
Article Written S NAGARAJAN
Date: 27 July 2016
Post No. 3009
Time uploaded in London :– 5-24 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
திரு திருப்பூர் கிருஷ்ணன் அவர்களுக்காக
சுதந்திரப் போராட்ட வீரரும், சிறந்த தமிழ் பத்திரிக்கையாளரும். ஆன்மீகவாதியுமான தினமணி மதுரைப் பதிப்பின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிய திரு வெ.சந்தானம் அவர்களின் புத்திரர் தனது தந்தையாரைப் பற்றிய நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்
வெ.சந்தானம் தோற்றம்:4-9-1911 மறைவு:15-8-1998
எனது தந்தையார்
————————
சந்தானம் நாகராஜன்
தேசப்பணி
எனது தந்தையார் திரு வெ.சந்தானம் தேசீயம் இலக்கியம் தெய்வீகம் ஆகியவற்றில் ஈடுபட்டு நல்லனவற்றை நாள் தோறும் பரப்பிய புண்ணியர் என்று அவரை நன்கு அறிந்தவர்கள் கூறும் போது தான் அவரின் பெருமையை என்னால் உணர முடிந்தது. ஏனெனில் மிகவும் நெருக்கமாகப் பல ஆண்டுகள் கூடவெ வாழ்ந்த போதிலும் தன்னைப் பற்றியும் தான் ஆற்றிய பணியைப் பற்றியும் அவர் ஒரு வார்த்தை கூடக் கூறியதே இல்லை.
அவர் ஏன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார் என்பதே எங்களுக்குத் தெரியாது. இதைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு ஆசையிருந்தாலும் அது பற்றி அவர் கூறியதே இல்லை. ஆனால் டி,வி.எஸ் ஸ்தாபனத்தார் வெளியிடும் ஹார்மனி இதழின் ஆசிரியராக புதுக்கோட்டை திரு வெங்கடராமன் பொறுப்பேற்றிருந்தார். அவர் ஒரு நல்ல நண்பர். அவர் என்னிடம் தந்தையாரின் சுதந்திரப் போராட்ட பங்கைப் பற்றி ஒரு கட்டுரை வாங்கித் தருமாறு கேட்டுக் கொண்டார். இதை முன் வைத்து என் தந்தையாரிடம் ஒரு கட்டுரை கேட்டேன். அதில் மலர்ந்தது ஒரு அற்புத கட்டுரை- அதில் அவரது பணி லேசாக குறிப்பிடப்பட்டு இருந்தது. சைமன் கமிஷன் பகிஷ்காரத்தை ஒட்டி வெள்ளையனே வெளியேறு என்று அச்சிடப்பட்டிருந்த பிரசுரத்தை அவர் சென்னை கடற்கரையில் விநியோகம் செய்ததற்காக ஆறு மாத சிறை தண்டனை பெற்றார் என்று அந்தக் கட்டுரை வாயிலாகத் தெரிய வந்தது.
தாமிரப் பட்டயம் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்காக வழங்கப்பட்டபோது திரு வை.சங்கரன், திரு ராஜாராம் உள்ளிட்டோர் மதுரையிலேயே கலெக்டர் புருஷோத்தமதாஸிடமிருந்து பெற்றனர்.பழைய போர் வீரர்கள் ஒன்றாகக் குழுமிய காட்சியைக் கண்ட கலெக்டர் இப்படிப்பட்ட பெரியவர்களுக்கு பட்டயம் வழங்க தனது நற்பேறை எண்ணி மகிழ்ந்தார்.
இலக்கியப் பணி
திரு பி.எஸ்,ராமையா மதுரையில் அவர் எழுதிய பிரஸிடெண்ட் பஞ்சாக்ஷரம், மல்லியம் மங்களம், தேரோட்டி மகன் ஆகிய நாடகங்களை நடத்தும் எஸ்.வி.சஹஸ்ரநாமம் குழுவினருடன் வந்தார். எங்கள் வீட்டிற்கு நேரடியாக அவர் வந்தது வெங்கலக் கடையில் யானை நுழைந்தது போல இருந்தது. நீண்ட காலப் பழக்கம் ஆதலால் வாடா, போடா என்ற வசனங்களைக் கேட்ட எனக்கு அது புதிதாக இருந்தது, ஏனெனில் என் வீட்டிற்கு என் தந்தையாரைப் பார்க்க வருவோர் தினமணி பொறுப்பாசிரியர் என்ற முறையில் மிகுந்த மரியாதை தருவர்.
ஆகவே திரு பி.எஸ். ராமையா வீட்டில் அமர்ந்த போது அவரது பழைய கால நினைவுகளைக் கிண்டி விட்டேன். சரசரவென்று அவர் அந்த மணிக்கொடி காலத்தைப் பிட்டு வைத்தார். அவர் பேசுவதே ரஸமாக இருந்தது. ஐந்து ரூபாய் சந்தாவாக வந்தால் அன்று தீபாவளிக் கொண்டாட்டம் தானாம்! அனைவரும் நடந்தே சென்று ஒரு பெரிய ஹோட்டலில் விருந்து போல சாப்பிட்டு உற்சாகமாக வந்து அடுத்த இதழின் பணியைத் தொடங்குவார்களாம்.
