
Written by S. NAGARAJAN
Date: 20 October 2016
Time uploaded in London: 5-22 AM
Post No.3269
Pictures are taken from various sources; thanks
Contact :– swami_48@yahoo.com
பாக்யா 14-10-2016 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் 297வது அத்தியாயமாக பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரை
இந்த ஆண்டு இக்நோபல் பரிசு பெற்ற மேதைகள்! – 1
“2016ஆம் ஆண்டிற்கான இக்நோபல் பரிசுகள் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி வியாழனன்று 26ஆம் ஃபர்ஸ்ட் ஆன்யுவல் இக்நோபல் செர்மனியில் (26th first annual Ignobel ceremony) வழங்கப்பட்டன”
- செய்திக் குறிப்பு
இந்த ஆண்டின் இக்நோபல் பரிசு பெற்றோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு விட்டன! மனிதர்களைச் சிரிக்க வைத்துச் சிந்திக்கத் தூண்டும் அபூர்வமான ‘கண்டுபிடிப்புகளுக்காக’ பல்வேறு துறைகளைச் சேர்ந்தோருக்குக் கொடுக்கப்படும் பரிசு தான் இக்நோபல் பரிசு. 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பெயர்கள் யாரையும் ஏமாற்றவில்லை. அருமையான கண்டுபிடிப்புகளுக்காகவே அவர்கள் இந்த இக்நோபல் பரிசைப் பெறுகின்றனர். (இக்நோபல் பரிசு பற்றி இந்தத் தொடரில் பாக்யா 1-7-2016 இதழில் விளக்கப்பட்டுள்ளதை நினைவு கூரலாம்)
எலிகளுக்கு டிரவுஸரை மாட்டியவர்!
அஹ்மத் ஷஃபீக் (Ahmed Shafik) வாபாலிஸ்டர் பேண்டுகளை எலிகளுக்கு அணிவித்த செயலுக்காக இந்தப் பரிசைப் பெறுகிறார். காலம் சென்ற அஹ்மத் எகிபதைச் சேர்ந்தவர். பாலிஸ்டர் பற்றிய ஆராய்ச்சியை அவர் மேற்கொண்டிருந்தார். பாலிஸ்டரை அணிந்தால் எலிகளின் மீது அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதைக் கண்டறிய முனைந்த அவர் எலிகளுக்கு பேண்டை உரிய முறையில் தைத்து மாட்டி விட்டார். மனிதர்கள் தான் பேண்ட் அணிய வேண்டுமா என்ன?
பருத்தி, பாலிஸ்டர், உல்லன் வகையிலான ஆடைகள் ஏற்படுத்தும் விளைவுகளை இதன் மூலம் கண்டுபிடிப்பதே அவரது ஆய்வின் நோக்கம். இதனால் எலிகளின் செக்ஸ் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதையும் அவர் ஆய்வு செய்தார். பின்னர் மனிதர்களுக்கு இந்த பாலிஸ்டர், பருத்தி, உல்லன் டிரவுஸர்களை அணிவித்து அவர்களின் மீதான விளைவையும் அறிந்தார். தனது ஆய்வு முடிவுகளை அவர் இரண்டு ஆய்வுக் கட்டுரைகளாக சமர்ப்பித்தார். முதல் கட்டுரை 1993ஆம் ஆண்டு யூரோப்பியன் யூராலஜி (European Urology) என்ற இதழில் பிரசுரிக்கப்பட்டது. இரண்டாம் கட்டுரை காண்ட்ராஸெப்ஷன் (Contraception) என்ற இதழில் 1992ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்டது.
இவருக்குப் பரிசு அளித்தது நியாயம் தானே!
கறுப்பு கல்லறைகளும் ராட்ஸச ஈக்களும்!
அடுத்த பரிசை அள்ளிச் செல்பவர்கள் செய்த ஆராய்ச்சி கறுப்பு கல்லறைகளும் ராட்ஸச ஈக்களும் பற்றிய் ஆய்வாகும்.
ஹங்கேரி, ஸ்பெய்ன்,ஸ்வீடன் மற்றும் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ஒன்பது விஞ்ஞானிகள் இயற்பியலில் கண்டுபிடித்த இரண்டு ‘கண்டுபிடிப்புகளுக்காக’ இந்தப் பரிசைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
இவர்களது ஆராய்ச்சி தான் என்ன?
