ஏழு லட்சம் கதைகளையும் ஜோதிட மகரந்தத்தையும் எழுதிய குணாத்யர்!

(This article is part of Astrological Greats of Ancient India written by S Nagarajan. Please read his previous posts in this series) 

ஏழு லட்சம் கதைகளையும் ஜோதிட மகரந்தத்தையும் எழுதிய குணாத்யர்!

by ச.நாகராஜன்

 

ப்ருஹத் கதா எழுதிய பேரறிஞர்

 

ஜோதிடக் கலை வளர்ச்சியில் சமணர்களின் பங்கு ஏராளம் உண்டு.நீதி நெறி நூல்களோடு ஜோதிட நூல்களையும் சமண அறிஞர்கள் நிறையவே எழுதி உள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இவர்களைப் பற்றிய உண்மைகளை இன்றைய உலகம் அறியவில்லை. மிக பிரம்மாண்டமான அறிவுக் கதைக் களஞ்சியத்தின் ஆரம்பகர்த்தா ஒரு சமணரே என்பது வியப்பாக இல்லை?

 

குணாகரர் அல்லது குணாத்யர் என்ற பெயருள்ள இந்தப் பேரறிஞர் ப்ருஹத் கதா மற்றும் ஜோதிட நூலான ஹோரா மகரந்தம் ஆகிய நூல்களை இயற்றியவர். குந்தள அரசனான சதகர்ணியின் மந்திரியாக இவர் இருந்தார். இவரது வரலாறு மிக மிக சுவாரசியமானது.

 

ஹோரா மகரந்தம்

 

குணாகரர் தொன்று தொட்டு இருந்த அனைத்து ரிஷிகளின் நூல்களையும் இதர ஜோதிட மேதைகளின் நூல்களையும் ஒன்று விடாமல் கரைத்துக் குடித்தார். தேனீ எப்படி பல்வேறு மலர்களை நாடி மலர்களின் மதுவை அருந்தி தேனைத் தருகிறதோ அதே போல பத்ராயணர்,வசிஷ்டர், பராசரர் உள்ளிட்ட அனைத்து ரிஷிகளின் நூல்களிலும் உள்ள நல்ல நல்ல அம்சங்களையும் தொகுத்து ஒரு நூலைத் தயாரித்தார். அதற்கு மகரந்தம் என்ற  பொருத்தமான பெயரையும் தந்தார். இந்த ரிஷிகளின் ஸ்லோகங்களை சரளமாக அவர் ஆங்காங்கே எடுத்துக் காட்டி அவர் காலம் வரை இருந்த கருத்துக்களை அற்புதமாகத் தொகுத்து ஹோரா மகரந்தத்தை சம்ஸ்கிருத மொழியில் உருவாக்கினார். ஜோதிடத்தில் வரும் கலைச் சொற்களின் விளக்கம், கிரஹங்களின் வலிமை, மனிதப் பிறவியல்லாதவற்றின் பிறப்புகள், மனிதப் பிறவியில் பிறக்கும் போது உள்ள நிலைகள், ஆயுள் பாவம், யோகங்கள், கிரகங்களினால் ஏற்படும் தீய பலன்கள், தசா புக்தி காலங்களும் அவற்றின் பலன்களும், கிரக சேர்க்கைகளும் அதனால் ஏற்படும் பலன்களும், கிரகங்களின் கிரணங்களால் ஏற்படும் பலன்கள் என இப்படி அபூர்வமான அனைத்து விஷயங்களையும் அலசி ஆராய்ந்து விடுகிறார் குணாகரர் தனது நூலில்.இந்த நூல் இவர் அமைச்சராக இருந்த போதே எழுதப்பட்டது.

 

பைசாச மொழியில் ஏழு லட்சம் கதைகள்!

 

