தாவரங்களின் அறிவு!- Part 2

தாவரங்களின் அறிவு! -2

ச.நாகராஜன்

பேராசிரியர் மங்குசா தாவரங்கள் தங்களுடைய தகவல் தொடர்பை இரசாயனப் பொருள்கள் மூலம் பரிமாறிக் கொள்கின்றன என்கிறார்!  எச்சரிக்கை அறிவிப்பு,ஆரோக்கிய உணர்வு போன்றவற்றை அறிவதற்கு நம்மிடம்   அகராதிச் சொற்கள் இருப்பது போல அவைகளிடமும் உள்ளன என்பது அவரது கணிப்பு!

ஆனால் மங்குசாவிற்கு முன்னாலேயே சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே நம் நாட்டைச் சேர்ந்த சர் ஜகதீஸ் சந்திர போஸ் தாவரங்களுக்கும் உயிர் உண்டு, உணர்ச்சிகள் உண்டு என்பதைச் சோதனைகள் வாயிலாகச் செய்து காட்டி நிரூபித்திருக்கிறார்!

வங்காளத்தில் பிறந்த ஜகதீஸ் சந்திர போஸ் (பிறப்பு 18-11-1858 மறைவு 23-11-1937) இங்கிலாந்தில் படித்தவர். தாய்நாடு திரும்பியவுடன் கல்கத்தா பிரஸிடென்ஸி கல்லூரியில் விரிவுரையாளரானார். 1894ல் கல்லூரியில் பாத்ரூமுக்கு அருகில் இருந்த ஒரு சிறிய அறையைத் தன் சோதனைச்சாலையாக மாற்றித் தன் ஆராய்ச்சிகளைத் தொடங்கலானார். மார்க்கோனி ரேடியோ அலைகளைக் கண்டுபிடிக்கும் முன்னரே 1895ம் ஆண்டு அவர் இதைப் பொதுமக்களிடம் பகிரங்கமாக செயல்முறை வடிவில் நிரூபித்துக் காட்டினார்.

இiதற்காக அவர் ஒரு விசேஷ கருவியை உருவாக்கினார். இதற்கு ரெஸோனேட் ரிகார்டர் (Resonate Recorder) என்று பெயர். இந்தக் கருவி தாவரங்களுக்கும் நாடித்துடிப்பு உண்டு என்பதைத் துல்லியமாக நிரூபித்துக் காட்டியது! இந்தச் சோதனையை நடத்துவதற்காக மிகுந்த கவனத்துடன் அவர் ஒரு செடியை வேருடன் தோண்டி எடுத்து அதைத் தன் கருவியுடன் இணைத்தார். செடியை புரோமைட் அடங்கிய ஒரு பாத்திரத்தில் அப்படியே தண்டுடன் வைத்தார்.

கடிகாரப் பெண்டுலம் அங்கும் இங்கும் ஊசலாடுவது போல ஆடிய அந்தக் கருவியின் முள் திடீரென்று சீரற்றதாக மாறி வேகமாக அங்கும் இங்கும் ஆடியது. பிறகு வேகமாக நடுநடுங்கி ஆடத் துவங்கியது. சடக்கென ஆட்டத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து நின்றது. அதன் உயிர் போனதை இவ்வாறு அது தெரிவித்தது! விஷத்தால் அதன் உயிர் போனது.

1900ம் ஆண்டு பாரிஸில் நடந்த ஒரு மகாநாட்டிலும் பிறகு இங்கிலாந்திலும் தனது சோதனைகளை அவர் நடத்திக் காட்டினார்.செடிகள் வெட்டப்பட்ட போது அவைகள் துடிதுடித்து அழுவதை அவர் காண்பித்த போது உலகமே அதிசயித்தது!

போஸ் காட்டிய வழியில் இப்போது அறிவியல் வெகுவாக வளர்ந்து விட்ட இன்றைய உலகில் பல்வேறு விதமான அதிசய சோதனைகளை இன்னொரு விஞ்ஞானிச் செய்து காட்டி வருகிறார். இவர் பெயர் க்ளீவ் பாக்ஸ்டர். (Cleve Backster)இவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்.

