12. ஜென் கோயன்கள்!

The-sound-of one hand

ச.நாகராஜன்

புதிதாகச் சேர்ந்த ஒரு ‘கற்றுக்குட்டியை’ பெரிய மாஸ்டராக – யோகியாக – துறவியாக மாற்ற ஜென் பிரிவு கடைப்பிடிக்கும் வழிமுறைகளே அலாதியானது தான்!

தியானம் ஜென் பிரிவின் முக்கிய அங்கம். ஒரு துறவியை மனரீதியாக வளப்படுத்த உள்ள வழி முறைகளில் முக்கியமான ஒன்று கோயன்! (Zen Koans) கோயன் என்பது ஒரு குட்டி உரையாடல் அல்லது கேள்வி அல்லது ஒரு புதிர்! இதற்கு பதிலை எப்படி வேண்டுமானாலும் சொன்னாலும் பக்குவப்பட்ட ஒருவர் உள்ளுணர்வு மூலம் கூறும் பதிலே உண்மையான பதிலாக அமையும்.இந்த கோயன்கள் அன்றிலிருந்து இன்று வரை குரு முகமாகவே சிஷ்யர்களுக்குச் சொல்லப்பட்டு வருகிறது.

1916ஆம் ஆண்டு ஜப்பானில் இப்படிப்பட்ட கோயன்கள் புத்தகமாகப் பிரசுரிக்கப்பட்டதோடு அதற்கான விடைகளும் அந்தப் புத்தகத்தில் தரப்பட்டிருந்த்து. இது ஜப்பானையே ஒரு கலக்கு கலக்கி விட்டது. ரகசியமாக்க் காக்கப்ப்ட்ட கோயன்கள் பகிரங்கமாக வந்து விட்டதே என்று ஜென் பிரிவினரைச் சேர்ந்த அனைவரும் மிகவும் வருத்தப்பட்டனர்.ஆனால் இப்போது ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளிலும் ஜென் கோயன்களைக் காண முடிகிறது – விடைகளோடு தான்!

ஹிரானோ சோஜோ என்ற ஒரு ஜென் மாஸ்டர் ஆங்கில கோயன்களின் புத்தகமான ‘தி சவுண்ட் ஆஃப் ஒன் ஹாண்ட்’ என்ற புத்தகத்திற்கு ஒரு முன்னுரை எழுதியுள்ளார்.காலம் மாறி வருவதற்கு இது ஒரு சான்று!

sound of one hand 2

ஒரு கோயனைப் படித்தவுடன் அது பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். உடனே விடைக்குத் தாவி விடக் கூடாது. கோயனை ஆழ்ந்து சிந்தித்த பிறகு விடையைப் பார்த்தால் உள்ளுணர்வு பெருக ஆரம்பிக்கும்.
மாதிரிக்கு இரண்டு கோயன்களைப் பார்ப்போம்.:

மாஸ்டர்: இரு கைகளையும் தட்டும் போது ஒரு ஓசை கேட்கிறது. ஒரு கையின் ஓசை என்ன?

விடை கீழே தரப்படுகிறது. ஆனால் உடனே இதைப் பார்க்காமல் சற்று சிந்தித்தலே நல்லது.

ஒரு கையின் ஓசைக்குப் பலரும் பலவிதமான விடைகளைப் “போகிற போக்கில்” தரலாம். ஆனால் அவையெல்லாம் ‘புத்த தன்மையை’ வெளிப்படுத்துவன அல்ல.

சில விடைகளைப் பார்க்கலாம்.
1)ஒரு கையின் ஓசையா? பாதி ஓசை!
2) ஒரு கையின் ஓசை மௌனம்!
3) உனது வாழ்க்கையில் ஒரு கையின் ஓசை என்ன?
4) அது அந்தக் கை எதை நோக்கி ஓசை எழுப்ப விழைகிறது என்பதைப் பொறுத்தது. யின் மற்றும் யாங் வேண்டுமல்லவா? ஆகவே இரு பகுதிகள் வேண்டும் ஓசை எழுப்ப!
5)இது ஓசையில்லா ஓசையைக் குறிக்கிறது. வாழ்க்கையை உற்றுப்பார். அதில் வரும் உணர்ச்சிகள் எத்தனை? தனிமை எப்படிப்பட்டது? அதைக் குறிக்கிறது இது!
இப்படி விடைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் ஆழ்ந்த தியானத்திலிருந்து வரும் விடையே சரியான விடை.

one hand clap

சரியான விடை: சிஷ்யர் மாஸ்டரைப் பார்க்கிறார். சரியான நிலையில் நிற்கிறார். பின்னர் ஒரு பேச்சும் பேசாமல் தனது ஒரு கையை முன்னே நீட்டுகிறார்.

