாகத் தான் இருக்கும்! சதம் போட்டவர்கள் ஆயிற்றே!!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

1965ஆம் ஆண்டு நோபல் பரிசைப் பெற்ற ரிச்சர்ட் ஃபெய்ன்மென் (1918-1988) உலகின் பிரசித்தி பெற்ற இயற்பியல் விஞ்ஞானி. அவர் வாழ்க்கையில் நடந்த சுவையான பல சம்பவங்களை ஏற்கனவே பார்த்துள்ளோம். இன்னும் ஒன்று.

இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் உள்ள கெண்டுகி பல்கலைக்கழகத்தில் பயோகெமிஸ்ட்ரி படிக்கச் சென்றவர் பரத் ஶ்ரீனிவாசன் என்ற மாணவர். ஒரு நாள் இயற்பியலில் ஒரு பாடத்தைப் பற்றி சக மாணவரிடம் விவாதித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் இதைப் பற்றி நன்கு விளக்கமாகச் சரியாகச் சொல்லக் கூடியவர் ரிச்சர் ஃபெய்ன்மேன் தான் என்றார். அத்தோடு சற்றும் தயங்காமல் ரிச்சர்டை தொலைபேசியில் அழைத்தார். அதிர்ஷ்டவசமாக போனை ரிச்சர்டே எடுத்தார், “சார், போனை வைத்து விடாதீர்கள். ஒரு சந்தேகம். இதை உங்களைத் தவிர யாராலும் நீக்க முடியாது. நான் பரத் சீனிவாசன் கெண்டுகி பல்கலைக் கழகத்திலிருந்து பேசுகிறென்” மூச்சு விடாமல் பேசிய பரத்துக்கு ஆதரவாக மறு முனையிலிருந்து பதில் வந்தது, “உன் சந்தேகத்தைக் கேள். நீ என்ன இந்தியாவிலிருந்து வந்திருக்கிறாயா?”

ஆச்சரியப்பட்ட பரத்,” ஆம்” என்று சொல்லி விட்டு தன் சந்தேகத்தையும் கேட்டார். சுமார் இரண்டு மணி நேரம் போனிலேயே விரிவாக பதிலைக் கூறினார் ரிச்சர்ட் ஃபெய்ன்மேன். பிரமித்துப் போன பரத், நன்றி நன்றி என்று பலமுறை கூறி ஆவலுடன், “நான் இன்னொரு முறை உங்களுடன் பேச முடியுமா?” என்றார். “முடியாது” என்று போனை கட் செய்தார் நோபல் மேதை! இந்தச் சம்பவம் பல்கலைக்கழகம் முழுவதும் பரவி அனைவரையும் பரவசப்படுத்தியது. பரத் ஶ்ரீனிவாசனோ நோபல் மேதையுடன் பேசியதால் பேசிய ஹீரோவாக ஆகி விட்டார்!

******************