
Written by S Nagarajan
Date: 26 November 2018
GMT Time uploaded in London –6- 08 am
Post No. 5701
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog
தமிழ் இலக்கியம்; அறநூல்!
பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும் கேள்விகள்!
ச.நாகராஜன்
பாண்டிய மன்னன் கம்பீரமாக வீற்றிருந்தான். அருகிலே அமைச்சர்களும், தளபதியும், ஒற்றர் தலைவரும் நின்றிருந்தனர்.
‘என்ன செய்தி?’ என அமைச்சரை நோக்கி மன்னன் கேட்க, அவர் ஒற்றர் தலைவரை நோக்கித் தலையை அசைத்தார்.
“ மன்னரே! நல்ல செய்தி தான்! வள்ளுவர் தனது தவத்தை முடித்துக் கொண்டு பாண்டிய நாடு நோக்கி வந்து கொண்டிருக்கிறார்!”
ஆஹா என மன்னன் துள்ளிக் குதித்தான். அமைச்சர் புன்முறுவல் பூத்தார்.
“அமைச்சரே! தெய்வப்புலவரின் திருப்பாதங்கள் இந்த சங்கம் வளர்க்கும் மதுரையில் பதியப் போகிறதா! உடனே கிளம்புவோம்! அவரை உரிய முறைப்படி வரவேற்போம். ராணியிடம் செய்தி தெரிவியுங்கள். மகளிரும் வருவர்”- பாண்டியனின் உற்சாகமான ஆணையை ஆமோதித்த அமைச்சர் குறுகுறுவென்று பாண்டியனைப் பார்த்தார்.
பாண்டியன் : “தங்கள் பார்வையில் ஏதோ ஆழ்ந்த அர்த்தம் இருக்கிறதே!”
அமைச்சர் : ஆம் மன்னா! தெய்வப்புலவரின் வருகையைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மக்களிடம் அவர் தவத்தின் பயனையும் அவர் உற்றுணர்ந்த அறிவையும் கொண்டு சேர்க்க வேண்டும். இது மன்னராகிய தங்களின் கடமையாக நான் நினைக்கிறேன்.
பாண்டியன்: அருமை! அருமை! அப்படியே செய்வோம். எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. மக்களிடம் – ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி, வாழ்வியல் மர்மங்களில் அவர்களுக்குத் தோன்றும் சந்தேகங்களை எழுதி அரண்மனையில் சேர்க்கச் சொல்லுங்கள்; புலவர்களை விட்டு விடாதீர்கள்; அவர்களுக்குத் தெய்வப்புலவரின் புலமையின் மீதும் சந்தேகம்; அவருக்கு நாம் காட்டும் மரியாதையின் மீதும் பொறாமை! ஆகவே அவர்கள் அறிவுத் தெளிவு பெற இதுவே சரியான சந்தர்ப்பம். வந்து சேரும் கேள்விகளில் தலையாய நூறு கேள்விகளை – அவை ரகசியங்களை விளக்கச் சொல்லும் கேள்விகளாக, என்றும் எல்லோருக்கும், அதாவது மனித குலத்திற்கே பயன்படுபவையாக இருத்தல் வேண்டும். கேள்விகளை நாமே தேர்ந்தெடுப்போம். என்ன சொல்கிறீர்கள்!
அமைச்சர்: உத்தரவு மன்னா! தங்களின் அறிவும் முடிவும் மக்களை எப்போதுமே மேம்படுத்துவதாக அல்லவா அமைகிறது!
*
மன்னரின் வரவேற்பை வள்ளுவப்பிரான் மனமுவந்து ஏற்றுக் கொண்டார். பாண்டியனை செங்கொல் தவறாது அரசாளச் செய்யும் அன்னை மீனாட்சியைத் தரிசித்தார்.
அம்மன் கோவில் அருகே உள்ள பூங்காவனத்தில் மக்கள் கூட்டம் – ஆயிரக் கணக்கில் திரண்டிருந்தனர்.
மகளிர் ஒரு பாலும் ஆண்கள் மறு புறமும் சீராய் அமர்ந்திருக்க பெரிய மேடையில் சிறப்பான ஆசனத்தில் வள்ளுவப் பிரான் அமர்ந்திருந்தார். அவருக்குக் கீழே ஆசனங்களில் மன்னரும், மஹாராணியும், அமைச்சரும், தளபதியும், முக்கிய அரசவை பிரமுகர்களும் அமர்ந்திருக்க மன்னருரும் ராணியும் வள்ளுவருக்குப் பாதபூஜை செய்து மகிழ்ந்தனர்; மக்கள் கரம் தட்டிப் பாராட்டி மகிழ்ந்தன்ர்; பக்தியுடன் வள்ளுவரை வணங்கினர்.
*
சபை ஆரம்பித்தது. மன்னர் வள்ளுவரை நோக்கி, “வாழ்வியல் மர்மங்களை, அரிய இரகசியங்களைத் தெரிந்து கொள்ள வேண்டி இங்கே பல்லாயிரக் கணக்கானோர் கூடி உள்ளனர். அவர்கள் கேள்விகளோ எண்ணற்றவை. அவற்றில் தலையாய நூறு கேள்விகளைத் தேர்ந்தெடுத்துள்ளோம்.