வெள்ளை மயிரை உடைய குதிரைகள் மட்டும் ஏன் குதிரைகள் மீது மொய்க்கும் ஈக்களை அண்ட விடாமல் செய்கின்றன? இது ஒரு ஆராய்ச்சி. அடுத்தது கறுப்புக் கல்லறை நினைவுக்கற்களின் (tombstone) மீது மட்டும் ஏன் ராட்சஸ ஈக்கள் வருகின்றன. அப்படி என்ன கவர்ச்சியை கறுப்புக் கல்லறை நினைவுக்கற்கள் கொண்டுள்ளன? சுற்றுப்புறச் சூழலுக்கு கேடு விளைவிப்பது பற்றிய இந்த ஆராய்ச்சி இரண்டாவது ஆராய்ச்சியாகும்!
ஹங்கேரிய இடுகாடு ஒன்றில் ஐந்து வகையான ராட்ஸச ஈக்கள் பாலிஷ் செய்யப்பட்ட கல்லறை நினைவுக்கற்களின் மீது வந்து அமர்ந்தன். இவற்றின் நடவடிக்கைகள் நீரில் இவை என்ன செய்யுமோ அது போலவே அமைந்திருந்தன. இந்தக் கண்டுபிடிப்பை ஃப்ரெஷ் வாட்டர் பயாலஜி (Fresh water Biology) என்ற இதழில் 2002ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த ஈக்களுக்காக விசேஷமாக ஒரு உயர் தடுப்பு ஒன்றையும் அவர்கள் ஏற்படுத்தி ஆராய்ந்தனர். இவர்கள் கண்டுபிடித்தது அதிசயமான ஒரு உண்மையை! கல்லறை நினைவுக்கற்கள் கிடைமட்டமாகவும் அதிகமாகவும் வரும் வெளிச்சத்தை நீர் பரப்பு எப்படி சிதற விடுகிற்தோ அதே போல சிதற விடுகின்றன! ராட்ஸச் ஈக்கள் தங்களுக்குத் தேவையான ‘கன்னிகளை’ நீர்ப்பரப்பில் தேர்ந்தெடுத்து அங்கு உறவு கொண்டு விடும். பெண் ஈக்கள் நீர்ப் பரப்பின் ஓரத்தில் முட்டையிடுவது வழக்கம். ஆனால் இது போன்று கல்லறை நினவுக்கற்களில் செய்ய முடியாது என்பது ஒரு நெகடிவ் அம்சம்! இதையும் ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.
அடுத்து பொருளாதாரத்திற்கான இக்நோபல் பரிசு யாருக்கு அளிக்கப்பட்டது என்பதைப் பார்ப்போம்.

கற்களால் ஆனவர்களின் பர்ஸனாலிடி!
மார்க் அவிஸ், சாரா ஃபோர்பஸ் மற்றும், ஷெலாக் ஃபெர்கூஸன் (Mark Avis, Sarah Forbes and Shelagh Frguson) ஆகிய ஆய்வாளர்கள் கற்களால் ஆனவர்களின் ஆளுமையை விற்பனை மற்றும் மார்கெடிங் (சந்தைப்படுத்தல்) நோக்கில் மதிப்பீடு செய்ததற்காக இந்தப் பரிசு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகளை 2014ஆம் ஆண்டில் மார்கெடிங் தியரி (Marketing Theory) என்ற இதழில் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். இதற்காக ஒரு அளவை மதிப்பீடு உண்டு. அதன் பெயர் ஜென்னிஃபர் ஆக்கரின் “ப்ராண்ட் பர்ஸனாலிடி” ஸ்கேல் (Jennifer Aaker’s Brand Personality Scale) என்பதாகும். ஒருவரின் ஆளுமையை – பர்ஸனாலிடியை- மதிப்பீடு செய்வது எப்படி? ஒருவரின் ஆளுமையானது அவரது தனிப்பட்ட பண்புகளுடன் நேர்மை, உற்சாகம், திறன், நவீனத்துவம், மற்றும் திடம் ஆகிய ஐந்து பண்புகளையும் இணைத்துப் பார்த்து அதன் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகிறது. ஆய்வாளர்கள் கற்களைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் – எந்த ஒரு ‘பிராண்டையும்” கற்கள் கொண்டிருக்காது என்பதாலும், கற்களிடம் ப்ராண்ட் பர்ஸனாலிடி பற்றிய முந்தைய குறிப்புகள் எதுவும் இல்லை என்பதாலும் கற்களைத் தேர்ந்தெடுத்தனராம்!
