
Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 10 November 2018
GMT Time uploaded in London –11-57 AM
Post No. 5647
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog
பர்த்ருஹரியின் நீதி சதகம் ஸ்லோகங்கள் 28,29,30
நீதி சதகத்தில் நூறு பாடல்கள் இருப்பதை அறிவோம். இதுவரை 27 பாடல்களை குறள் கீதை முதலிய நூல்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தோம். நமது அறிவு வேட்டையைத் தொடர்வோம்.
பாடல் 28
பரிவர்தினி ஸம்ஸாரம் ம்ருதஹ கோ வா ந ஜாயதே
ஸ ஜாதோ யேன ஜாதேன யாதி வம்சஹ ஸமுன்னதிம் -28
நிலையற்ற இந்த உலகத்தில் யார் பிறப்பு- இறப்புச் சுழலில் விழவில்லை? ஒருவனுடைய குடும்பத்தின் செல்வ வளத்தையும் பெருமையையும் அதிகரிக்கும் பிறப்பே சிறந்தது.
பிராணிகளும், தாவரங்களும் இறக்கின்றன, பிறக்கின்றன. ஆனால் மனிதனுக்கும் அவைகளுக்கும் வேறுபாடு இல்லாவிடில் மனிதர்களும் அவைகளுடன் எண்ணப்படும். ஆகையால் வளத்தையும் நல்ல பெயரையும் சம்பாதிக்கும் வாழ்வே வாழ்வு ஏனையவை மிருக வாழ்வு.
ஒருவனுடைய மகன் செய்யும் செயற்கரிய செயல்களைக் கண்டு, இவன் தந்தை என்ன தவம் செய்து இந்தப் பிள்ளையைப் பெற்றானோ என்று வியக்க வேண்டும் என்று வள்ளுவனும் சொல்வான்.
புகழோடு வாழும் வாழ்க்கையே வாழ்க்கை; அல்லது பிறக்காமல் இருப்பதே மேல் என்றும் வள்ளுவன் மொழிவான்.
அவன் செப்பிய குறள்கள் இதோ
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என்னோற்றான்கொல் எனுஞ்சொல் –குறள் 70
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று- 236
உத்திஷ்ட! யஸோ லப!! எழுந்திரு! புகழ் அடை!!
–என்று அர்ஜுனனுக்கு கிருஷ்ணனும் பகவத் கீதையில் கட்டளை இடுகிறான் (11-33)
இவை மேற்கூறிய பர்த்ருஹரியின் கருத்தை எதிரொலிக்கும்.
xxx

குஸுமஸ்தபகஸ்யேவ த்வயீ வ்ருத்திர் மனஸ்வினஹ
மூர்த்னிவா ஸர்வலோகஸ்ய சீர்யதே வன ஏவ வா –29
பூங்கொத்து இருக்கிறது; அது காட்டிலும் இருக்கலாம்; அல்லது பெண்களின் தலையிலும் இருக்கலாம் இதே போலத்தான் ஒவ்வொருவருக்கும் இரண்டு நிலைகள் இருக்கின்றன.
பூங்கொத்து, பெண்களின் தலையை அலங்கரிக்கையில் சிறப்பு பெறும்; அதே பூங்கொத்து காட்டில் மலர்ந்து, யாரும் பார்க்காமல் உதிர்ந்தும் போவதுண்டு. ஆக புகழ் பெறுவதும் புகழ் இல்லாமல் வாழ்வதும் நம் கையில் இருக்கிறது.
வள்ளுவன் இந்த உவமையை வேறு ஒரு இடத்தில் பயன்படுத்துகிறான்.
வாசனை இல்லாத கல்யாண முருங்கைப் பூ
வள்ளுவன் சொன்னான்:-
இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையாதார் – குறள் 650
தான் படித்த விஷயத்தை அழகாக விளக்கத் தெரியாதவர்கள், மலர்ந்தும் மணம் வீசாத மலர்களுக்கு ஒப்பாவர்
தமிழில் இதை விளக்கும் அழகான பழமொழிகளும் உள
குடத்திலிட்ட விளக்கு போல (காட்டுப் பூ)
குன்றிலிட்ட விளக்கு போல (பெண்களின் சிகை அலங்காரப் பூ)
இஃதே போல சம்ஸ்கிருத்தத்திலும் ஒரு பாடல் உண்டு
நல்ல குலத்தில் பிறந்து அழகாக, இளமையுடன் தோன்றினாலும், படிக்கா விட்டால், வாசனை இல்லாத கிம்சுக (கல்யாண முருங்கைப் பூ போலத்தான்) மலர் போலவே இருப்பர்.