பின்னால் தனது மணிக்கொடிக் காலம் என்ற நூலில் எனது தந்தையாரைப் பற்றி பி.எஸ்.ராமையா குறிப்பிட்டிருக்கிறார். அவரது மணி விழாவைப் பெரிய அளவில் நடத்துவது என இலக்கிய அன்பர்களால் தீர்மானிக்கப்பட, என் தந்தையாருடன் நானும் வத்தலகுண்டு சென்றேன்.
வத்தலகுண்டு ஒரே விழாக்கோலம் பூண்டிருந்தது. மேளதாளத்துடன் திரு ராமையா அழைத்து வரப்பட்டார். திரு சி.சு.செல்லப்பா உற்சாகமாக ஆடி ஓடி அனைவரையும் வரவேற்றார். திரு ராமையாவின் முகம் மலர்ந்திருந்தது. வாழ்நாளிலேயே தன்னை கௌரவித்துவிட்டார்களே தமிழர்கள் என்று நினைத்தாரோ, என்னவோ!
கையில் காசு இல்லாமல் ஈஸி சேரை முறித்து விறகாகவும் அவர் ஆக்கியதுண்டு. பணம் ஆயிரக்கணக்கில் புரள லண்டனிலிருந்து,, “சந்தானம் உடனடியாக இங்கு வந்து விடு” என்று உற்சாகமாக அவர் என் தந்தைக்கு கடிதம் எழுதியதும் உண்டு. தமிழ் ஜீனியஸாக விளங்கிய அவர் மூலம் அவர்களது பழைய மணிக்கொடிக் காலத்தைப் பற்றியும் பாரதியார் பாடல்களைப் பரப்ப அவர்கள் எடுத்த முயற்சிகளையும் உணர முடிந்தது.
‘வெடிபடு மண்டலத் திடிபடு தாளம் போட’ என்ற பாட்டை எனது தந்தையார் ஞாயிற்றுக்கிழமைகளில் மதிய நேரத்தில் பாடும் போது காளி நேரில் நர்த்தனம் ஆடும் பிரமை எனக்கு உண்டாகும். அன்னை அன்னை அன்னை ஆடும் கூத்தை நாடச் செய்தாய் என்னை என்ற வரிகளை உச்சஸ்தாயியிலும் அமைதியாக இறக்கமாகவும் பாடும் போது பாரதியின் சக்தி ஆவேசத்தை சுற்றி இருந்து கேட்கும் எங்களால் சுலபமாக உணர முடிந்தது.
லியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனா என்ற நாவலை தமிழில் மொழிபெயர்த்து அதில் கரீனினா என்பதை கரீனாவாக தமிழ் படுத்தியதன் காரணத்தையும் குறிப்பிட்டார். (தமிழில் கரீனினாவின், கரீரினாவை என்று வருவதைப் படிக்க வாசகர்கள் சிரமப்படுவார்கள் என்பதால் கரீனா என்ற மாற்றம் ஏற்பட்டது!)
தெய்வீகப் பணி
சுவாமிஜி கிருஷ்ணாவின் உபதேசத்தால் அதிகாலையில் கணபதி ஹோமம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என் தந்தையார். அச்சன்கோவிலுக்கு புஷ்பாஞ்சலிக்காக சென்றது, தர்மபுரம் திருவாவடுதுறை ஆதீனங்களில் நடத்தப்படும் திருமந்திர மற்றும் சைவ மகாநாடுகளில் பங்கேற்றது, பிரசாந்தி நிலையத்தில் ஸ்ரீ சத்யசாயி பாபாவை தரிசித்தது, இளையாத்தங்குடியில் பெரியவாளை தரிசித்தது, சிருங்கேரி மஹா சந்நிதானம் எங்கள் இல்லத்திற்கு வந்தது என ஏராளமான நிகழ்ச்சிகளை உணர்ச்சிபூர்வமாக அனுபவித்து இறையருளை அனுபவித்தோம். ஸ்ரீ சத்யசாயி பாபாவிடம் எனது தந்தையார் அவர் மீது தான் இயற்றிய கீர்த்தனங்களை சமர்ப்பித்தபோது அது பாடியபோதே சமர்ப்பிக்கப்பட்டதாகவும் பதங்கள் நன்கு வந்துள்ளன என்றும் கூறியதைக் கேட்டு நான் அதிசயித்துப் போனேன்.பாபா அவரை ஆபட்ஸ்பரியில் நடந்த மகாநாட்டில் ஒரே மேடையில் தன்னுடன் பேசுமாறு அழைத்தார்,
இதே போல திரு முத்துராமலிங்க தேவரும் என் தந்தையாரை தலைமை தாங்க அழைத்து மதுரையில் தெய்வீகப் பணியைப் பரப்பி வந்தார்.
