புத்திசாலிப் பெண்களின் சைகை மொழிகள்!

eye1

Article wriiten by London swaminathan

Research Article No 1554; Posted on 7th January 2015

கண்களால் பேசுவர் பெண்கள்!   “அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்” என்ற கம்ப ராமாயணக் காட்சியை நாம் அறிவோம். காதா சப்த சதி என்னும் பிராக்ருத மொழி நூலில் 700 காதல் கவிதைகள் உள. நிறைய விரசமான கவிதைகள் இருப்பதால் அது புகழ் பெறவில்லை. ஆயினும் சில கவிதைகளை கருத்து நயத்துக்காகவும் வேறு சில கவிதைகளை கவி நயத்துக்காகவும் படிக்க வேண்டும். ஒரு காட்சியை மட்டும் காண்போம்.

கோதாவரி வரிக் கரையில் ஒரு வீடு. அங்கே ஒரு அழகி. அவளுடைய கணவன் வெளியே வேலைக்குப் போய்விட்டான். வாலிப வயதுடைய தம்பி மட்டும் வீட்டில் இருக்கிறான். அண்ணனும் வேறு யாரும் வீட்டில் இல்லையே என்று எண்ணீ , அண்ணியைக் கணக்குப்போடுகிறான்.

அந்தப் பெண்ணுக்கோ சொல்லவும் முடியவில்லை, மெல்லவும் முடியவில்லை. அவன் அருகே வருவதற்கு முன்பாகவே கண்கள் மூலமாக அவனைச் சுவற்றில் உள்ள ஒரு ஓவியத்துக்கு அழைத்துச் செல்கிறாள். அவனுக்கு அர்த்தம் புரிந்துவிட்டது வெட்கித் தலை குனிகிறான். அது என்ன ஓவியம்?

ராம லெட்சுமணர்கள் சீதா தேவியுடன் இருக்கும் அற்புதமான ஓவியம் அந்த வீட்டுச் சுவரை அலங்கரிக்கிறது. அதில் லெட்சுமணன் சீதையைப் பார்க்காது நிலத்தை நோக்கிய வண்ணம் பார்த்துப் பணிவுடன் நிற்கிறான். இராமபிரான் சீதையைத் திருமணம் செய்த நாளில் இருந்து அவள் காலில் உள்ள மெட்டியைத் தவிர வெறும் எதையும் காணாத நித்திய பிரம்மச் சாரி அவன்.

 

இந்த ஓவியத்தைக் கண்களால் காட்டிய அந்த உத்தமி என் கணவன் ராமன்,  நீ லெட்சுமணன் போன்ற பெருந்தகை, நான் கற்பில் வழுவாத சீதை என்பதைச் சொல்லாமல் சொல்லிவிடுகிறாள்.

எவ்வளவு அருமையான கவிதை. பாரதீயப் பண்பாட்டை காதா என்னும் இரண்டு வரிச் செய்யுள் மூலம் கவிஞன் பாடிவிட்டான்.

gss4

இந்தக் கவிதை சொல்லும் வேறு சில செய்திகளும் உண்டு. அந்தக் காலத்தில் வீடுகளில் கூட ஓவியங்க்கள் இருந்தன. அவை தெய்வீக ஓவியங்கள். தென்னாட்டில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே ராமாயணம் வீடுதோறும் முழங்கியது — என்ற செய்திகளையும் அறிகிறோம்.

சங்க கால பாடல்களிலும் சுவரில் உறையும் தெய்வங்கள் பற்றிய குறிப்புகள் உள. எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான பரிபாடலில் (19-59) திருப்பறங்குன்ற ஓவியங்கள் பற்றிய ஒரு காட்சி வருகிறது கணவன் மனைவி எல்லோரும் பறஙகுன்ற கோவிலில் உள்ள ஓவியங்களைப் பார்க்கின்றனர்.

 

மநைவி ஒரு ஓவியத்தைப் பார்த்து அதோ ஒரு பூசை (பூனை) என்கிறாள். அது என்ன? முனிவர் இருக்கும் இடத்தில் பூனை? என்று வினவுகிறாள். அவன் சொல்கிறான், அடியே! உனக்குக் கதை தெரியாதா? அஹல்யையை மானபங்கப்படுத்திய இந்திரன் நைசாக பூனை உருவத்தி ல் நழுவுகிறான். அவர்தான் கௌதம முனிவர் என்று கதை சொல்கிறான். ஆக அந்தக் காலத்தில் —- 2000 ஆண்டுகளுக்கு முன்னர் — தமிழ் நாட்டுக் கோவிலகளில் புராண ஓவியங்கள் இருந்ததையும் அக்தைகளை மக்கள் நன்கு அறிந்திருந்தனர் என்றும் அறிகிறோம்.

 

காதா சப்த சதி,  சங்க இலக்கியம் போலவே அந்தக் கால சமுதாய சூழ் நிலையை நமக்கு எடுத்தியம்புகிறது.

eye2