
Picture of S Nagarajan in Halabedu, Karnataka, August 2017.
Date: 4 FEBRUARY 2018
Time uploaded in London- 7-02 am
WRITTEN by S NAGARAJAN
Post No. 4699
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
நாட்டு நடப்பும் சொந்த அனுபவமும்!
பாராட்டுக்கும் கண்டனத்திற்கும் பயன் உண்டா? எனது சில அனுபவங்கள்!
ச.நாகராஜன்
(குறிப்பு: இந்தக் கட்டுரையில் இருப்பவை எனது சொந்தக் கருத்துக்கள்; சொந்த அனுபவங்கள். இது எவரையும் புண்படுத்துவதற்காகவோ அல்லது மன உளைச்சலுக்கு ஆளாக்கவோ எழுதப்படவில்லை. நல்ல நோக்கத்துடன் எழுதப்படும் இது எவர் மனதையும் நோக வைத்தால் இப்போதே சொல்கிறேன் – Sorry!)
1
பாராட்டிற்கும் கண்டனத்திற்கும் பயன் உண்டா? நமது தமிழ்நாட்டு ஊடகங்கள் போல் அல்லாமல், அரசியல் கட்சிகள் போல் அல்லாமல் உண்மையிலேயே மனம் திறந்து பாராட்டினால் பலன் உண்டு.
தீமையையும் கூட, ஒரு பொதுவான நன்மைக்காகக் கண்டித்தால் பலனுண்டு.
தற்பெருமைக்காக அல்ல; ஒரு இன்ஸ்பிரேஷனுக்காகத் தான் இந்த எனது சொந்த அனுபவங்களை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
2
பல ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம்.
சாவியும் மணியனும் ஆனந்தவிகடனிலிருந்து விலகி விட்ட காலம் அது.
சாவி தினமணிகதிர் ஆசிரியப் பொறுப்பை வகித்தார். ஆனால் தினமணி கதிர் வெளியீடு பற்றி வரும் பத்தியில் ஆசிரியர் ஏ.என்.சிவராமன் என்றே பதிப்பிக்கப்பட்டிருக்கும்.
ஒரு நாள் தினமணி கதிரைப் பிரித்துப் பார்த்த எனக்கு பகீர் என்றிருந்தது.
ஹலோ ராமச்சந்திரா என்ற தலைப்பில் சாவி ஒரு நகைச்சுவைத் தொடரை ஆரம்பித்திருந்தார்.
அதில் ஒரு படம்.
ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி டெலிபோன் ரிசீவரைக் கையில் பிடித்திருக்கும் காட்சி.
அன்றாடம் ராமரை வழிபடும் பக்தர்களுக்கு எப்படி இருக்கும்?
மனம் நொந்தேன். அன்றே பல நண்பர்களும் இது பற்றிப் பேசினர். விளைவு, அன்று மாலையே பல பேர் கையெழுத்திட்ட கண்டனக் கடிதம் தினமணி கதிருக்கு அனுப்பப்பட்டது.
அடுத்த வாரம் தினமணி கதிர் வந்தது.
என்ன ஆச்சரியம். பல பக்தர்களின் மனம் நொந்திருப்பதாகக் கடிதம் வந்ததால் இந்தத் தொடர் இத்துடன் நிறுத்தப்படுகிறது -சாவி என்று அறிவிப்பு வந்தது.
ராம பக்தி ஜெயித்தது!

S Nagarajan and S Swaminathan with Great Scholar Dr R Nagaswamy in Chennai, 2017.
3
ஏறத்தாழ ஒரு மஞ்சள் பத்திரிகையாகவே தினமணி கதிரை சாவி நடத்திக் கொண்டிருந்தார்.
மிக அருமையான எழுத்தாளரான, மிகவும் (அப்போது) இளைஞரான ஸ்ரீ வேணுகோபாலனை புஷ்பா தங்கதுரையாக மாற்றி ரெட் லைட் ஏரியாவுக்கு அனுப்பி கமலாவின் கதைகளைப் பிரசுரிக்க ஆரம்பித்தார்.
வேணுகோபாலன் மிக அருமையான எழுத்தாளர் என்றும் அவரை இப்படிக் கெடுக்கக் கூடாது என்றும் பிரபல மணிக்கொடி எழுத்தாளரும் எனது தந்தையாரின் நண்பருமான கி.ரா. அடிக்கடி என்னிடம் சொல்லி வேதனைப்படுவார். கி.ரா. சிறிது காலம் மதுரையில் எங்கள் வீட்டில் தங்கி இருந்தார். அப்போது அவர் உலக இலக்கியம் பற்றியும் தமிழ் இலக்கியம் பற்றியும் பேசுவார். அதில் வேணுகோபாலனைப் பற்றி மிகவும் கவலைப்பட்டார்.
