
Written by S NAGARAJAN
Date: 17 JUNE 2018
Time uploaded in London – 7-21 am (British Summer Time)
Post No. 5119
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
Dear God, I have a problem!
S.Nagarajan
1
Dear God, I have a problem என்று மனம் நொந்து எழுதிய அன்பர் ஒருவர் அடுத்த வரியையும் எழுதினார்.
It is Me!
Dear God, I have a problem.
It is Me!
எவ்வளவு உண்மை.
நமது பிரச்சினைகள் எல்லாம் எங்கிருந்தோ வருவதில்லை.
நம்மிடமிருந்தே தான் உருவாகின்றன.
நமது பிரச்சினைகளுக்குத் தீர்வை வெளியில் எங்கும் காண முடியாது; காணத் தேவையில்லை.
சாதாரண காசு சம்பாதிக்கும் பிரச்சினையிலிருந்து நான் ஏன் பிறந்தேன், பிரபஞ்சத்தில் நான் யார் என்ற பெரிய கேள்வி வரை விடை நம்மிடமே தான் இருக்கிறது! இப்படி நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.
கண்ணபிரான் கீதையில்
உத்தரேத் ஆத்மனாத்மானம்
நாத்மானம் அவஸாதயேத்
ஆத்மைவ ஹ்யாத்மனோ
பந்துர் ஆத்மைவ ரிபுர் ஆத்மன: (பகவத் கீதை 6-5)
என்று கூறுகிறார்.
தன்னைத் தானே (ஆத்மாவை) உயர்த்திக் கொள்ள வேண்டும்.
தனக்குத் தானே நண்பன்.
தனக்குத் தானே எதிரி என்பது கண்ணபிரானின் அருள் வா.

2
நாலடியாரில் வரும் ஒரு பாடலும் இதை அருமையாக விளக்குகிறது:
நன்னிலைக் கண்தன்னை நிறுப்பானும் தன்னை
நிலைகலக்கிக் கீழிடுவானும் – நிலையிலும்
மேன்மேலுயர்ந்து நிறுப்பானும் தன்னை
தலையாகச் செய்வானும் தான்
இதன் பொருள் : நல்ல நிலையிலே தன்னை நிறுத்துபவனும், தான் நின்ற நிலையிலிருந்து கலங்கச் செய்து தன்னைக் கீழ்ப்பட்ட நிலையில் சேர்க்கின்றவனும் தான் நின்ற நிலையை விட மிக மேலான நிலையில் நிறகச் செய்பவனும் தன்னை மற்றவர்களிலிருந்து முதன்மையாகச் செய்பவனும் தானேயாவான்.
3
திருமூலர் அருளிய திருமந்திரத்தில் வரும் ஒரு பாடல் இது:
தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானேதான்ச் செய்த வினைப்பயன் துய்த்தலால்
தானே தனக்குக் கரி
இதன் பொருள் : தனக்குத் துன்பம் செய்யும் பகைவனும் இன்பம் செய்யும் நண்பனும் தானேயாவான்.பிறர் அல்ல. தனக்கு மறுமை இன்பத்தை இம்மை இன்பத்தைச் செய்து கொள்பவனும் தானே தான். தான் செய்த வினைகளின் பயனாக இன்ப துன்பங்களைத் தானே அனுபவித்தலால் தான் செய்த வினைகளுக்குச் சான்றாக இருப்பவனும் தானே ஆவான்.

4
யோக வாசிஷ்டமும் இதே கருத்தைத் தான் கூறுகிறது.
ஆக
Dear God, I have a problem.
It is Me!
என்று சொல்லும் போது பிரச்சினையை முதலில் இனம் கண்ட நபரைப் பாராட்ட வேண்டும்.
பின்னர் அவர் தன் பிரச்சினையைப் போக்க தன் வழியே முயன்றால் அவர் கூறுவது இப்படி மாறும் :
Dear God, I have a valuable possession
It is Me!
இப்படி அவர் கூறும் போது அவர் தன்னை நிலைப்படுத்திக் கொண்டார் என்பதை உணர்வோம்.
உன்னையே நீ அறிவாய் என்று சாக்ரடீஸ் கூறினார்.
நான் யார்? Who am I? என்று விசாரம் செய்யச் சொன்னார் மஹரிஷி ரமணர்.
விசாரம் மூலம் சாரமான விஷயத்தை அறியலாம் என்பது சத்தியம். மஹரிஷிகள் சென்ற பாதை இது தான்; அவர்கள் நம்மைச் செல்லத் தூண்டும் பாதையும் இது தான்!
Dear God, I have a problem.
It is Me!
என்று கூறுகின்ற அன்பருக்கு இறுதியாக ஒரு வார்த்தை.
If God brings you to it,
He will bring you through it.
***