Krishna Deva Rayar Drama
ஆராய்ச்சிக் கட்டுரையாளர் லண்டன் சுவாமினாதன்
ஆய்வுக் கட்டுரை எண் 1576; தேதி ஜனவரி 15, 2015
நம் எல்லோருக்கும் தெரிந்த மூன்று ராமன்களில் அதிக குழப்பம் இல்லை; எல்லோருக்கும் தெரிந்தவர்கள்:- பரசுராமன், பலராமன், உலகப் புகழ் பெற்ற உத்தமோத்தமன் தசரத ராமன். ஆனால் மூன்று கிருஷ்ணன்கள், நான்கு தசரதர்கள், இரண்டு ராவணன்கள், பல வியாசர்கள், ஆறு அவ்வையார்கள், நக்கீரர், கபிலர் போன்ற பெயர்களில் பிற்காலப் புலவர்கள் இருந்தது பலருக்கும் தெரியாது. இதனால் வரலாற்றில் பெரிய குழப்பம் ஏற்படுகிறது. இதைச் சுருக்கமாக ஆராய்வோம்.
நான் சிறிய பையனாக இருந்த போது பொங்கல் பற்றி ஒரு ‘’வியாசம்’’ எழுது என்றுதான் சொல்லுவார் வாத்தியார். அதாவது பொங்கல் பற்றி ஒரு கட்டுரை எழுது. இப்படிப் பல எழுத்து விஷயங்களை/ கட்டுரைகளை/ வியாசங்களை எல்லாம் தொகுத்து வைத்தவர் வேத வியாசர். ஆக வியாசர் என்றால் எழுத்தர், கட்டுரையாளர் என்று பொருள். இப்பொழுது ஆங்கிலத்தில் Essayist எஸ்ஸேயிஸ்ட், columnist காலம்னிஸ்ட் என்று சொல்லுவதற்குச் சமம்.
இந்திரன் என்பது பிரதமர், முதலமைச்சர், ராஜா போன்ற பதவியின் பெயராகவும், கடவுள் பெயராகவும், உண்மையில் ஆதிகாலத்தில் இருந்த ஒரு ஆளின் பெயராகவும் பல வகைகளில் வேத இதிஹாச புராணங்களில் எடுத்தாளப் படுகிறது. இது தெரியாத வெள்ளைக்காரர்கள் வேதங்களை மொழி பெயர்க்கிறேன் என்று புறப்பட்டு மஹா குழப்பம் உண்டாக்கிவிட்டனர்.
Gold Coin of Gupta Empire
புராணச் சொற்பொழிவாற்றூவோரும், காலப்போக்கில் ஞானம் குறையவே எல்லா ராவணன்கள், ராமர்கள், கிருஷ்ணர்களை ஒன்றாக்கி குழப்பம் விளைவித்தனர்.
அகத்தியர், விசுவாமித்திரர், வசிட்டர், பரத்வாஜர் முதலியன கோத்திரப் பெயர்கள் என்பது புரியாமல் ஒரே முனிவர் பல நூறு மன்னர்களுக்குச் சேவை செய்ததாகவும் பௌராணிகர்கள் கூறிவிட்டனர்.
இதை எல்லாம் புரிந்து கொள்ள பெரிய ஆராய்ச்சி அறிவு எதுவும் தேவை இல்லை. வசிட்டர் விசுவாமித்திரர் பற்றி வரும் கதைகளை எல்லாம் வரிசையாக எழுதி அவர்கள் எந்தெந்த மன்னர் காலத்தில் என்ன என்ன செய்தனர் என்று எழுதிப் பார்தால் நமக்கே தெரியும். அரிச்சந்திரன் கால விசுவாமித்திரர் வேறு, ராமர் கால விசுவாமித்திரர் வேறு என்று.
இது தவிர வெளி நாட்டு ‘அறிஞர்கள்’ வேறு ஒரு கோளாறும் செய்தனர். இந்தியாவில் அரசர் அற்ற (அராஜக) காலங்களும் இருந்தன. இது பற்றி ராமாயண, மஹா பாரத இதிகாசங்களில் பேசுவதில் இருந்தே இப்படி அராஜக காலம் ஒன்று இருந்தது தெரிகிறது. இதை யாரும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் ஒரு மன்னனுக்கு 20 ஆண்டு சராசரி கணக்குப் படி பார்த்தால் பொருத்தமாக இல்லையயே என்று அங்கலாய்த்தனர்.
கலியுகம் பற்றி இரண்டு கணக்குகளை ஆரியபட்டரும், கல்ஹணரும் சொல்லி குழப்பத்தை அதிகரித்தனர். கல்ஹணர் மகாபாரதப் போர் கி.மு 2448ல் நடந்ததாகச் சொல்லுவார். ஆனால் நாம் எல்லோரும் பஞ்சாங்கப்படி கலியுகமும் மகாபாரதப் போரும் கி.மு. 3101 ஐ ஒட்டி நடந்ததாக நம்புகிறோம்.
Veera Shivaji
தசரதர், கிருஷ்ணர், ராவணன் கணக்கு!
துருக்கி-சிரியா எல்லைப் பகுதியை ஆண்ட மன்னன் பெயர் தசரதன் என்று கி.மு1400 ஆம் ஆண்டு கல்வெட்டு கூறுகிறது.
