பாம்பு தலையில் பூமி! கம்பன், காளிதாசன் தரும் தகவல்(Post No.3330)

Picture: Ananda Padmanabha swamy in Trivandrum

Written by London Swaminathan

 

Date: 7  November 2016

 

Time uploaded in London: 20-17

 

Post No.3330

 

 

Pictures are taken from various sources.

 

Contact:- swami_48@yahoo.com

 

 

கம்பனும் காளிதாசனும் புராணத்தில் கணப்படும் ஒரு செய்தியை உவமையாகக் கூறுகின்றனர்.

 

தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் ஒரே கருத்துகள் இருப்பது இமயம் முதல் குமரி வரை ஒரே நாடு– ஒரே பண்பாடு என்ற கருத்தை ஆழமாக வலியுறுத்தி வருகிறது.

 

மேலும் காளிதாசனின் உலகப் புகழ் பெற்ற சாகுந்தலம் நாடகத்தில், ஒரு பாடலில், நாலே வரிகளில்  வரும் அவ்வளவு கருத்துகளும் தமிழ் இலக்கியத்தில் இருப்பது ஒரே நாடு– ஒரே பண்பாடு என்பதை அழகாய் விளக்குகிறது.

 

கம்ப ராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டத்தில் , கார்காலப் படலத்தில் வரும் ஒரு பாடல் இதோ:–

 

பையணப் பல் தலைப் பாந்தள் ஏந்திய

மொய்நிலத் தகளியில் முழங்கு நீர் நெயின்

வெய்யவன் விளக்கமா மேருப் பொன் திரி

மையெடுத்தது ஒத்தது மழைத்த வானமே

 

பொருள்:

 

கார்கால மேகத்தால் மூடுண்ட வானம் எப்படி இருந்தது தெரியுமா? ஆதி சேடனால் (பாம்பு) சுமக்கப்படும் பூமி அகல் விளக்கு ஆகும் , அதிலுள்ள கடல் நெய்; பூமியில் உயரமாக நீட்டிக் கொண்டிருக்கும் மேருமலை விளக்கின் திரி; கதிரவந்தான் விளக்கு சுவாலை . இந்த விளக்கின் விளிம்பில் படரும் மையை பெண்கள் எடுத்து கண்களில் பூசுவர். அந்தக் கரும்பகுதியை ஒத்திருந்தது வானத்திலுள்ள இருண்ட மேகம்.

 

இதில் நமக்கு வேண்டியது , பல்தலைப் பாந்தள் ஏந்திய மொய்நிலம், அதாவது பல தலைகளையுடைய  பாம்பின் தலையிலுள்ள பூமி!

 

இன்னொரு பாடலில் பூமியை எட்டு வகை நாகங்கள் தாங்குவவதாகக் கூறுகிறான் கம்பன். எண்வகை நாகங்கள் திசைகள் எட்டையும் – என்பான்.

 

காளிதாசன்

சாகுந்தல நாடகத்தில் காளிதாசன் சொல்லும் பாம்புச் செய்தி:–

 

பானு: சக்ருத் யுக்த துரங்க ஏவ

ராத்ரிம் திவம் கந்தவஹ: ப்ரயாதி

சேஷ: சதைவாஹித பூமி பார:

ஷடாம்ஸ வ்ருத்தேரபி தர்ம ஏஷ:

சாகுந்தலம் 5-4

 

பொருள் என்ன?

சூரியனின் தேரில் ஒரு முறை பூட்டப்பட்ட  குதிரைகளுக்கு ஓய்வே இல்லை; இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது.

 

இந்த பூமியில் வீசும் காற்றும் அப்படித்தான். இரவு பகலாக எல்லோருக்கும் நன்மை செய்யும் விதத்தில் வீசுகிறது

ஆதிசேடன் தலையில் சுமக்கும் பூபாரத்தை இன்றுவரை இறக்கி வைக்கவில்லை (கிரேக்கர்கள் அட்லஸ் என்பவன் தோளின் மேல் பூமி இருப்பதாகச் சொல்லுவர்.)

 

ஆறில் ஒரு பங்கு வரியைப் பெறும் அரசனுடைய அறமும் அப்படித்தான். அதாவது காற்று, சூறியன், குதிரைகள், ஆதி சேடன் எனும் பாம்பு போல ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் அரசனும் செயல்படுகிறான் என்பது காளிதாசன் கண்ட உவமை.

 

இந்தக் காளிதாசன் பாடலில் சொல்லும் பாம்புச் செய்தி க் கம்பன் பாடலில் மேலே தந்தேன்

மற்ற விஷயங்கள் அனைத்தும் சங்க இலக்கியத்தில் உள்ளன.

 

மக்கள சம்பாதிக்கும் பொருளில் ஆறில் ஒருபங்கு அரசனுக்குப் போய்விடும். இது சங்க இலக்கியத்திலும் மனு நீதி சாத்திரத்திலும் உள்ளது.

சூரியன் குதிரை விஷயமும் சங்க இலக்கியத்தில் உள்ளது

அரசனை சூரியன், வாயு பகவான் ஆகியோருடன் ஒப்பிடுவதும் தமிழ் சம்ஸ்கிருத இலக்கியத்தில் உள்ளது.

 

Atlas holding the earth in Greek Mythology.

இதையே ரகுவம்சத்திலும் 2-66; 17-65 கூறுகிறான்

சூரியன் எப்படி தண்ணீரை உறிஞ்சி மீண்டும் மழையாகத் தருவானோ அதே போல அரசனும் அள்வோடு வரிகள எடுத்துக் கொள்வது மீண்டு மக்களுக்குத் திருப்பித் தரத்தான் என்று காளிதாசன் கூறுகிறான் (ரகு 1-18)

சங்க இலக்கியத்தில் பட்டினப்பாலையில் உருத்திரங்கண்ணனார் சொல்லுவார் (வரிகள் 121-125). அளவோடு வரி விதித்தல் பற்றிப் பிசிராந்தையாரும் (புறம் 184) பேசுகிறார்.

 

சூரியன் குதிரை சவாரி பற்றி கபிலர் (குறிஞ்சிப் பாட்டு). உருத்திரங்கண்ணனார் (பட்டினப்பாலை 122/123) நக்கீரர் (திருமுருகு.107), இளங்கோ (சில. வேட்டுவவரி), தாமப்பல் கண்ணனார் (புறம் 43)  குறிப்பிடுவர்.

ஆதிசேடன் பற்றிய குறிப்புகள் பரிபாடலில் பல இடங்களில் வருகின்றன. ஆதிசேடன் பூமியைத் தாங்குவதைப் பரிபாடல் திரட்டு சொல்லுகிறது.

 

சூரியன் ஓராழித் தேரில் பவனி வருவதை அகம் 360–ல் காணலாம்.

 

 

என்னே ஒற்றுமை!!

செப்பு மொழி பதினெட்டுடையாள் எனின சிந்தனை ஒன்றுடையாள்

என்று பாரத தேவி பற்றி பாரதி சொன்னது பொய்யாகப் போகுமா?

 

–SUBHAM–