ரூப யௌவன சம்பன்னா விசால குல சம்பவா:
வித்யாஹீனா ந சோபந்தே நிர்கந்தா இவ கிம்சுகா:
xxxx

சூரியனையும் சந்திரனையும் பாம்பு விழுங்குவது ஏன்?
செயற்கரிய செயல் செய்தால்தான் பெருமை; இதை பர்த்ருஹரி அழகாக விளக்குகிறார்
ஸந்த்யன்யேஅபி ப்ருஹஸ்பதி ப்ரப்ருதயஹ ஸம்பாவிதாஹா பஞ்சஷா
ஸ்தான்ப்ரத்யேஷ விஷேஷ விக்ரமருசீ ராஹுர்ந வைராயதே
த்வாவேவ க்ரஸதே திவாகர நிசா ப்ராணேஸ்வரௌ பாஷ்யவரௌ
ப்ராதஹ பர்வணி பஸ்ய தானவபதிஹி சீர்ஷாவசேஷா க்ருதிஹி-30
வானத்தில் குரு போன்ற கிரஹங்கள் பிரகாசிக்கின்றன. ஆனால் ராஹு அவைக ளை விழுங்குவதில்லை. கிரஹண காலத்தில் சூரியனையும் சந்திரனையும் அல்லவா ராஹு விழுங்குகிறான். இவ்வளவுக்கும் அவன் தலை மட்டும்தான் இருந்தது!
இந்துக்களுக்கு ராஹு கேது ஆகிய இரண்டும் சாயா (shadows) கிரஹங்கள் (நிழல்கள்) என்பது தெரிந்தும், பாமர மக்களுக்குப் புரியவைப்பதற்காகவும், கிரஹண காலத்தில் சில செயல்களைச் செய்யக்கூடாது என்று எச்சரிக்கவும் சூரியனையோ, சந்திரனையோ ராஹு அல்லது கேது விழுங்குவதாகச் சொல்லுவர். உண்மையில் கிரஹண காலத்தில் , சூரியனோ சந்திரனோ பாம்பின் வாயில் போய்விட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருவது போலவே தோன்றும். மேலும் அமிர்தத்தைத் திருட முயன்ற ராஹு என்னும் பாம்பை விஷ்ணு வெட்டியதால் தலை மட்டுமே எஞ்சியதாகப் புராணக் கதைகள் புகலும். இதில் பர்த்ருஹரி உவமையாகக் காட்டி சொல்ல விழைவது என்ன வென்றால்,
பெரிய செயல்களைச் செய்தால்தான் புகழ். நோஞ்சானை அடித்துப் போட்டுவிட்டு பயில்வான் என்று பெயர் வாங்குவதில் பொருள் இல்லை.
செத்த பாம்பை அடித்துவிட்டு வீரன் என்று சொல்வதிலும் பொருள் இல்லை. ஆக செயற்கரிய செயலைச் செய்க.
இதை வள்ளுவனும் ஒரு குறளில் விளம்புவான்:-
நிலவரைநீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு –குறள் 234
ஒருவன் பூவுலகத்தில் புகழ் மணக்கும் செயல்களைச் செய்வானாகில், தேவலோகத்தில் அவனுக்குத் தான் வரவேற்பு கிடைக்கும்; தேவர்களைப் போற்றமாட்டார்கள்.
परिवर्तिनि संसारे
मृतः को वा न जायते ।
स जातो येन जातेन
याति वंशः समुन्नतिम् ॥ 1.32 ॥
कुसुमस्तवकस्येव
द्वयी वृत्तिर्मनस्विनः ।
मूर्ध्नि वा सर्वलोकस्य
शीर्यते वन एव वा ॥ 1.33 ॥
सन्त्यन्येஉपि बृहस्पतिप्रभृतयः सम्भाविताः पञ्चषास्
तान्प्रत्येष विशेषविक्रमरुची राहुर्न वैरायते ।
द्वावेव ग्रसते दिवाकरनिशाप्राणेश्वरौ भास्करौ
भ्रातः पर्वणि पश्य दानवपतिः शीर्षावशेषाकृतिः ॥ 1.34 ॥
–subham–