கோயன்களின் விடை புரட்சிகரமானது. சம்ப்ரதாயமான -வழக்கத்தில் உள்ள – விடையாக அது இருக்காது. ஆனால் அந்த விடையில் உள்ளார்ந்த அர்த்தம் இருக்கும்!

இன்னொரு கோயனைப் பார்ப்போம்.
மாஸ்டர்: உனது கனவில் யாரோ ஒருவர் மேற்கிலிருந்து நம் ஸ்தாபகர் வருவதன் நோக்கத்தைப் பற்றிக் கேட்டால் நீ என்ன விடை தருவாய்? இதற்கு உன்னால் பதில் சொல்ல முடியவில்லை என்றால் புத்தமதம் போதிக்கும் உண்மையால் உனக்கு ஒரு பயனும் இல்லை!
சிஷ்யர்: சிஷ்யர் குறட்டை விடுகிறார். ஸ்…ஸ்… என்று குறட்டை சத்தத்தை விட்டுக் காண்பிக்கிறார்!

சில கோயன்கள் கீழே தரப்பட்டுள்ளன. ஆழ்ந்து யோசித்து உங்கள் பதிலைத் தயார் செய்யுங்கள். நினைவிருக்கட்டும்.உள்ளுணர்விலிருந்து தோன்றும் விடையே சரியான விடை!
1) இப்போது ஒரு கையின் ஓசையைக் கேட்ட நீங்கள் அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்?
2) ஒரு கையின் ஓசையைக் கேட்பது அவ்வளவு எளிது என்றால் நானும் தான் அதைக் கேட்கிறேனே?
3) ஆயிரம் மைலுக்கு அப்பால் உள்ள தீயை அணை!
4) உங்கள் கைகளைப் பயன்படுத்தாமல் என்னை நிற்க வை!
5) வானம் எவ்வளவு உயரம்?
இதற்கான விடைகளை அடுத்த வாரம் பார்க்கலாம்.

ஒரு கோயனுக்கான விடையைக் காண சில அடிப்படை விதிகளை நாம் நினைவு கொள்ள வேண்டும்.
1)ஒரு கோயனுக்கான விடை தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது.
2)கோயனில் உள்ள அபத்தமான பகுதிகளையும்,அற்புதங்களைச் சொல்லும் பகுதிகளையும் விலக்கி விட்டு பதிலைக் காண முற்பட வேண்டும்.
3)ஒரு கோயனில் உள்ள முக்கியமான பகுதியை மனதில் ஏற்றிக் கொண்டு விடை காண முற்பட்டால் உள்ளுணர்வு தோன்றும்.
4) உங்களை ஒதுக்கி விட்டு நீங்கள் அல்லாத நீங்களை மனதில் ஏற்றிக் கொண்டு விடை காண வேண்டும்,
5) சில சமயம் ஒரு கோயனுக்கான விடை சக்தி வாய்ந்த நடிப்பு தான்! குறட்டை விடுவது போல ஸ்..ஸ்.. என்றாரே சிஷ்யன் அது போல!
6)சில சமயம் மாஸ்டரை நிந்திப்பது போலவோ அவமதிப்பது போலவோ கூட விடைகள் இருக்கலாம். ஆனால் அது சரியானதாக இருந்தால் மாஸ்டர் மிகவும் மகிழ்வார்!

சின்ன உண்மை
என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா மொத்தம் 1700 கோயன்கள் இருப்பதாகத் தெரிவிக்கிறது. இரண்டு முக்கியமான கோயன்கள் அடங்கிய நூல்கள் பி-யென்–லு (100 கோயன்களின் தொகுப்பு) மற்றும் வு-மென் –க்வான். (48 கோயன்களின் தொகுப்பு) ஆகும்.

-தொடரும்
Part 12 on Zen Buddhism by S Nagarajan.
contact swami_48@yahoo.com
Pictures are taken from other sites;thanks.