லை டிடெக்டர் (Lie detector) என்ற பொய்யைக் கண்டுபிடிக்கும் கருவி பற்றி நாம் அனைவரும் அறிவோம். ஒரு நாள் இந்த லை டிடெக்டரை ட்ராகன் ட்ரீ (Dracaena)எனப்படும் அரக்க மரத்துடன் அவர் இணைத்துப் பார்த்தார். வேரில் தண்ணீர் ஊற்றப்படும் போது இலைகள் அதை எவ்வளவு நேரத்தில் உணர்கின்றன என்று கண்டுபிடிப்பதே அவர் ஆய்வின் நோக்கம்.

கொள்கை ரீதியாகப் பார்த்தால் ஒரு தாவரமானது நீரை உறிஞ்சியவுடன் தடையைத் (Resistance) தளர்த்திக் கடத்தலை (Conductivity) அதிகரிக்க வேண்டும். ரிகார்டரில் இதற்கான வளைவு மேல் நோக்கிச் செல்ல வேண்டும். ஆனால் உண்மையில் நடந்ததோ வளைவு ரிகார்டரில் கீழ் நோக்கிச் சென்றது!

அதாவது லை டிடெக்டரை ஒரு மனிதனுடைன் இணைத்துச் சோதனை செய்யும் போது அது அவனது மூட் எனப்படும் நிலைகளுக்கு ஏற்றார் போல கருவியில் வெவ்வேறு வளைவுகளைக் காண்பிக்கும்.

ட்ராகன் ட்ரீயில் ஏற்பட்ட விளைவு  மனிதனிடம் ஏற்படும் நிலை மாற்றத்தால் உருவாகும் வளைவுகளைப் போல அமைந்திருப்பதைக் கருவி உணர்த்தியது! நீரை உறிஞ்சியவுடன் அது சந்தோஷமாக இருப்பதை அது காட்டியது!

ஈ.எஸ்.பி. (ESP- Extra Sensory Perception) எனப்படும் அதீத புலன் உணர்வு கூட தாவரத்திற்கு உண்டு. இதையும்  நிரூபிக்கும் வகையில் அவர் பல சோதனைகளை நடத்திக் காட்டினார்!

ஒரு மனிதனை திடீரென பயமுறுத்தினால் அவனிடம் அது ஏற்படுத்தும் விளைவு அவனை நிலைகுலையச் செய்வதன் மூலம் காண்பிக்கும். உடனடி எதிர்விளைவைக் காண பயமுறுத்திப் பார்ப்பது ஒரு சிறந்த வழி என்பதை பாக்ஸ்டர் உணர்ந்திருந்தார்.

ஆகவே செடியினுடைய இலைகளை சூடான காப்பியில் அமுக்கிப் பார்த்தார். ஆனால் விளைவுகள் ஏதும் உடனடியாகத் தெரியவில்லை. சரி, இன்னும் சற்றுக் கடுமையான சோதனையைச் செய்து பார்க்க வேண்டும் என்று அவர் தீர்மானித்தார்.

இலைகளை எரித்து விட்டால் என்ன என்று எண்ணி அவர் ஒரு தீப்பெட்டியை எடுத்தது தான் தாமதம், லை டிடெக்டருடன் இணைக்கப்பட்டிருந்த கிராப் பேப்பரில் ஒரு வளைவு வேகமாகத் தோன்றியது! கொளுத்தப்பட்ட தீக்குச்சியுடன் அவர் இலைகளை நெருங்கியவுடன் இன்னொரு வளைவு இன்னும் வேகமாக உருவானது!

நிச்சயமாக ஒரு மனிதன் தன்னை எரிக்கப்  போகிறான் என்ற உணர்வு செடிக்கு ஏற்பட்டு உறுதியானவுடன் அது தன் பயத்தை வேகமாகக் காட்டியது.

ஆனால் எரிப்பது போல பாவனை செய்தாலோ அல்லது சற்று தாமதப்படுத்தினாலோ அது தன் பயத்தைக் காண்பிக்கவில்லை! ஆகவே மனித மனதில் தோன்றும் உண்மையான எண்ணத்தை புலன் கடந்த அதீத புலனாற்றலால் அது உணர்கிறது என்பதை அவர் கண்டார். இந்த அதிசய அனுபவம் அவரை மேலும் பல சோதனைகளைச் செய்ய வழி வகுத்தது!

மேலும் சோதனைகள் தொடரும்!

 

Leave a comment

Leave a comment