இந்த ரீதியில் நடந்த கதிரில் ஒரு நாள் ஜெயகாந்தன் கதை ஒன்று பிரசுரிக்கப்பட்டிருந்தது. (பெயர் நினைவில்லை- ‘சக்கரம்’ என்ற தலைப்பாக இருக்கலாம்!)
அதைப் பார்த்த எல்லோரும் திடுக்கிட்டனர். இப்படி ஒரு ஆபாசமான கதை தினமணி கதிரில் வரலாமா?
பலரும் வெகுண்டனர். நானும், எனது நண்பர்களும் ஆளுக்கொரு போஸ்ட்கார்டில் கண்டனத்தைத் தெரிவித்து ஏ.என்.சிவராமன் அவர்களுக்குக் கடிதம் எழுதினோம்.
இப்போது லண்டனில் வசிக்கும் டாக்டர் நாகசுப்பிரமணியன், அவரது சகோதரர் திரு கிரி உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர்.
பங்களூர் உள்ளிட்ட பல ஊர்களிலிருந்தும் நண்பர்கள் கண்டனக் கடிதங்களை அனுப்பினர்.
அடுத்த வாரம் ஆச்சரியம்!
தினமணி கதிரில் கடைசிப் பக்கத்திற்கு முன் பக்கம் ஒரு அறிவிப்பு வந்தது. என் நினைவிலிருக்கும் வார்த்தைகளை வைத்துப் பொருள் கெடாமல் அதைக் கீழே தருகிறேன்,.
“இப்படி ஒரு கதை வெளியானதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். இனி இப்படிப்பட்ட கதைகள் என் பெயரை ஆசிரியராகப் போட்ட பத்திரிகையில் இடம் பெறாது.” ஏ.என். சிவராமன்.
அன்பர்கள் அனைவரும் மகிழ்ந்தனர்.
விஷயம் இத்துடன் முடியவில்லை.
அடுத்த வாரம் கதிர் வந்தது. அதன் கடைசிப் பக்கத்தில் இதுவரை ஆசிரியர் : ஏ.என்.சிவராமன் என்று இருந்ததற்குப் பதிலாக ஆசிரியர்: சாவி என்று போடப்பட்டிருந்தது.
பின்னர் சில காலம் கழித்து, சாவியும் கதிரிலிருந்து வெளியேறி விட்டார்.
4
கண்டனத்திற்குப் பலன் உண்டு என்பது எனது அனுபவம். ‘ஜெனியுன்’ – Genuine- என்று சொல்கிறோமே அது முக்கியம்! இப்படிப் பல அனுபவங்கள் உண்டு.
இனி பாராட்டிற்குப் பலன் உண்டா, உண்டு.
இர்விங் வாலஸ் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். த்ரீ சைரன், வோர்ட், ஆர் டாகுமெண்ட், பீஜன் ப்ராஜெக்ட், செவந்த் சீக்ரட் – எந்த நாவல் வேண்டுமென்றாலும் சொல்லுங்கள், என்னிடம் இருக்கும். கதையும் கிட்டத்தட்ட ஃபிங்கர் டிப்ஸில் இருக்கும்.
எமர்ஜென்ஸி காலம். இந்திராவின் தாங்கவொண்ணா அடக்கு முறை.
மதுரை கொதித்தெழுந்தது. அதில் ஏராளமான அனுபவங்கள். அதைச் சொல்வது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல; இடமும் இல்லை.
அப்போது ஆர் டாகுமெண்டில் இர்விங் வாலஸ் சித்தரித்திருந்த சூழ்நிலை இந்தியாவில்.
உடனடியாக ஒரு தற்காலிக சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. மூன்லைட் அசோஷியேஷன் – எம்.எல்.ஏ. (Moon Light Association MLA)
ஆங்காங்கு நண்பர்களின் வீடுகளில் பத்துப் பேர் சேர்ந்தால் போதும். ஒரு கூட்டம் நடைபெறும். அதில் நான் ஆர் டாகுமெண்ட் கதையைச் சொல்வேன். சரியாக ஒரு மணி நேரம்.
