
Written by S NAGARAJAN
Date: 16 September 2016
Time uploaded in London: 5-48 AM
Post No.3157
Pictures are taken from various sources; thanks.
ஒரு புதிய பென்சில்!
ச.நாகராஜன்

உத்வேகமூட்டும் சிறு கதைகளுக்கு வாழ்க்கையில் தனி இடம் ஒன்று உண்டு. இரண்டு கதைகளைப் பார்ப்போம்:
புதிய பென்சில்!
பென்சில் வியாபாரி ஒருவன் புதிய பென்சில் ஒன்றை பென்சில்களுக்கான பெட்டியில் வைக்கப் போனான். அந்த பென்சிலை ஒரு அன்புக்குரியவனாகப் பாவித்து அவன் பென்சிலுக்கு சில வார்த்தைகளைச் சொல்லத் தொடங்கினான்.
“இதோ பார், வெளி உலகிற்குச் செல்ல இருக்கிறாய். நீ தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஐந்து உண்டு. அவற்றைச் சொல்கிறேன். கவனமாகக் கேட்டுக் கொள். இதை நினைவில் வைத்து நடந்து கொண்டாயானால் நீ தான் மிகச் சிறந்த பென்சிலாக இருப்பாய்.
முதலாவது விஷயம், நீ மிகப் பெரும் காரியங்களைச் சாதிக்க முடியும், ஆனால் நீ இன்னொருவர் கையில் இருந்தால் தான் அது சாத்தியம், அதை மறக்காதே!
அடிக்கடி உன்னைக் கூர்மைப் படுத்தும் போது உனக்கு வலிக்கும். ஆனால் அதை நீ பொருட்படுத்தாதே. அது தான் உன்னைச் சிறந்த வேலையைச் செய்ய வைத்து சிறந்த பென்சிலாக உன்னை ஆக்கும்!
நீ உன்னால் ஏற்படும் தவறுகளை சரி செய்யவும் முடியும் என்பதை மறந்து விடாதே.
இன்னொன்று, உனக்கு உள்ளே இருப்பது தான் முக்கியம் அதை நினைவில் இருத்திக் கொள்.
நீ போகும் மேற்பரப்பின் மீது உனது அடையாளத்தை நன்கு விட்டுச் செல். உன்னைப் பயன்படுத்தும் எந்த பரப்பையும் உன் செயலினால் அழகு படுத்து. என்ன ஆனாலும் சரி, தொடர்ந்து எழுது!
இந்த ஐந்து விஷயங்களையும் புதிய பென்சில் கவனமாகக் கேட்டது. இதன் படியே நடப்பேன் என்று பென்சில் வியாபாரியிடம் உறுதி கூறியது. அதன் முழு மனதையும் இந்த விதிகளில் ஊற வைத்து அது நடந்தது. சிறந்த பென்சிலாக ஆனது!

உலகின் ஏழு அதிசயங்கள்!
வகுப்பறையில் ஆசிரியர் குழந்தைகளை நோக்கி ஒரு கேள்வியைக் கேட்டார். உலகின் சிறந்த அதிசயங்கள் ஏழு எவை? நீங்கள் உங்களுக்குள் விவாதித்தும் ஒரு முடிவுக்கு வரலாம். தனியாகவும் பதிலைச் சொல்லலாம்.
சில குழந்தைகள் விவாதித்தன. ஒரு முடிவுக்கு வந்தன. தங்கள் பட்டியலை அளித்தன இப்படி:
- எகிப்தில் உள்ள பிரமிடுகள்
- தாஜ்மஹல்
3) க்ராண்ட் கேன்யான்
4) பனாமா கால்வாய்
5) எம்பயர் ஸ்டேட் பில்டிங்
6) சீன நெடுஞ்சுவர்
7) பைசா கோபுரம்
இந்தப் பட்டியலால் மகிழ்ந்த ஆசிரியர் வகுப்பறையை நோக்கிய போது ஒரே ஒரு சிறுமி மட்டும் தனியாக எதையோ எழுதிக் கொண்டிருந்தாள்.
“என்ன, உனக்கென தனி லிஸ்ட் ஒன்று வைத்திருக்கிறாயா” என்று கேட்டார் ஆசிரியர்.
அந்தச் சிறுமி மௌனமாக வந்து தனது பட்டியலைத் தந்தாள்.
1) பார்க்க முடிவது
2) கேட்க முடிவது
3) தொட முடிவது
4) சுவைக்க முடிவது
5) உணர்ச்சிபூர்வமாக உணர முடிவது
6) சிரிக்க முடிவது
7) அன்பு செலுத்த முடிவது
இவை நமக்குக் கிடைத்திருக்கிறதே! இவற்றையே உலகின் ஏழு சிறந்த அதிசயங்களாக நான் கருதுகிறேன் என்றாள் அந்தச் சிறுமி.
வகுப்பே அமைதியானது.
மேலோட்டமாக மனிதனால் அமைக்கப்பட்டவற்றை சிறந்த அதிசயமாகக் கருதுதல் சரியில்லை.
இயற்கையாக அமைந்துள்ள இவையல்லவோ சிறந்த அதிசயங்கள்!
அனைவரும் அந்தச் சிறுமியைப் பாராட்டி அந்தப் பட்டியலையே ஏக மனதாக ஆதரித்தனர்!
**********
You must be logged in to post a comment.