
Written by London swaminathan
Date: 23 August 2018
Time uploaded in London – 6-36 am (British Summer Time)
Post No. 5354
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
ஸ்பெயின் நாட்டில் புனோல் (Bunol in Spain) என்ற ஒரு நகரம் உள்ளது ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் கடைசி புதன் கிழமை தக்காளித் திருவிழா (La Tomatina) நடைபெறும்; இதைத் தக்காளிச் சட்னி திருவிழா என்று அழைப்பதே சாலப் பொருத்தம். இந்த ‘பிளாக்’ (BLOG)கில் ஸ்பெயின் நாட்டுத் திருவிழா பற்றி எழுதுவானேன் என்று சிலர் நினைக்கலாம்.
பிள்ளையார் சிலை செய்தால் குற்றம்; கரைத்தால் குற்றம்; துர்கை சிலை செய்தால் குற்றம். பட்டாசு வெடித்தால் குற்றம்; வாங்கினால் குற்றம்— இப்படி பலர்— அறிவு ஜீவிகள்– வாய்ச் சொல் வீரர்கள்– பேசுவதும் போதாக்குறைக்கு சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் (case) போட்டும் வீரர் போலக் காட்சி தருவதையும் காண்கிறோம்.

கோவிலில் பாலாபிஷேகம் செய்தால் அதை ‘வீண்’ ,வேஸ்ட், (waste) என்பர். விளக்கு ஏற்றினால் அது புகை (pollution) ‘பொல்லூஷன்’ என்பர். ஆனால் ஆடுகளையும் ஒட்டகங்களையும் ஒரே நாளில் லட்சக் கணக்கில் உலகெங்கும் வெட்டுவதைக் கேட்கவோ, கண்டு கொள்ளவோ மாட்டார்கள். ஒவ்வொரு நிமிடமும் எரிக்கப்படும் கோடிக் கணக்கான சிகரெட் புகை பற்றிப் பேச மாட்டார்கள். ஆண்டு தோறும் ஒவ்வொரு நாடும் புத்தாண்டு, சுதந்திர தினம் போன்றவற்றில் சில மணி நேரத்துக்குள் வெடித்துத் தீர்க்கும் ‘டன்’ கணக்கான பட்டாஸ் பற்றிப் பேச மாட்டார்கள். அவர்கள் எல்லாம் பாலாபிஷேகம் வீண் என்று சொல்லும் முன், ஒரே மணி நேரத்தில் 150 டன் தக்காளி எப்படி வீணடிக்கப்படுகிறது என்பதையும் அறிதல் நலமே.
இந்த ஆண்டு தக்காளித் திருவிழா ஆகஸ்ட் 29 (2018) புதன் கிழமை நடக்கிறது. லாரி நிறைய தக்காளிகளைக் கொண்டு வருவர். அதில் 150 டன் பழுத்த தக்காளிப் பழம் இருக்கும். ஒருவர் மீது ஒருவர் தக்காளியை வீசி எறிந்து ஆனந்தப் பட வேண்டும். எல்லோரும் ரத்தக் கறை படிந்த கொலைகாரர்கள் போல காட்சி தருவர். ஒரு மணி நேரம் தலையணைச் சண்டை– அல்ல , அல்ல, தக்காளிச் சண்டை— போடுவர். ஒரு மணி நேரத்துக்குள் ஊரே தக்காளிச் சட்னியாகி விடும்; அத்தனையையும் நகர தண்ணீர் வாஹனங்கள் கழுவி விட்ட பின்னர் அவை அருகிலுள்ள நதியில் கலந்து விடும்.
2013 வரை விழாவுக்கு 50,000 மக்கள் வந்தனர். 9000 மக்களே வசிக்கும் புனோல் நகருக்குள் 50,000 பேர் நு ழைந்தால் அது ‘பனால்’ ஆகி விடும் என்று இப்பொழுது டிக்கெட் வைத்து விட்டார்கள்; 20,000 பேருக்கு மட்டுமே அனுமதி. 150 டன் தக்காளி வீணாவது பற்றி எவருக்கும் கவலை இல்லை. அதிலுள்ள சிட்ரிக் அமிலம் ஊரை சுத்தம் செய்கிறதாம். நதியில் எத்தனை உயிரினங்களைக் கொல்கிறதோ ஆண்டவனுக்கே வெளிச்சம்.