தேர்ந்தெடுத்தவர்களிடமே அந்தக் கேள்விகளைக் கேட்கச் சொல்லி விட்டோம். ஆரம்பிக்கலாமா சபையை?
வள்ளுவர் சொற்களில் சிக்கனமானவர். அவர் வாயிலிருந்து வரும் தமிழெல்லாம் அமிர்தம். தலையை அசைத்தார்.
ஆங்காங்கு அமர்ந்திருந்த மக்களும் மேடையின் அருகிலே அமர்ந்திருந்து இடக்காகக் கேட்கும் புலவர்கள் உள்ளிட்டோரும் கற்றோரும் மற்றோரும் அமர்ந்திருக்க முதல் கேள்வியே அற்புத இரகசியத்திற்கான கேள்வியாக அமைந்தது.
சாமானியர் ஒருவர் எழுந்தார்: “வள்ளுவப் பிரானே! நீடு வாழ வேண்டும் என்பதே மக்கள் அனைவரது ஆசையும்! அதற்கு என்ன செய்ய வேண்டும்?
அனைவரும் ஆவலுடன் அவரைப் பார்க்க அவர் கூறினார்:
மலர்மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்
கூட்டம் ஆரவாரித்தது. மன்னன் தன் சிரம் வாழ்த்தி மதுரைச் சொக்கரையும் அன்னை மீனாட்சியையும் நினைந்து உருகினான்.மஹாராணியோ கண்ணீர் திவலை சொட்ட பிரார்த்தித்தாள்.
அடுத்த கேள்வி புயலென வந்தது.”வள்ளுவரே! எங்கும் துன்பம்; எனக்கு எப்போதும் துன்பம்; துன்பம் நீங்க வழி என்ன?”
வள்ளுவர் கூறினார்: “வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல”
ஒரு பிரமுகர் எழுந்தார் : ஐயனே! என்னிடம் இல்லாத செல்வம் இல்லை; இல்லாத ஆடை, அணி, ஆபரணங்கள், உணவு வகைகள், தோட்டங்கள், மணிகள், ரத்தினங்கள் இல்லை. ஆனால் என்னால் ஒரு பிடி உணவைக் கூட ஏற்க முடியவில்லையே! உடல் வியாதி வருத்துகிறதே! காரணம் என்ன?
வள்ளுவர் கூறினார் :
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது
அருகிலிருந்த புலவர்களில் ஒருவர் கர்மவினை பற்றி விளக்கி வள்ளுவரின் சொற்களின் ஆழத்தை விரித்து எடுத்துரைத்தார்.
மக்கள், தம் தம் வினைகளே எதற்கும் காரணமாக அமைவதை வள்ளுவர் எடுத்துரைத்த பாங்கினைக் கண்டு வியந்தனர்.
இன்னொருவர் எழுந்தார் :”ஐயனே! அவர் செல்வம் இருந்தும் உண்ண வகையின்றித் தவிப்பதை எடுத்துரைத்தார். இன்றும் நாளையும் எனக்கு உதவும் உணவுக்குப் பஞ்சமில்லாத ஒரு நல்ல துய்க்கும் சேமிப்பு உபாயத்தைச் சொல்லி அருள்வீர்களாக!
வள்ளுவர் அருளினார் : அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள் வைப்புழி.
புலவர்களில் ஒருவர் ஆஹா என்று கூவி வைப்புழி என்றால் பிற்காலத்தில் பலனைத் தரும் ஒரு சேமிப்பு உத்தரவாதம் என்று கூவி மகிழ்ந்தார்.
கூட்டத்தில் இருவர் ஒரே சமயத்தில் எழுந்தனர்:
“ஐயனே! இந்த உலகத்தில் வியக்கத் தகாதது ஏதாவது உண்டா?”
அதே சமயத்தில் இன்னொருவர், “ஐயனே! கூட இருந்தே குழி பறிக்கிறார்களே, அதைச் செய்யலாமா? என்றார்.
முதல்வரை நோக்கி வள்ளுவர் கூறினார்: வியவற்க எஞ்ஞான்றும் தன்னை
அடுத்தவரை நோக்கிக் கூறினார்: நயவற்க நன்றி பயவா வினை.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
வள்ளுவரின் சீரிய சொற்களுக்கு பண்டிதர்களும், புலவர்களும் பல்வேறு மேற்கொள்களைக் காட்டிப் பேசி மக்களுக்கு உத்வேகம் ஊட்டினர்.
மக்கள் மகிழ்ந்தனர்.
செய்தி நாடெங்கும் பரவ, எல்லா ஊர்களிலிருந்தும் மக்கள் திரள் மீனாட்சி அம்மன் திருவாலயத்தை நோக்கி வர ஆரம்பித்தது.
மறுநாள் தன் முயற்சி அனைத்தையும் கொண்டு படைவீரர்களை அழைத்து அனைத்து சிறப்பு ஏற்பாடுகளையும் செய்தான் பாண்டியன்; இதை மேற்பார்வை
பார்த்தவர் மஹாராணி.
அடுத்த நாள் சபை ஆரம்பித்தது!
– தொடரும்
இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள குறட் பாக்களின் எண்கள் 3,4,377,226,439,110
Tags– 100 கேள்விகள்
xxxx subham xxx