சம்ஸ்கிருதத்தையே தனது மொழியாகக் கொண்டிருந்த இவர் வாழ்க்கையில் திடீரென்று ஒரு சம்பவம் நேரிட்டது. ஒரு நாள் அரசவையில் பெரும் வாதப் போர் ஒன்று நிகழ்ந்தது. அதில் பங்கேற்ற குணாகரர் அதில் தோற்று விட்டார். இதனால் மனம் உடைந்த அவர் பதவியைத் துறந்து விட்டுத் தவம் செய்வதற்காக காடு சென்றார். வாதத்தில் தோற்றதை அடுத்து இவர் சம்ஸ்கிருத மொழியை விட்டு விட்டார். பைசாச பாஷை எனப்படும் ப்ராக்ருத பைசாச பாஷையைப் பயன்படுத்த ஆரம்பித்தார். ஒரு நாள் காட்டில் கணபூதி என்னும் கணம் ஒன்று கதைகளைச் சொல்ல ஆரம்பித்தது. பைசாச பாஷையைக் கேட்கும் திறன் கொண்டிருந்த குணாகரர் அதிசயமான அபூர்வமான அந்தக் கதைகளில் லயித்துப் போனார். ஒன்றல்ல, இரண்டல்ல ஏழு லட்சம் கதைகளை கணபூதி சொல்ல அவற்றை குணாகரர் கேட்டார். இந்தக் கதைகளினால் உத்வேகம் அடைந்த அவர் ஏழு லட்சம் கதைகளையும் தன் இரத்தத்தினால் பைசாஷ பாஷையில் எழுதி முடித்தார்! தான் எழுதியவற்றை அரசனுக்குச் சமர்ப்பிக்க எண்ணினார். ஆனால் அரசனோ சம்ஸ்கிருத பாஷையின் மீது அடங்காத காதல் கொண்டவன். அவன் பைசாஷ பாஷையில் இருந்த நூலை அங்கீகரித்து ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டான். இதனால் வருத்தமுற்ற குணாகரர் தான் எழுதிய நூலின் ஓலைச் சுவடிகளை ஒரு பெரிய தீயை வளர்த்து அதில் ஒவ்வொன்றாகப் போட ஆரம்பித்தார். ஆறு லட்சம் கதைகள் தீக்கு இரையான சமயத்தில் நடந்த விஷயங்களைக் கேள்விப்பட்டும் கண்ணால் கண்டும் அவரது சீடர்கள் மனம் கலங்கி அழுதனர். இந்த சீடர்களில் தாவரங்களும் பைசாசங்களும்(பிசாசு அல்லது பேய் என்று வழக்கில் கூறப்படுவது) இருந்தன.  மனிதர்களும் இருந்தனர்.  ஆறு லட்சம் கதைகள் தீக்கு இரையாகி விட்ட செய்தி\யைக் கேட்ட மன்னன் மனம் கலங்கிப் பதறிப் போனான். குணாகரரை அணுகி அவரைத் தடுத்து நிறுத்தி ஒரு லட்சம் கதைகளைக் காப்பாற்றினான். இந்த ஒரு லட்சம் கதைகளே ப்ருஹத் கதா (பெரிய கதை நூல்) என்ற பெயரைப் பெற்று பெரும் புகழை அடைந்தது.

 

 

கதாசரித் சாகரமும், பஞ்சதந்திரமும்

 

பின்னால் பதினொன்றாம் நூற்றாண்டில் காஷ்மீரில் பிறந்த சோமதேவர் என்னும் பண்டிதர் 124 அத்தியாயங்கள் கொண்ட 22000 செய்யுள்கள் அடங்கிய  கதா சரித் சாகரம் என்ற நூலை ப்ருஹத் கதாவை அடிப்படையாகக் கொண்டே எழுதினார். பின்னர் பஞ்சதந்திரம் (ஹிதோபதேசம் உள்ளடங்கியது) இதே நூலை அடிப்படையாகக் கொண்டு பிறந்தது. இந்த கதைகளின் அற்புதத் தொகுப்பைக் கண்டு வியந்த சி.ஹெச்.டானி என்பவர் இதை ஆங்கிலத்தில் 1880-1884 ஆண்டுகளில் மொழிபெயர்த்தார். மேலை உலகம் இதைக் கண்டு வியந்தது.பின்னர் 1927ல் இவற்றைப் படித்து உத்வேகம் பெற்ற என்,எம்பென்ஜர் என்பவர் ஓஷியன் ஆப் ஸ்டோரீஸ் என்ற பெயரில் கதைக் கடலை மீண்டும் மொழி பெயர்த்தார்.பஞ்ச தந்திரம் முதலிய கதைகளோ கி,பி. 750ல் பெர்சிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. பின்னர் ஹீப்ரு,லத்தீன், கிரேக்கம், ஆங்கிலம்,பிரெஞ்சு, ஸ்பெயின் உள்ளிட்ட ஏராளமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகெங்கும் பரவியது.

 

ஆக உலகிற்கே கதைச் செல்வத்தை வழங்கியவர் பாரதத்தைச் சேர்ந்த ஒரு பிரபல ஜோதிடரே என்பதையும் அவர் மகரந்தம் வழங்கிய மாமேதை என்பதையும் அறிந்து நாம் பெருமைப் படலாம்!

*****************

Leave a comment

Leave a comment