இந்த லண்டனிலும் இந்த தக்காளி சட்னி/ சண்டை விழாவை ஏற்பாடு செய்து 50 பவுன் டிக்கெட் வைத்துள்ளனர். உலகின் பல நாடுகளில்- குறிப்பாக கொலம்பியா முதலிய ஸ்பானிய மொழி பேசும் தென் அமெரிக்க நாடுகளில் இது பரவி வருகிறது இந்தியாவில் டில்லியிலும் பெங்களூரிலும் இந்த விழா அறிவிக்கப்பட்டவுடன் கடும் எதிர்ப்பு கிளம்பியது; அதை அறிவித்தவர்கள் ‘உடும்பு வேண்டாம், கையை விட்டால் போதும்’ என்று ஓடி விட்டனர்.
லாரிகள் தக்காளி கொண்டு வந்தவுடன் உறியடித் திருவிழா ஆரம்பமாகும்; கிருஷ்ணன் கோவில்களில் நடக்கும் விழா போல ஓங்கி வளர்ந்த எண்ணை பூசப்பட்ட கம்பத்தின் மீது துண்டு கட்டி வைத்திருப்பர். அதை யாராவது ஒருவன் கொண்டு வந்த பின்னர் விழா துவங்க வேண்டும் என்பது நியதி; ஆனால் அந்த அளவுக்கு மக்களுக்கு பொறுமை கிடையாதென்பதால் ஒரு தண்ணீர் பீரங்கி மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பர். உடனே ‘தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்’ என்ற பாணியில் தக்காளிச் சண்டை துவங்கும். யாரும் முழுத் தக்காளியை எறியக்கூடாது. அதைப் பிய்த்தோ பிழிந்தோ கசக்கியோ மற்றவர் மீது எறியலாம். எல்லாம் வேடிக்கைதான் ; ஆனால் 150 டன் தக்காளி ஒரே மணி நேரத்தில் காலி! சரியாக ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் மற்றொரு தண்ணீர் பீரங்கி தண்ணீரை வீசும். “கதை முடிந்தது; கத்தரிக்காயும் காய்த்தது; அவரவர் வீட்டிலே அவரைக்காய்ச் சோத்துலே” என்று (NURSERY RHYME) நர்ஸரி ரைம் பாடியவாறு நதியில் விழுந்து நல்ல ஸ்நானம் செய்து ‘அவா அவா ஆத்து’க்குப் போகலாம்.
இந்த விழா எப்படித் துவங்கியது?

இது பற்றிப் பல கதைகள் உண்டு. ஒரு திருவிழாவின் போது இளைஞர்கள் சாலை ஓரக் கடையில் தவறி விழுந்தவுடன் சண்டை துவங்கியது என்றும் அருகிலுள்ள தக்காளி அனைத்தையும் ‘கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்த கதையா’க மக்கள் எறிந்தனர் என்றும் சொல்லுவர். இன்னும் சிலர் வேண்டாத நகரசபை அதிகாரிகள் மீது அழுகிய தக்காளி எறிந்தவுடன் ஆண்டுதோறும் அதைச் செய்யத் துவங்கினர் என்பர். 1945 ஆம் ஆண்டில் துவங்கியது. இந்த விழா இடையில் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் துவங்கியது.
தக்காளிச் சண்டைக்கு வருவோர் கூரான ஆயுதங்கள், பாட்டில்கள் கொண்டுவர அனுமதி இல்லை.
பெண்களே! 150,000 கிலோ தக்காளியில் எத்தனை ஈயச் சொம்பு ரஸம் வைக்கலாம் என்று கணக்குப் போடுங்கள். ஆண்கள! எத்தனை கப் தக்காளி சூப் (CUP SOUP) கிடைக்கும் என்று கணக்குப் போடுங்கள்.
–சுபம்–