மூன் லைட் என்று சங்கப் பெயர் இருந்தாலும் திருப்பரங்குன்ற மலையின் பின்பக்கம் இருட்டிலும் இரவில் இந்தக் கூட்டம் நடைபெற்றதுண்டு. அதில் உருவங்கள் தெரியாது; ஆனால் என் குரல் ஒலிக்கும்.
கூட்டம் கலையும் போது எமர்ஜென்ஸியை எதிர்க்க வேண்டும் என்ற ஒரு நல்ல உத்வேகம் எழும்.
இப்படிப்பட்ட நாவலை எழுதிய இர்விங் வாலஸைப் பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எழுந்தது.
பாராட்டுவது என்றால் (தர்மத்தை உடனே செய்ய வேண்டும் என்பது போல) உடனடியாகப் பாராட்டி விடுவது என் வழக்கம் -இடம், பொருள், காலம் எதையும் பாராமல்!

நண்பர் ஒருவர் – இர்விங் வாலஸ் பைத்தியம்! அவரும் கூடச் சேர்ந்தார்.
வாலஸுக்குக் கடிதம் பறந்தது.
என்ன ஆச்சரியம், ஒரு நாள் நண்பர் ஓடி வந்தார்.
இர்விங் வாலஸ் பதில் எழுதி இருந்தார் – ஒரு போட்டோவும் இணைக்கப்பட்டிருந்தது. அவரும் அவர் மனைவியும் இருந்த போட்டோவில் அவரது கையெழுத்து வேறு.
எங்கள் பாராட்டிற்கு நன்றி தெரிவித்த உலகின் மாபெரும் எழுத்தாளர் எங்களைப் பாராட்டி இருந்தது தான் ஆச்சரியம்.
“உங்கள் எழுத்திலிருந்து நீங்களே நல்ல கருத்துக்களை எழுதும் வல்லமை படைத்தவர்கள் என்பதை என்னால் அறிய முடிகிறது.
ஆகவே நீங்கள் தெரிவித்திருக்கும் பொருள் பற்றி நீங்களே எழுத முடியும். ஏற்கனவே பலவற்றில் ஈடுபட்டு அவற்றை நிறைவேற்ற வேண்டி இருப்பதால் எனக்குப் போதிய நேரம் இப்போது இல்லை”
அவரது இந்தக் கடிதத்தை நாங்கள் காட்டாத ஆளே இல்லை. (ஆர் டாகுமெண்ட் போன்ற நாவல்களை அவர் எழுத வேண்டுகோள் விடுத்திருந்தோம் எங்கள் கடிதத்தில்)
ஒரே பெருமிதம்.
பாராட்டுக்கு ஒரு பாராட்டு! அது தான் இர்விங்வாலஸ்!
இன்னொரு சொந்த அனுபவம்.
எனது தொழிற்சாலையில் நான் ஒரு பொறுப்பு வாய்ந்த மேலாளர்.
காம்பொணண்ட் ஸ்டோர்ஸில் ஒரு இன் சார்ஜ். ஆள் எப்போதும் கடுகடு என்று இருப்பார் என்று எல்லோரும் சொல்வார்கள். எதற்கு இப்படி ஒரு கடுமை, சிடுசிடுப்பு என்று எனக்கும் புரியவில்லை.
ஒரு நாள் ஸ்டோர்ஸுக்குச் செல்ல வேண்டிய வேலை இருந்தது. சென்றேன். அகஸ்மாத்தாக கராத்தே பற்றிய பேச்சு அங்கு நிகழ்ந்து கொண்டிருந்தது.
என்ன விஷயம் என்று கேட்டேன்.
அங்கிருந்த பணியாளர், அவரைச் சுட்டிக் காட்டி ‘சார், இவர் கராத்தே மாஸ்டர் சார்’ என்றார்.
உடனடியாக அவரைப் பார்த்து, “உண்மையா இது” என்றேன்.
சற்று நெளிந்த அவர் தான் அடைந்திருக்கும் மிகப் பெரிய உயரிய நிலையை – பெல்ட் பெற்றதைக்- காண்பித்தார்.
“இன்னும் அரை மணி நேரத்தில் சாப்பாடு நேரம் வந்து விடும். அப்போது என் மேஜைக்கு வாருங்கள்” என்று சொல்லி விட்டு (ஒரு மாதிரியான உத்தரவு தான்!) கிளம்பினேன்.
சாப்பாடு நேரத்தில் அவர் சற்று பயந்தவாறு வந்தார்.
(வேலை நேரத்தில் கராத்தே பற்றி பேசியதற்கு கண்டனமோ!?)
