நூலகத்தின் மாண்பு (Post No.3272)

 

dave-isay

Picture: Dave Isay and his book

Written by S. NAGARAJAN

Date: 21 October 2016

Time uploaded in London: 5-02 AM

Post No.3272

Pictures are taken from various sources; thanks

 

Contact :– swami_48@yahoo.com 

 

பாக்யா 21-10-2016 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

நூலகத்தின் மாண்பு

 

By ச.நாகராஜன்

இணைய தளத்தில் ஆயிரக்கணக்கான ப்ளாக்குகள் மற்றும் தளங்கள்! ‘Brain pickings.org’ – ‘ப்ரெய்ன் பிக்கிங்ஸ்.ஓஆர்ஜி என்ற தளத்தில் அருமையான புத்தகங்களைப் பற்றிய அரிய தகவல்கள் தரப்படுகிறது. சற்று வித்தியாசமான புத்தகங்கள்! அறிவுஜீவிகள் விரும்பக்கூடியவை. இணையதள இணணப்பு இருந்தால் வாராவாரம் உங்கள் இல்லம் தேடி வரும்.. சந்தா இலவசம். 2016, அக்டோபர் 6 தேதியிட்ட இதழில் வந்துள்ள புத்தகங்களில் ஒன்றே ஒன்றை (Callings : The Purpose and Passion of Work  என்ற நூல்) இங்கு பார்ப்போம்:

 

 

அமெரிக்காவின் பூர்வ குடிகளில் ஒரு எளிய விவசாயியின் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி தான் ஸ்டார்ம் ரேயஸ். வயலில் கடுமையாக இடையறாது உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். வாழ்வே அது தான்! தாயும் தகப்பனும் சாராயத்தில் திளைப்பவர்கள். வீட்டில் அடி, உதை, திட்டு, ஆவேசமான சண்டைகள்.. ரேயஸ் சைக்கிளை ஓட்டக் கற்றுக் கொள்ளும் முன்னரே கத்தியைக் கையில் பிடித்துக் கொண்டு சண்டை போடக் கற்றுக் கொண்டாள்.

 

purpose-passion-of-work

வயிறு பசித்தால் உணவு, வயல்வெளியில் வேலை, நடுநடுவே சண்டைகள்… இது தான் வாழ்க்கையா?!

 

அவளுக்கு பன்னிரெண்டு வயது ஆன போது புத்தகங்களைச் சுமந்து கொண்டு வரும் வேன் ஒன்று – புக் மொபைல் – அவள் இருக்குமிடம் வந்து ஒரு போர்வையையும் கொஞ்சம் உணவையும் தந்தது.

 

ரேயஸ் நைஸாக வேனுக்குள் எட்டிப் பார்த்தாள். புத்தகம், புத்தகம், புத்தகம்!

 

கனமான புத்தகத்தை எடுத்துச் செல்ல அவள் அனுமதிக்கப்பட்டதே இல்லை. தூக்கிச் செல்ல நிறைய இருக்கும் போது படிக்க புத்தகம் ஒரு கேடா?

 

ரேயஸ் மெதுவாக் விரக்தியுடன் நகர்ந்தாள். வேனில் இருந்த ஒருவர் அவளைக் கைதட்டி அழைத்தார்.

 

“இதோ, புத்தகங்கள். இதில் எது வேண்டுமானாலும் நீ எடுத்துக் கொண்டு போகலாம்”

 

ரேயஸுக்கு சந்தேகம். இதில் ஏதோ இருக்கிறது. சும்மா புத்தகத்தைத் தருவார்களா, என்ன!

 

“இதை எடுத்துக் கொண்டு போக நான் என்ன தர வேண்டும்?”

“ஒன்றும் தர வேண்டாம். பதினைந்து நாட்கள் கழித்து புத்தகத்தைப் பத்திரமாகத் திருப்பித் தர வேண்டும்.அவ்வளவு தான்”

 

 

ரேயஸால் நம்பமுடியவில்லை. அருகிலுள்ள மவுண்ட் ரெய்னர் என்ற எரிமலை வெடிக்கப் போகிறது என்று அடிக்கடி பேச்சு எழும்பும்.

 

ரேயஸ் கேட்டாள்: “எனக்கு எரிமலையைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆசை. புத்தகம் இருக்கிறதா?”

“ஓ, இதோ எரிமலையைப் பற்றிய புத்தகம். எந்த ஒரு விஷயத்தைப் பற்றி மிக நன்கு அறிந்து கொண்டாலும் பயம் போய்விடும், தெரியுமா” – புத்தகத்தைத் தந்தவர் சொன்னார்.

டைனோஸரைப் பற்றிய புத்தக்ம் ஒன்றையும் சேர்த்து எடுத்துக் கொண்டாள் ரேயஸ்.

 

அவளுக்குப் பதினைந்து வயது ஆன போது அவள் படித்த புத்தகங்கள் ஏராள்மாகி விட்டன.

 

தன் வயல்வெளி, வீடு தவிர அற்புதமான வெளி உலகம் ஒன்று இருக்கிறது என்பதை ரேயஸ் நன்கு உணர்ந்து கொண்டாள். பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் ரேயஸ் ஸ்டெனோகிராபர் டிகிரியும் வாங்கினாள்.  பியர்ஸ் கண்ட் லைபரரியில் ஒரு நூலகர் வேலை காலியாக இருக்கிறது என்று அவள் கேள்விப்பட்டாள். அதற்கு விண்ணப்பிக்க வேலை கிடைத்தது.

 

அடுத்த 32 ஆண்டுகள் நூலகத்தில் பணியாற்றிய ரேயஸ் ஆயிரக்கணக்கானோரைப் படிப்பதற்கு ஊக்கப்படுத்தினாள். அவர்களின் வாழ்வையே மாற்றினாள்.

 

ஆமாம், அவள் கண்டு கொண்ட புதிய உண்மை, நூலகம் வாழ்க்கையைக் காப்பாற்றுகிறது.

 

ரேயஸ் தன் அற்புதமான வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் அனிமேஷன் படம் ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது.

 

ஆம், Libraries Save Lives!!

 

–SUBHAM–