பத்திரிகைப் பணி
எமர்ஜென்ஸி காலத்தில் தினமணி தலையங்கப் பகுதியை வெற்றிடமாக வெளியிட்டுத் தன் எதிர்ப்பைத் தெரிவித்தது. அந்தக் காலத்திலும் அதற்கு முன்னும் பின்னரும் திரு ராம .கோபாலன் உள்ளிட்டோர் எனது இல்லத்திற்கு அடிக்கடி வந்து ஜனநாயகம் தழைக்க வேண்டிய அவசியத்தைப் பகிர்ந்து கொள்வர். எமர்ஜென்ஸி நீக்கப்பட்ட போது ஜனநாயகம் புதிய பிறப்பை எடுத்தது. அந்த கால கட்டத்தில் அரசு அதிகாரிகள் ஒழுக்கம் உள்ள சீலர் என்று என் தந்தையாரைப் பாராட்டி தினமணி அவசர நிலையைக் கடுமையாக எதிர்த்த போதிலும் தங்களின் அதீத செய்கைகள் எதையும் செய்யவிடவில்லை.
பத்திரிக்கை பணி என்பதால் அதுவும் தினசரி என்பதால் அன்றாடம் நூற்றுக் கணக்கான நிகழ்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கும். இவற்றை சமூகப் பொறுப்புடன் அவர் கையாண்டு செய்திகளைப் பிரசுரித்து வந்தார் என்பது குறிப்பிடத் தகுந்தது.
ராமேஸ்வரத்தில் கடல் பொங்கி ஊருக்குள் வந்து விட்டது என்று கேள்விப்பட்டவுடனேயே ஒரு சிறிய காரில் நேரடியாக என்ன நடந்தது என்பதைப் பார்க்கத் தந்தையார் கிளம்பினார். விவரத்தின் முழு தாக்கமும் தெரியாத சிறுவனான நானும் காரில் ஏறி அமர்ந்து கொண்டேன். மானாமதுரைக்கு முன்பாகவே கடல் சாலையை மூட சாலையைக் கண்டுபிடிக்க பல ஆட்கள் இறங்கி இரு பக்கமும் சாலையின் ஓரத்தில் இருந்து சாலையின் எல்லையைக் காண்பித்தவாறே கார்களை மெதுவாக வழி நடத்திச் சென்றனர். போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ராமையா அரசு வாகனங்களுடன் வந்தார்.
மானாமதுரையில் ஓரிடத்தில் வாகனங்களை நிறுத்தி அனைவரையும் பின் தொடர வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.நிலைமையின் தீவிரம் அவருக்கும் ஏனையோருக்கும் கொஞ்சம் கொஞ்சமாகப் புலப்பட ஆரம்பித்தது.ஒரு ரயிலையே காணோம் என்ற செய்தி வர ஆரம்பித்திருந்தது. உடனே என் தந்தையார் மதுரை திரும்பி அச்சில் ஓடிக் கொண்டிருந்த பத்திரிக்கையை நிறுத்தி நேரில் கண்ட நிலைமையை பிரசுரித்தார்.
ராமநாதபுர தினமணி நிருபர் திரு ஆதிநாராயணன் ஒரு தோணி மூலமாக ராமேஸ்வரத்திலிருந்து வந்து உலகத்திற்கு ராமேஸ்வரத்தின் நிலைமையை தினமணி மூலமாக அறிவித்தார். உடனே மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டன.
இது போல ஆபத்து அல்லது அவசர காலங்களில் செய்தித்தாளின் முழு பலத்தையும் மக்களின் நலனுக்காக பலமுறை அவர் அர்ப்பணித்திருக்கிறார்.
செய்தித் தாள் என்பதே அன்றாட நிகழ்ச்சிகள் ஆயிரமாயிரத்தை எடிட் செய்து ஆறு அல்லது பத்துப் பக்கங்களில் கொடுப்பது தான். இதில் வாழ்நாள் முழுவதும் ஈடுபட்டிருந்த எடிட்டரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை எடிட் செய்து சுருக்குவது முடியாத காரியம். ஏனெனில் அவை ஒவ்வொன்றும் சமுதாய நலனுக்காக பத்திரிக்கை எப்படி பாடுபட வேண்டும் என்பதை உணர்த்தி வந்ததால் தான்!அவற்றில் முக்கியம் அல்லாதது எதுவும் இல்லை!!
தந்தயாரின் மறைவை தாங்கிக் கொள்ள முடியாத ஒருவர் அவர் ஒரு மஹரிஷி போல என்று குறிப்பிட்டுப் புலம்பிக் கொண்டே இருந்தார்.
பணம், சொத்து, புகழ் இவற்றுக்கெல்லாம் ஏங்காமல் “என் கடன் சமுதாயம் நலன் பெற பணி செய்து கிடப்பதே” என்பது தான் மஹரிஷிக்கு இலக்கணம் என்றால் அவரும் ஒரு மஹரிஷி தான் என்று எனக்கும் தோன்றுகிறது.
**************
You must be logged in to post a comment.