இது தவிர இந்தியாவிலேயே
தசரத லோமபாத
தசரத நாபாகி
தசரத வைதர்ப
தசரத மௌர்ய (கி.மு237)
என்று நால்வர் ஆண்டனர். இதில் கடைசி தசரதனும், துருக்கியை அண்ட தசரதனும் வரலாற்று நாயகர்கள். மற்றவர்கள் இதிஹாச புராண நாயகர்கள்.
கார்த்தவீர்ய அர்ஜுனன் என்பவனுடன் சன்டையிட்ட ராவணனும் ராமனுடன் சண்டையிட்ட ராவணனும் வெவ்வேறானவர்கள்.
கிருஷ்ணர்களில் வசுதேவ கிருஷ்ணன் என்பவர் மகாபாரத கிருஷ்ணன். அவருக்கு முன் இரண்டு கிருஷ்ணர்கள் உண்டு.
மன்னரற்ற காலம்– இருண்ட காலம்
ராஜா இல்லாத நாடு இருள் சூழ்ந்த நாடு என்று வால்மீகி ராமாயணம் கூறும். இதே போல நாமும் ஒன்றுமே தெரியாத காலத்தை இருண்ட காலம் என்கிறோம். தமிழில் சங்க காலத்தைத் தொடர்ந்து வந்த களப்பிரர் காலத்தை இருண்ட காலம் என்போம். அரசரற்ற காலத்தில் ஒரு யானை —-மாலையுடன் சென்று யாராவது ஒருவருக்கு மாலை போடும் —- அவரை மன்னர் என்று அறிவிப்பர். மூர்த்தி நாயனார், கரிகாலன் போன்றொர் யானை மாலை போட்டதனால் மன்னர் ஆயினர்.
இப்படி இந்திய வரலாற்றில் மூன்று மன்னரற்ற காலங்கள் இருந்ததாக புராண கால வரலாற்றை எழுதிய டி.ஆர். மங்க்கட் கூறுகிறார்.
அவையாவன;
சிசுனாக (மஹானந்த) வம்சம் — நந்த வம்சம் இடையே- 350 ஆண்டுகள்
மௌர்ய- சுங்க வம்சங்கள் இடையே- 300 ஆண்டுகள்
சுங்க- கண்வ வம்சங்கள் இடையே- 120 ஆண்டுகள்
இது சரியானால் இதையும் கணக்கிற் கொண்டு பார்த்தால்தான் சரியான காலக் கணக்கீடு கிடைக்கும்.சராரியாக ஒரு மன்னருக்கு 20 ஆண்டு ஆட்சி என்பது வெளி நாட்டினரின் கணக்கு. இதன் படி 300 ஆண்டுகளில் 15 மன்னர் ஆண்டிருக்க வேண்டும். ஆனால் அராஜகம் — அரசன் இல்லாத — காலம் 300 ஆண்டுகள் இருந்தால் — 600 ஆண்டுகளுக்கு 15 மன்னர் என்னும் போது ஒரு மன்னனுக்கு 40 ஆண்டு சராசரி ஆட்சி வரும்!!
கலியுகம் 3101-653= கி.மு2448
ராஜ தரங்கினி என்ற நூலில் காஷ்மீர் வரலாற்றை எழுதிய கல்ஹணன் என்ற பிராமணர் ஒரு புதிய வெடி குண்டு போட்டார். கலியுகத்தை தவறாகக் கனக்கிட்டு விட்டதாகவும் மஹாபாரத மன்னர் ஜராசந்தனும் காஷ்மீர் மன்னன் கோனந்தனும் சமகாலத்தவர் என்றும் — ஆக மஹாபாரத யுத்தம் 2448 ஐ ஒட்டியே நடந்திருக்க முடியும் என்றும் ராஜ தரங்கிணியில் (முதல் தரங்கம் ஸ்லோகம் 48–51) கூறுகிறார்.
இது பற்றி எழுதும் மங்கட் இவ்வாறு கலியுகம் பற்றிய கருத்துக்கள் ஆரிய பட்டர் கலத்தில் இருந்து இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார். எது சரி என்பதை அறிய நீண்ட ஆராய்ச்சி தேவை.
10,000 மன்னர் பட்டியல்
இந்தியாவில் 10,000 க்கும் மேற்பட்ட அரசர்கள் ஆட்சி நடாத்தி இருக்க வேண்டும் — இவர்கள் எல்லார் பெயரையும் முதலில் தொகுக்க வேண்டும். இந்தப் பணியை எனது ஆய்வுப் பணியாக எடுத்துக் கொண்டு ஆஙிலத்தில் இதுவரை நாலு பகுதிகளில் 400 மன்னர் பெயர்களை வெளியிட்டுள்ளேன் . இன்று ஐந்தாவது பகுதியில் காஷ்மீர் மன்னர் பட்டியலை வெளியிடுகிறேன். 10,000 பெயர்களையும் தொகுத்து வெளியிட்டால் வரலாற்றுமாணவர்கள், ஆராய்ச்சியாளருக்கு பேருதவியாக இருக்கும்.
எனது ஆங்கிலக் கட்டுரைப் பகுதியில் மன்னர்கள், அவர்களது ஆட்சி ஆண்டுகளைக் காண்க.
contact swami_48@yahoo.com





You must be logged in to post a comment.