1001 அருமையான ஆங்கிலத் திரைப்படங்கள்! (Post No.5654)

WRITTEN BY S NAGARAJAN

Date: 12 November 2018

Time uploaded in London – 6-30 AM (GMT)

Post No. 5654

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

1001 அருமையான ஆங்கிலத் திரைப்படங்கள்!

ச.நாகராஜன்

இறப்பதற்கு முன் பார்க்க வேண்டிய 1001 ஆங்கிலத் திரைப்படங்களின் பட்டியலைத் தொகுத்துத் தருகிறது 1001 Movies You Must See Before You Die என்ற ஆங்கிலப் புத்தகம். இதைத் தொகுத்து வழங்கி இருப்பவர்  Steven Jay Schneider.

1900 ஆம்  ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டு வரை வந்திருக்கும் ஆங்கிலப் படங்களில் சிறந்தவற்றை இப்புத்தகம் வழங்குகிறது. இறப்பதற்கு முன் பார்க்க வேண்டிய படங்கள் இவை!

 இப்படி ஒரு நூலை யாராவது தொகுக்க மாட்டார்களா என ஏங்கி இருக்கும் பல்லாயிரக்கணக்கான திரைப்பட ஆர்வலர்களுக்கு வர பிரசாதம் இந்தப் புத்தகம்.

116 ஆண்டு ஆங்கிலத் திரைப்பட வரலாறு தொகுக்கப்பட்டது போன்ற ஒரு கலைக்களஞ்சியமாக இது அமைகிறது!

முதலில் தொகுக்கப்பட்ட பட்டியலில் 1300 படங்கள் இடம் பெற்றன. ஆனால் திருப்பித் திருப்பி ஆராய்ந்து யோசித்து 1001 படங்களைத் தெரிவு செய்துள்ளார் ஸ்டீவன் ஜே ஷ்னெய்டர்.

அனைத்துப் படங்களின் பெயர்களும் நூலின் ஆரம்பத்திலேயே அகர வரிசைப்படி தரப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக ஒரு படத்தைப் பார்க்கலாம். 1998 ஆம் ஆண்டு வெளியான ஒரு படம் டாம்  டய்க்வெரின் ‘ரன் லோலா ரன்’. (Tom Tykwer’s Run Lola Run).

20 நிமிடம் நடக்கும் ஒரு சம்பவம் மூன்று முறை எடுக்கப்பட்டிருக்கிறது.

 

ஒரு சில நிமிடங்களில் சூழ் நிலை எப்படி மாறும் என்பதைக் காட்ட மூன்று முறை சற்று நேரத்தை மாற்றிக் காண்பிக்கிறார் டைரக்டர். லோலாவுக்கு என்ன நேருகிறது? படத்தைப் பார்த்தால் தெரியும்; காலத்தின் அருமையும் புரியும்!

அடடா, என்ன மாற்றம்! அவசியம் பார்க்க வேண்டிய படம் இது.

சிசில் பி டெமிலியின் டென் கமாண்ட்மெண்ட்ஸ்

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ஜுராஸிக் பார்க்.

ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்கின் சைக்கோ!

இப்படி ஒவ்வொரு படமும் வெளி வந்த ஆண்டு, டைரக்டர், நடித்தவர்கள், கதை உள்ளிட்ட அனைத்தையும் சுமார் 150 முதல் 500 வார்த்தைகளில் ஒவ்வொரு கட்டுரையிலும் தருகிறார் நூலாசிரியர்.

22 விஷயங்களாகப் படங்கள் தொகுக்கப்பட்டு அதில் இடம் பெறும் படங்கள் இறுதியில் தரப்பட்டுள்ளது. இதில் இடம் பெறும் 22 விஷயங்கள் :

Action, Adventure, Animation, Avant-Garde, Comedy, Crime, Docu-drama, Documentary, Drama, Experimental, Family, Fantasy, Horror, Musical, Mystery, Noir, Romance, Sci-fi, Short, Thriller, War and Western.

இப்படங்களை இயக்கியுள்ள 596 பிரபலமான டைரக்டர்களின் பெயர்களும் டைரக்டர் இண்டெக்ஸில் தரப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போர் பற்றிய் படங்களா?

இதோ The Bridge on the river Kwai (1957), The Great Escape (1963), Gone with the Wind (1939).

படங்கள் அணி வகுக்கின்றன!

என்றாலும் கூட நாம் விரும்பும் அனைத்துப் படங்களும் இதில் காண முடியுமா என்றால், அது சந்தேகம் தான்.

எடுத்துக்காட்டாக உலகப் போர் சம்பந்தமாக நாம் விரும்பும், The Guns of Navarone, Force Ten from Navarone முதலியவை 1001 படங்களில் இடம் பெறவில்லை. அனைவரும் ரசித்துப் பார்த்த கொள்ளை அடிக்கும் சம்பவம் இடம் பெறும் The Italian Job போன்ற படங்கள் சிலவும் இதில் இல்லை.

ஆனால் ஒன்று, இப்படி ஒவ்வொருவரின் விருப்பத் தேர்வையும் இடம் பெறச் செய்ய வேண்டுமானால் தொகுப்பாளர் 10001 படங்கள் என்று தலைப்பை மாற்ற வேண்டியிருக்கும்! ஸயின்டிபிக் பிக்ஷன் படங்கள் பற்றியோ கேட்கவே வேண்டாம். அன்றாட வாழ்க்கை, காமெடி, த்ரில்லர் என அசத்துகிறது பட்டியல்!.

ஆர்ட் பேப்பரில் அச்சிடப்பட்டிருக்கும் புத்தகத்தில் ஏராளமான படங்கள் வேறு. மலரும் நினைவுகளைக் கொண்டு வரும் படி உள்ளது.

திரைப்படத் துறை 100 ஆண்டுகளுக்கு மேலாக வலுவுள்ள ஒரு பொழுதுபோக்குத் துறையாக ஆகி உள்ளது. ஏழை முதல் பணக்காரன் வரை, நாடு, மொழி, பால்,இனம், வயது பேதமின்றி குறைந்த செலவில் நிறைந்த மன நிறைவைத் தருவது நல்ல திரைப்படங்களே!

2012இல் எடுக்கப்பட்ட ஒரு கணக்கின் படி இதுவரை உலகில் 1,32,000 திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் அமெரிக்காவில் மட்டும் 44000 திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இது திரைத்துறையின் பிரம்மாண்டத்தைக் காண்பிக்கிறது!

ஆக இப்படி திரைப்படங்கள் பற்றிய ஒரு தொகுப்பு நூல் என்றால் அது திறம்பட தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். அதைச் சிறப்பாகச் செய்துள்ள ஸ்டீவன் ஜே ஷ்னெய்டர் பாராட்டுக்குரியவரே! இவர் திரைப்பட விமரிசனகர்த்தா. தயாரிப்பாளர். திரைப்படத் துறை பற்றி நன்கு அறிந்தவர். சினிமா கலை பற்றிப் பல நல்ல புத்தகங்களை எழுதியவரும் கூட.

இறப்பதற்கு முன் இந்த 1001 படங்களில் முடிந்தவற்றைப் பார்த்து முடிப்போம்!

****