தாவரங்களின் அறிவு!–பகுதி 3

ச.நாகராஜன்

பாக்ஸ்டரும் அவரது சகாக்களும் நாடெங்கும் சென்று பல்வேறு கருவிகள் வாயிலாக ஏராளமான சோதனைகளை நடத்த ஆரம்பித்தனர். முடிவுகள் அனைத்தும் தாவரங்கள் கொண்டிருக்கும் அதீத புலன் ஆற்றலை மீண்டும் மீண்டும் நிரூபித்தன!

ஒரு தாவரத்தின் இலைகளைப் பறித்து அதைத் துண்டுகளாக்கி  லை -டிடெக்டரின் எலக்ட்ரோடுகளின் அருகே வைத்த போதும் கூட இதே முடிவுகள் வெளியாயின! ஒரு நாயோ அல்லது அறிமுகமில்லாத, நட்பில்லாத நபர் யாராவது வந்தால் எதிர்மறை விளைவுகளை தாவரம் காண்பித்தது.

முதலில், நாம் லை – டிடெக்டர் எப்படி வேலை செய்கிறது என்பதைச் சற்று அறிய வேண்டும். அதன் எலக்ட்ரோடுகள் பொய் சொல்கிறாரோ என்று சந்தேகப்படும் நபருடன் இணைக்கப்படுகிறது. பிறகு அவரிடம் நன்கு வடிவமைக்கப்பட்ட கேள்விக் கணைகள் சரமாரியாக வீசப்படும். ஒவ்வொருவருக்கும் அற்புதமான பிரக்ஞை என்ற உணர்வு (consciousness)இருக்கிறது.ஆகவே எவ்வளவு தான்  முயன்றாலும் காரணங்கள் பலவற்றைக் கண்டுபிடித்துக் கூறினாலும் ஒரு பொய்யைக் கூறும் போது பிரக்ஞைக்கு அது நிச்சயமாகப் பொய் என்று தெரியும்.ஆகவே உடலில் உள்ள மின்சார தளம் (electric field) மாறுகிறது.இந்த மாறுதலை ரிகார்டர் துல்லியமாகப் பதிவு செய்கிறது.இதுவே லை – டிடெக்டர் வேலை செய்வதன் அடிப்படைத் தத்துவம்!

 

பாக்ஸ்டர் விநோதமான ஒரு சோதனையைச் செய்து பார்த்தார். லை – டிடெக்டரை ஒரு தாவரத்துடன் முதலில் இணைத்தார். பிறகு சோதிக்க வேண்டியவரிடம் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். அந்த மனிதர் பொய் சொல்கிறாரா இல்லையா என்பதைத் தாவரம் துல்லியமாகக் கண்டுபிடித்தது! அவரிடம் நீ பிறந்த  வருடம் எது என்று பாக்ஸ்டர் கேட்டார். ஏழு வருடங்களை விருப்பத்தேர்வுகளாகத் தந்தார். சரியான வருடத்தைச் சொன்ன போதும் கூட‘இல்லை’ என்று அவர் கூறினார். சரியான வருடத்தை அவர் ‘இல்லை’ என்று கூறி பொய் சொன்னபோது  தாவரம் அதை உணர்த்திக் காட்டியது! கிராப் பேப்பரில் உச்சகட்டத்தை வரைந்து அவர் பொய் சொல்கிறார் என்பதை உணர்த்தியது!

 

நியூயார்க்கில் உள்ள ராக்லேண்ட் ஸ்டேட் ஹாஸ்பிடலில் அதன் மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவின் டைரக்டராகப் பணியாற்றி வருபவர் டாக்டர் அரிஸ்டைட் எஸ்ஸர் (Dr Aristide Esser). அவர் ஒரு சோதனைக்குள்ளாகும் மனிதரிடம் தாம் கேட்கும் கேள்விகளுக்குத் தப்பான பதிலைத் தருமாறு கூறினார். அந்த தாவரம் தப்பான பதிலைத் தரவிருக்கும் அதே நபர் வளர்த்தது தான்! என்றாலும் கூட பொய் கூறிய போது தன் எஜமானரை அது ‘காப்பாற்றவில்லை’; மாறாகக் ‘காட்டிக் கொடுத்தது!’

 

சரியில்லாத பொய்யான பதில்கள் கிராப் பேப்பர் பதிவுகள் மூலம் சுலபத்தில் அறியப்பட்டன! பாக்ஸ்டரை நம்பிய போதும் கூட எஸர் தானே சோதனைகளை நேரடியாகச் செய்து பார்க்க வேண்டும் என்று விரும்பினார்; செய்து பார்த்து திருப்தி அடைந்தார். பாக்ஸ்டரின் கொள்கைகள் மற்றும் சோதனை முடிவுகள் அனைத்தும் உண்மையே என்று கண்டறிந்தார்.

 

இன்னொரு சோதனையையும் பாக்ஸ்டர் நடத்தினார். இதில் ஆறு மாணவர்கள் அழைக்கப்பட்டனர். அவர்கள் கண்கள் கட்டிவிடப்பட்டது.ஒரு தொப்பியில் போடப்பட்ட பேப்பர் சுருள்களிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்குமாறு அவர்களிடம் கூறப்பட்டது. சோதனை நடந்த அறையில் இரண்டு செடிகள் இருந்தன.

 

ஒரு பேப்பர் சுருளில் இரண்டு செடிகளில் ஒன்றை வேருடன் பிடுங்கி தரையில் போட்டு அதைத் தேய்த்து அழிக்குமாறு எழுதப்பட்டிருந்தது. இப்படி ஒரு செடியைக்‘கொலை செய்பவர்’ யார் என்று பாக்ஸ்டர் உள்ளிட்ட யாருக்குமே தெரியக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காகவே கண்கள் கட்டப்பட்டது. ஒருவரது எண்ணம் இன்னொருவருக்குத் தெரியாது; யார் செய்வதையும் யாரும் பார்க்க முடியாது – இரண்டு செடிகளைத் தவிர!

ஒரு செடி கொல்லப்படும்! அதைப் பார்க்கும் நேரடி சாட்சியாக இன்னொரு செடி இருக்கும். நடந்தது என்ன?

-தொடரும்

 

Leave a comment

Leave a comment