Post No.842 Dated 15th February 2014
சம்ஸ்கிருத செல்வம் — அத்தியாயம் 27
Compiled by S Nagarajan
சம்ஸ்கிருத செல்வம் — அத்தியாயம் 28
ஐந்து ‘ல’ கார மனைவியும் பெண்ணைப் பாதுகாக்கும் பொறுப்பும்!
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்வார்கள். Marriages are made in heaven என்ற ஆங்கிலப் பழமொழியும் உண்டு. மனைவி அமையும்போது குணவதியாகவும் அழகியாகவும் அமைந்து விட்டால் அந்த அதிர்ஷ்டத்தைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?
ஐந்து ‘ல’ கார பார்யாவைப் (மனைவி) பற்றி கவிஞர் அழகுறத் தொகுத்துக் கூறி அவளை அடைபவன் புண்யவசத்தினாலேயே அடைகிறான் என்கிறார்.
01) அநுகூலம் – புருஷனுக்கு அநுகூலமாக இருப்பவள் (காதல் ஒருவனைக் கைப்பிடித்து, அவன் காரியம் யாவினும் கை கொடுத்து என்றார் புதுமைப் பெண்ணைப் பற்றி பாரதியார்)
02) விமலாங்கி – கறை படாதவள் அல்லது குற்றம் இல்லாதவள்
03) குலஜா – நல்ல குடியில் பிறந்தவள்
04) குசலா – திறமை வாய்ந்தவள்
05) சுசீலா – நல்ல ஒழுக்கம் உடையவள்
இந்த ஐந்து லகாரம் அமையப் பெற்றவள் மனைவியாக வாய்த்தால் நிச்சயமாக அது இறைவன் கொடுத்த நல்ல வரம் தானே!
பாடலைப் பார்ப்போம்:-
அநுகூலாம் விமலாங்கீம் குலஜாம் குஷலாம் சுசீலசம்பன்னாம் I
பஞ்சலகாராம் பார்யா: புருஷ புண்யோதயால்லபதே II
அநுகூலாம் – அநுகூலமுடையவளாயும்
விமலாங்கீம் – கறைபடாதவளாயும்
குலஜாம் – நல்ல குலத்தில் பிறந்தவளாயும்
குஷலாம் – திறமை வாய்ந்தவளாயும்
சுசீலசம்பன்னாம் – சீலம் உடையவளாயும்
பஞ்சலகாராம் – ஆக இந்த ஐந்து ‘ல’காரம் உடைய
பார்யா: -மனைவி
புருஷ புண்யோதயால்லபதே – புருஷனின் புண்யத்தால் கிடைக்கப் பெறுகிறாள்.
பாரத நாட்டில் பெண்ணுக்குரிய மதிப்பே தனி. அவள் விலை மதிக்க முடியாத ரத்தினம் என்பதால் அவளுக்கு எப்போதுமே பாதுகாப்பு வேண்டும் என்பதை நமது அற நூல்கள் வலியுறுத்துகின்றன.
பிதா ரக்ஷதி கௌமாரே பர்தா ரக்ஷதி யௌவனே I
புத்ரஸ்து ஸ்தாவிரே பாவே ந ஸ்த்ரீ ஸ்வாதந்தர்யமார்ஹதி II
பிதா ரக்ஷதி கௌமாரே – இளமையில் தந்தை பாதுகாக்கிறார்
பர்தா ரக்ஷதி யௌவனே –யௌவனத்தில் (வாலிப பருவத்தில்) கணவன் பாதுகாக்கிறான்
புத்ரஸ்து ஸ்தாவிரே பாவே –வயதான காலத்தில் புத்திரர்கள் பாதுகாக்கின்றனர் (பாதுகாக்க வேண்டும்)
ந ஸ்த்ரீ ஸ்வாதந்தர்யமார்ஹதி – பெண் ஒரு போதும் அவள் வாழ்க்கையில் பாதுகாப்பற்று (சுதந்திரமாக) இருக்கக் கூடாது.
சுதந்திரமாக இருக்கக் கூடாது என்ற வார்த்தைக்கு அவள் விலை மதிப்பில்லா மாணிக்கம் என்பதால் எப்போதும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதே உண்மைப் பொருள்.
பெண்ணைப் போற்றி வணங்கும் நாடு நமது நாடு என்பதை உணர்ந்து மகிழ்வோம்!
Contact : swami _ 48@ yahoo. com
*********************
Pictures are used from different websites:thanks.


You must be logged in to post a comment.