எண்களின் ரகசியம்: பதிமூன்றும் முப்பதும்! (Post No.4879)

Date- 4 April 2018

 

British Summer Time- 6-03

 

Written by S Nagarajan

 

Post No.4879

 

 

எண்களின் ரகசியம்

 

பதிமூன்றும் முப்பதும்! : மேலை நாட்டினரின் மூட நம்பிக்கை!

 

ச.நாகராஜன்

 

பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியர்களை மூட நம்பிக்கை மிகுந்தவர்கள் என்று பிரிட்டிஷார் கேலி செய்வது வழக்கம். ஆனால் உண்மையில் சொல்லப் போனால் அதிக மூட நம்பிக்கைகள் கொண்டவர்கள் அவர்களே!

 

இதற்கு எடுத்துக்காட்டுகள் ஏராளம் உண்டு. இங்கு 13ஆம் எண்ணைப் பற்றி மட்டும் பார்ப்போம்.

 

13 என்றாலே மேலை நாட்டவர்களுக்கு அலர்ஜி. பல மாடி அடுக்குக் கட்டிடத்தில் 12ஆம் மாடிக்குப் பிறகு 14ஆம் மாடி தான். பதிமுன்றே கிடையாது.

 

பிரிட்டிஷ் ஆட்சியின் விளைவு இப்போது இந்தியாவிலும் கூட இதே நிலை தான். அதே போல 13ஆம் எண் அறையும் கிடையாது. 12 ஏ என்று இருக்கும்!

இதற்கான காரணங்கள் பல.

 

13 ஒரு அதிர்ஷ்டமற்ற எண்.

என்றாலும் ஏசு கிறிஸ்துவிடமிருந்து தான் இந்த எண்ணைப் பற்றிய கெட்ட அபிப்ராயம் தோன்ற ஆரம்பிக்கிறது.

ஏசுவின் இறுதி சாப்பாட்டில் அவர் 12 சீடர்களுடன் இருந்தார்.ஆகவே 13 என்பது அதிர்ஷ்டம் கெட்ட எண்!

தூக்குமரத்தில் தூக்குப் போடுபவனுக்கான கட்டணம் 13 பென்ஸ்.

ஆகவே 13 என்பது அதிர்ஷ்டமற்ற எண்ணாம்! உண்மையில் தூக்குப் போடுபவனுக்கு 13 ½ பென்ஸ் தரப்பட்டது. அரை பென்ஸ் தூக்குக் கயிறுக்கான பணம். ஆகவே 13 பென்ஸ் என்று கொள்ளப்பட்டது.

தூக்கு மேடைக்கு ஏறும் படிகள் 13. ஆகவே 13 அதிர்ஷ்டமற்ற எண்.

 

பெண்களின் மாதவிடாயும் கூட 13 எண்ணின்

அதிர்ஷ்டமின்மைக்கு ஒரு காரணமாம். ஆண்டுக்கு 13 முறை அவர்கள் மாதவிலக்கை அடைகின்றனராம்!

 

13 எழுத்துக்கள் பெயரில் இருந்தால் அபாயமாம். ஏனெனில் கொடும் கொலைகளைச் செய்த கொலையாளிகள் 13

எழுத்துக்களைக் கொண்ட பெயர்களையே உடையவர்களாக இருந்தார்களாம். இதற்கான பெரிய் பட்டியலே தயார்!

13ஆம் தேதி வெள்ளிக்கிழமையாக அமைந்தால் மாபெரும் ஆபத்து! அன்று எந்த வித வியாபாரமும் செய்யக் கூடாது. மீறிச் செய்தால் நஷ்டமும் துரதிர்ஷ்டமும் பீடிக்கும். ஆகவே பல பில்லியன் டாலர் அளவுக்கு வணிகம் முடங்குமாம் அன்று!

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

 

ஆகவே பிரிட்டிஷாரோ அல்லது இதர மேலை நாட்டினரோ ஹிந்துக்களைப் பற்றி இழிவாகக் கூறுவதற்கோ அல்லது விமரிசிப்பதற்கோ தகுதியானவர்கள் இல்லை.

அடுத்து எண் முப்பது சபிக்கப்பட்ட எண்ணாம் – அவர்களின் கருத்துப் படி! ஏனெனில் ஜுடாஸ் ஏசுவை காட்டிக் கொடுக்க அவன் பெற்ற பணம் 30 வெள்ளிக் காசுகள். இன்னொரு நம்பிக்கை ஏசு கிறிஸ்து தனது உபதேசங்களை அவரது 30ஆம் வயதில் செய்ய ஆரம்பித்தாராம்!

 

ஆக ஐஸ்பெர்க்கின் டிப் என்று சொல்வார்களே அது போல மேலை நாட்டினரின் ஏராளமான மூட நம்பிக்கைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே இந்த 13!

 

இப்படி ஏராளம் உண்டு. பின்னால் சந்தர்ப்பம் கிடைக்கும் போது விரிவாகக் காண்போம்!

***