ஆய்வின் முடிவில் கற்கள் ஒவ்வொன்றும் ஒரு தனி ஆளுமையைக் கொண்டிருப்பதாகவும் ஒவ்வொன்றும் ஒரு தனிப்பட்ட ப்ராண்ட் பர்ஸனாலிடி அளவைக் கொண்டிருப்பதாகவும் கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாக் ஆய்வாளர்கள் கூறினர். அவை நுணுக்கமான விவரங்களைத் தருவதாகவும் ஆய்வு கூறுவது சுவையான அம்சம்!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
இள வயது மேதையான வில்லியம் லாரன்ஸ் ப்ராக் (William Lawrence Bragg 1890-1971) இருபத்தைந்தாவது வயதிலேயே நோபல் பரிசைப் பெற்றவர். அவருக்குத் தோட்டத்தில் வேலை செய்வது என்றால் மிகவும் பிடிக்கும். ராயல் இன்ஸ்டிடியூஷனுக்குத் த்லைமைப் பொறுப்பை ஏற்க அவர் லண்டனுக்குச் செல்ல வேண்டியதாயிற்று. தான் பராமரித்து வந்த தனது அழகிய கேம்பிரிட்ஜ் தோட்டத்தை விட்டுச் செல்ல அவருக்கு மனமே வரவில்லை. மிகவும் ஈடுபாட்டான உழைப்புடன் நன்கு அந்தத் தோட்டத்தை அவர் வளர்த்திருந்தார்
லண்டனில் பரபரப்பான நகர சூழ்நிலையில் அவ்ர் அமைதியின்றி இருந்தார். இதற்கு என்ன செய்வது? யோசித்தார்.
ஒரு நாள் தோட்டக்காரன் அணியும் ஆடையை அணிந்து கொண்டு மண்வெட்டியைத் தோளில் போட்டுக் கொண்டு அருகிலிருந்த வீதிகளில் அலைய ஆரம்பித்தார். .ஒரு தெருவில் இருந்த அழகிய தோட்டம் அவர் கண்ணைக் கவர்ந்தது. அதை சுவாரசியமாகப் பார்த்தவாறே நின்றிருந்தார். பிறகு காலிங் பெல்லை அமுக்கினார். அந்த வீட்டுக்காரப் பெண்மணி வெளியே வந்தார்.
அவரிடம் தன்னை வில்லி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு தனக்கு வாராவாரம் ஒரு நாள் தோட்ட வேலை செய்வதற்கு நேரம் இருப்பதாகவும் தோட்டவேலை ஏதேனும் இருந்தால் தருமாறும் பணிவுடன் வேண்டினார்.
அந்தப் பெண்மணிக்கு ஒரே ஆனந்தம். வில்லியின் வேலை அவருக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. அவரைக் கடவுள் அனுப்பி வைத்த பொக்கிஷமாகக் கருத ஆரம்பித்தார். சில வாரங்கள் இப்படி ஓடின.
ஒரு நாள் அந்த வீட்டிற்கு வந்த விருந்தினர் தற்செயலாக ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார். அங்கு தோட்ட வேலை செய்து கொண்டிருப்பது யார்?
அவருக்கு விக்கித்துப் போய் விட்டது.
“ஐயையோ! அங்கு வேலை செய்து கொண்டிருப்பது யார் தெரியுமா! பிரபல மேதை சர் லாரன்ஸ் ப்ராக். அவர் ஏன் இங்கு வேலை செய்ய வேண்டும்” என்று அவர் அலறினார்.
அந்த அம்மையாருக்கு அப்போது தான் தன் ‘தோட்டக்காரன்’ உண்மையில் மாபெரும் மேதை என்பது தெரிந்தது!
விஞ்ஞானிக்கும் சில விசேஷ ஆசைகள் உண்டு!
*********
You must be logged in to post a comment.