பேசுவதெல்லாம் கவிதை!

saraswathy

Post No 1556; Dated 8th January 2015

தமிழ் என்னும் விந்தை! -26

by ச.நாகராஜன்

தமிழ் ஒரு அரிய செம்மொழி. மதுரை சங்கத்திலே சிவனார் தலைமை வகித்து அருளிய மொழி. தன்னைத் தமிழால் வைதாரையும் வாழ வைக்கும் அளவு தமிழ் மீது தீராக் காதல் கொண்ட முருகன் தந்த  மொழி!

 

இதில் புலமை கொண்டு காலம் காலமாக ஆயிரக் கணக்கான கவிஞர்கள் பல அரிய விந்தைகளைக் காட்டி உள்ளனர். மாதிரிக்கு ஒரே ஒரு சிறிய சம்பவத்தைப் பார்த்தால் இப்படிப்பட்டவர்களுக்கு சித்திர கவி சாதாரணம் தான் என்றே தோன்றி விடும்!

 

பேசுவதெல்லாம் கவிதை என்ற அளவில் இலக்கணத்துடன் பேச்சையே கவிதையாகத் தந்த கவிஞர்கள் சமீப காலத்தில் கூட வாழ்ந்திருக்கின்றனர்.

 

உதாரணத்திற்கு  மாம்பழக்கவிச்சிங்க நாவலரைக் கூறலாம், இவர் பிறந்த ஆண்டு கி.பி.1836. தமிழ் வளர்த்த சேது சமஸ்தான சேதுபதிகள் இவரை ஆதரித்தனர். இவர் கவித்திறம் கண்டு வியந்த முத்துராமலிங்கச் சேதுபதியவர்கள் மற்றும் பொன்னுசாமித் தேவர் அவர்கள் இவருக்கு கவிச்சிங்க நாவலர் என்ற பட்டத்தைத் தந்தனர்.

 

ஒருமுறை கவித்திறம் வாய்ந்த அப்பாச்சி பிள்ளையவர்கள் மாம்பழக்கவிச்சிங்க நாவலரைச் சந்தித்தார். அவர்கள் பேசியதெல்லாம் கவிதையாக இருந்தது.

 

அப்பாச்சி பிள்ளை கூறினார்:- “கம்பனும், ஒட்டக்கூத்தனும், புகழேந்தியும்,ஔவையும், காளமேகமும், படிக்காசுத் தம்பிரானும், பரஞ்சோதி முனிவனும், சிற்றம்பலமும், வெண்பாப் புலியும், வாலசிம்மமும் மற்ற வித்துவான்களும் பழனி மாம்பழக் கவிச்சிங்கத்துக்கிணையா? உலகத்தோரே!

 

இது விருத்தமாக ஆனது இப்படி:-

கம்பனுமொட் டக்கூத்த னும்புகழேந் தியுமவையுங் காளமேக

மும்படிக்கா சுத்தம்பி ரானும்ப  ரஞ்சோதி முனிவ னுஞ்சிற்              

றம்பலமும், வெண்பாப்பு லியும்வால  சிம்மமுமற் றவித்து  வான்க

ளும்பழனி மாம்பழக்க விச்சிங்கத் துக்கிணையா? உலகத்தோரே!

 

“மாம்பழக் கவிச்சிங்கமும் சளைத்தவர் இல்லையே! அப்பாச்சி பிள்ளையவர்கள் பேசியதெற்கெல்லாம் இவரும் பதில் கூறினார் – கவிதையாக!

அப்பாச்சி பிள்ளை: முன்பு போசன் சமூகத்திருந்த காளிதாசன் போலிலை யெந்த வித்வானும் என்பார்கள். நல்ல புத்திமான் மாம்பழக் கவிச்சிங்கத்துக் கொப்பில்லையென்பேன் நிச்சயமிது.

இது வெண்பா ஆகிறது இப்படி:-

 

முன்புபோ சன்ச மூகத்திருந்த காளிதா

சன்போ லிலையெந் தவித்வானு  – மென்பார்கள்  நல்லபுத்தி

மான்மாம்ப ழக்கவிச்சிங் கத்துக்கொப் பில்லை

யென்பேன் நிச்சயமி து.

மாம்பழக் கவிச்சிங்கம் கூறினார்: நமது துரையவர்களைக் காண இன்றைக்கு மனசு துடிக்குது கண்டு முறையிட்டுக் கொள்வதுசிதமோ, கூடாததோ சொல்லுங்கள் பிள்ளையவர்களே

இது வெண்பா ஆகிறது இப்படி:-

 

நமது துரையவர்க ளைக்காண வின்றைக்கு

மன சுதுடிக் குதுகண் – டுமுறையிட்டுக் கொள்வ

துசிதமோ கூடாத தோசொல்லுங்  

கள்பிள் ளையவர் களே

god2a

அப்பாச்சி பிள்ளை: அய்யா கவிராயரவர்களே தங்களுக்குச் செய்யுமரியாதி விஷயத்தில் அய்யரும் நானுஞ் சொன்னோம், நம் எசமானும் சரி என்று ஒப்பி மனசும் சுமுகமாச்சுது.

இது வெண்பா ஆகிறது இப்படி:-

“அய்யா கவிரா யரவர்களே தங்களுக்குச்   

செய்யு மரியாதி விஷயத்தி – லையருநா

னுஞ்சொன்னோ  நம்மெசமா  னுஞ்சரியென் றொப்பி மன

சுஞ்சு முகமாச் சுது”

 

மாம்பழக் கவிச்சிங்கம் பதில் கூறினார் இப்படி:- தாங்களறியாத சமாசாரமென்ன உத்தரவு வாங்கி என்னை ஊர்க்கனுப்பி வைப்பதெற்கெல்லாங் கிருபை தான் வேண்டும். மானேஜரவர்களே, மெத்த நம்பினேன் வீண் பேச்சல்ல நிஜம்.

 

இது வெண்பா ஆகிறது இப்படி:-

“தாங்களறி யாதசமா சாரமென்ன வுத்தரவு

வாங்கியென்னை யூர்க்கனுப்பி வைப்பதெற்கெல் –

லாங்கிருபை தான்வேண்டும். மானே ஜரவர்களே, மெத்த நம்பி   

னேன்வீண்பேச் சல்ல நிஜம்.

 

அப்பாச்சி பிள்ளை: நமது பிரபுவிடத்தினிலே மருமசங்கதி முழுதும் பேசி முடிவு செய்திருக்கிறேன் அதிக சந்தோஷம் தானே அய்யா, கவிராயரே!

இது வெண்பா ஆகிறது இப்படி:-

நமது பிரபுவி டத்தினி லேமருமசங் கதிமுழு தும்பே – சிமுடிவு

செய்திருக்கி றேன திகசந்தோ ஷந்தானே   அய்யா, கவிரா யரே!

பேச்செல்லாம் கவிதையாக மூச்செல்லாம் தமிழாக வாழ்ந்த கவிஞர்களுக்கு வெற்றியா, அவர்களை உளமும் உயிரும் கொண்டு ஆதரித்த சேதுபதிகளுக்கு வெற்றியா அல்லது இதையெல்லாம் கேட்டு உளம் மகிழ்ந்த தமிழர்களுக்கு வெற்றியா!

 

இவர்கள் அனைவருக்கும் வெற்றி தான்! ஆனால் முதல் வெற்றி தமிழ் என்னும் விந்தைக்குத் தானே!

 

contact swami_48@yahoo.com

*****************