“வாருங்கள்” என்று அவரை அழைத்து கேள்வி மேல் கேள்வி கேட்டு அவரது அனுபவங்களைத் தெரிந்து கொண்டேன்.
பிறகு அவர் கிளம்பும் போது உங்களது போட்டோ ஒன்று நாளை காலை எட்டு மணிக்கு என் மேஜையில் இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டு அவரை அனுப்பினேன்.
அடுத்த மாதம் எங்கள் தொழிலகத்தின் பிரபல இதழில் அவர் பற்றிய பேட்டிக் கட்டுரை ஒன்று அவரது போட்டோவுடன் வந்திருந்தது.
தொழிற்சாலையில் ஒரு பரபரப்பு. அவரை அனைவரும் நேரில் சென்று பாராட்டினர்.
அவர் சிடுசிடுப்பு அன்றிலிருந்து போயே போயிற்று. பெரும் புகழைத் தாங்க முடியாத அவர் எளிமையான மனிதராக ஆகி விட்டார்.
விஷயம் இத்துடன் நிற்கவில்லை.
எனது ஜாயிண்ட் மேனேஜிங் டைரக்டர் ( அவரைப் பார்ப்பதே சிம்ம சொப்பனம்; என்ன ஒரு கம்பீரம்; ரோட்டரி தலைவருக்கே உள்ள ஒரு கம்பீரம் அது!) தனது அறைக்குள் நுழைந்தவர், பர்ஸனல் மேனேஜருக்குப் போன் செய்து, “ யாரப்பா அது,கராத்தே மாஸ்டர், அவரை என் ரூமுக்கு அனுப்பு” என்று கூற அலுவலகமும் தொழிற்சாலையும் பரபரப்புக்குள்ளாகியது.
பயந்து நடுநடுங்கியவாறே உள்ளே சென்ற சிடுசிடுப்பு நண்பர் மிகவும் பாராட்டப்பட்டு நிஜ கராத்தே வீரராக வெளியில் வந்தார்.
எனக்கு அவர் கூறிய நன்றி வார்த்தைகள் ஒரு புறம் இருக்கட்டும்! அவர் வேலையே பறி போனது.
ஆம், ஜே.எம்.டி, ஸ்டோர்ஸ் இன் சார்ஜ் வேலையிலிருந்து அவரை நீக்கி விட்டார்.
அவருக்கு இன்னும் அதிகப் பொறுப்புடன் கூடிய உயர் பதவியான செக்யூரிடி பிரிவில் வேலை தரப்பட்டது.
எனக்கும் மகிழ்ச்சி; பாராட்டி எழுதிய எழுத்துக்கும் ஒரு மஹிமை இருப்பதைப் புரிந்து கொண்டேன். (பின்னொரு காலத்தில் அவர் துபாயில் இருப்பதாகக் கேட்டு மகிழ்ந்தேன்)
பாராட்டுகளுக்கு மிகப் பிரமாதமான பலன் உண்டு.
ஆயிரமாயிரம் பேர் மனதில் புகழ்ந்தாலும் வெளிப்படையாகச் சொல்பவர் பல்லாயிரத்தில் ஒருவர் தான்!
அதற்கு ஒரு தனிப் பெருமை உண்டு!
(இந்த சமயத்தில் திரு நஞ்சப்பா அவர்களை நினைக்கிறேன். உடனடியாக பாராட்டி கமெண்ட்ஸ் காலத்தில் தன் கருத்தைப் பதிவிடும் இவர் பல்லாயிரத்தில் ஒருவர் தான்! இவர் எந்த ஊரோ! என்ன பொறுப்பில் இருக்கிறாரோ – எனக்குத் தெரியாது. இந்த விநாடி வரை!)
இன்னும் பல சுவையான அனுபவங்கள் உண்டு என்றாலும் கூட கட்டுரை நீண்டு விட்டதால் நிறுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது!
சாரம் இது தான்!
மக்களுக்குத் தீங்கு பயக்கும் விஷயங்களைக் கண்டியுங்கள். லெட்டர்ஸ் டு தி எடிட்டருக்கு ஒரு கடிதம் போடுங்கள். பாராட்ட வேண்டியவர்களை – உங்கள் குடும்ப உறுப்பினராக இருந்தாலும் சரி, நண்பர்களாக இருந்தாலும் சரி, சமூக சேவை, எழுத்து உள்ளிட்ட பணியில் ஈடுபட்டவராக இருந்தாலும் சரி, பாராட்டுங்கள்.
பயன் உண்டு சார், பயன் உண்டு!
என் அனுபவம் பேசுகிறது!
***