மெதுவாக ருசித்து சாப்பிடுங்கள்: பால முரளி கிருஷ்ணா ‘அட்வைஸ்’ (Post No.3423)

Pictures are at London Sraddhanjali to Balamurali Krishna on 3-12-2016

Written by London swaminathan

 

Date: 6 December 2016

 

Time uploaded in London: 6-24 am

 

Post No.3423

 

 

Pictures are taken by ADITYA KAZA

 

contact; swami_48@yahoo.com

 

 

 

லண்டனில் இசை மேதை பாலமுரளி கிருஷ்ணாவின் மறைவை ஒட்டி நடந்த அஞ்சலிக் கூட்டத்தில் வெளியான சுவையான தகவல்களின் முதல் பகுதியை “கஷ்டம் வந்தால் கவிதை பிறக்கும்” — என்ற தலைப்பில் நேற்று வெளியிட்டேன். இதோ இரண்டாவது பகுதி:–

 

எனது (London Swaminathan) சொற்பொழிவின் தொடர்ச்சி:

 

“தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று (236)

 

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப்படும் (114)

 

குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள்

மழலைச் சொல் கேளாதவர் (66)

 

முதல் குறளின்படி பார்த்தால் அவர்தம் வாழ்க்கை புகழ்மிக்க வாழ்க்கை என்பது புலப்படும். பால முரளி கிருஷ்ணா 86 ஆண்டுகள் இந்த உலகில் வாழ்ந்தார். ஆறு வயதில் இசை கற்றார்; ஒன்பது வயதில் முதல் கச்சேரி செய்தார். ஏறத்தாழ 80 ஆண்டுக்காலம் இசைத்துறைக்கே தன் வாழ்வை அர்ப்பணித்தார். இதுபோல வேறு ஒருவரைக் காணமுடியாது. ஈடு இணையற்ற சாதனை இது.

 

இரண்டாவது குறளின்படி பார்த்தால் ஒருவர் பெரியவரா இல்லையா என்பது அவர் விட்டுச் சென்றதை (எச்சம்) வைத்தே ஒருவரை எடைபோட வேண்டும்.. பால முரளி கிருஷ்ணா பன்மொழி  வித்தகர். 400 கிருதிகளை இயற்றியுள்ளார். 25,000 கச்சேரிகளைச் செய்துள்ளார். அவை அனைத்தும் யூ ட்யூப், டேப்புகள், சி.டி.க்களில் கிடைக்கின்றன. இது பெரிய பொக்கிஷம். ஆக அவர் ஒரு பெரியவர் என்பதும் வெள்ளிடை மலை.

 

மூன்றாவது குறளை நான் சிறிது மாற்றிப் பாடுகிறேன்.

 

குழல் இனிது யாழ் இனிது என்பர் பாலமுரளி பாடல்களைக் கேளாதவர் — என்று. நான் இதைச் சொல்லவில்லை. ஒரு நாள் போதுமா பாடலில் கண்ணதாசனே பாலமுரளி பாடுவதற்கு எழுதிக் கொடுத்த வரிகள் இவை!!

குழலென்றும் யாழென்றும் சிலர் கூறுவார் – என்
குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார்

 

இனி டாக்டர் நந்தகுமாரா சொன்ன இன்னொரு சம்பவத்தையும் கேளுங்கள் (நேற்று மீன் போட்ட தயிரினால் எழுந்த கவிதை பற்றி அவர் கூறியதைக் கேட்டோம்); பாரதீய வித்யா பவன் நந்த குமாரா மேலும்  கூறியதாவது:

 

“டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா, லண்டனில் பாரதீயா வித்யா பவனில் கச்சேரிக்காகவும் சங்கீத ஒர்க்ஷாப் WORKSHOP புக்காகவும் பல நாட்கள் தங்கியதுண்டு. அப்பொழுது தினமும் சாப்பிட அழைப்பேன். நான் வேக மாகச் சாப்பிடும் பழக்கம் உடையவன். ஆகையால் வேகமாகச் சாப்பிட்டுவிட்டு அடுத்த கட்டிடத்திலுள்ள பவனின் அலுவலத்துக்குச் சென்று விடுவேன். பால முரளியோ கொஞ்சம்தான் சாப்பிடுவார். ஆனால் மிகவும் ருசித்து ரசித்து மெதுவாகச் சாப்பிடுவார். ஒரு நாள் என் மனைவியைப் பார்த்து பாலமுரளி சொன்னார்:

 

“ஜானகி, ஏன் இந்த நந்தா அவசரம் அவசராமாகச் சாப்பிட்டுவிட்டு ஓடுகிறான்? நாளைக்கு வரட்டும்; அவனை நான் சாப்பிட்டு முடியும் வரை உட்கார வைக்கிறேன்”.

மறு நாளும் வந்தது. “இன்று நான் சாப்பிட்டு முடியும் வரை நீ எழுந்துபோகக் கூடாது” என்று சொல்லிவிட்டார். நானும் பொறுமையாக உட்கார்ந்தேன். அப்பொழுது பாலமுரளி ஸார் சொன்னார்.

“இதோ பார் சாப்பாட்டை நன்கு ருசித்துச் சாப்பிட வேண்டும் அவசரம் அவசரமாக அள்ளிப்போட்டுக் கொண்டு ஓடக்கூடாது” என்றார்.

Violinist Mr Nagaraju is in the picture

 

(எனது கருத்து:- உண்மைதானே? அவரும் ராக ஆலாபனை எதுவும் இல்லாமல் அவசரம் அவசரமாகப் பாடிவிட்டு ஓடினால் நமக்கு எப்படி இருக்கும்? பால் மக்கன்னா Paul McKenna என்பவர் பெரிய ஹிப்னாடிஸ்ட். மனோவசிய நிபுணர். அவரது டெலிவிஷன் காட்சிகள் லண்டன் மக்களுக்கு நன்கு தெரிந்தவை. உடற்பருமனைக் குறைப்பதற்கு அவரும் இதே வழியைத்தான் சொன்னார். ஒரு கிரிஸ்ப் (உருளைக் கிழங்கு சிப்ஸ்) பாக்கெட்டை எடுத்தால் ஒவ்வொரு துண்டாக எடுத்து மெதுவாகச் சாப்பிட்டீர்களானால் அதுவே வயிறு நிறைந்தது போலக் காட்டும். திருப்தி ஏற்படும். அதில்லாமல் டெலிவிஷன் பார்த்துக்கொண்டே பொட்டலம்,பொட்டலமாக உள்ளே தள்ளினீர்கள் என்றால் கலோரிகள் கூடி உடல் பருக்கும் என்றார்.

 

இந்துக்கள் மிகவும் புத்திசாலிகள்.அந்தக் காலத்திலேயே இலையில் உட்கார்ந்தவுடன் அன்னத்தைப் போற்றித் துதிக்கும் மந்திரத்தைச் சொல்ல வேண்டும் என்ற வழக்கத்தை ஏற்படுத்தினர். அது மட்டுமல்ல. வேதத்திலேயே உணவைக் கடவுள் என்று போற்றும் மந்திரங்களும் உள.

சாப்பிட்டு முடித்த பின்னரும் “அன்ன தாதா சுகீ பவ” ( உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே; அவர்கள் சுகமாக வாழட்டும்! என்று வாழ்த்திவிட்டு இலையிலிருந்து எழுந்திருப்பர். அந்த உணவை அமிர்தத்துக்கு நிகரானது என்பர்.. இவை யெல்லாம் உணவின் மீது நமக்கு மதிப்பை ஏற்படுத்தும். உணவு பரிமாறும் மனைவி அல்லது அம்மாவைத் திட்டாமல் பாராட்டச் செய்யும்).

சுபம்–