மாமன்னன் வல்லாளன் எழுதிய அற்புத நூல்!

Picture shows Edilpur Copper Plate of Sena Dynasty

மாமன்னன் வல்லாளன் எழுதிய அற்புத நூல்!

By ச.நாகராஜன் 

 

வங்க மன்னன் வல்லாளன் 

வங்காளத்தை ஆண்ட ஒரு மா மன்னன் நாட்டை ஆளுவதில்  வல்லவனாக இருந்ததோடு ஜோதிடத்திலும் வல்லவனாக இருந்தான் என்றால் ஆச்சரியமான விஷயம் தானே அது! சேனர் வமிசத்தைச் சேர்ந்த மன்னன் வல்லாள சேனன் (கி.பி.1160 முதல் 1178ம் ஆண்டு முடிய அரசாண்டவன் ) பல சமூக சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தவன்.பகைவர்களுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய மாவீரன்.அவனைப் பற்றிய தாமிரச் செப்பேடுகள் அவன் புகழைப் பாடுகின்றன.மகதத்தில் நிகழ்ந்த போரில் பால வமிசத்தைச் சேர்ந்த மன்னர்களை அவன் வென்றான்.வல்லாள சேனரின் தந்தையான விஜய சேனர் அரசாண்ட போதே வல்லாளன் மிதிலைக்கு எதிரான போரில் அவருடன் சென்று வெற்றிக் கொடியை நாட்டினான். சாளுக்கிய ராணியான ராம்தேவியை மணம் புரிந்து கொண்டான்.

 

தன சாகரம் மற்றும் அற்புத சாகரம் 

வல்லாளன் பல் கலை வித்தகன். பேரறிஞன். ஜோதிடத்தில் புலி. சிறந்த சிவ பக்தன்.தனசாகர் என்ற நூலை 1168ம் ஆண்டு அவன் இயற்றினான். அடுத்து அற்புத சாகரம் என்ற ஜோதிட நூலை 1169ம் ஆண்டு எழுதலானான். ஆனால் அபூர்வமான இந்த நூல் முற்றுப் பெறவில்லை.18 ஆண்டுகள் நாட்டைத் திறம்பட ஆண்ட வல்லாளன் இறுதிக் காலத்தில் தன் மகன் லக்ஷ்மண சேனரிடம் ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்து விட்டு தன் மனைவியுடன் திரிவேணி சங்கமத்தின் அருகே கங்கைக் கரையில் அழகுற ஆசிரமம் ஒன்றை அமைத்துத் தங்கி இருந்தான். இப்போதைய பங்களா தேஷில் டாக்காவில் உள்ள தாகேஸ்வரி ஆலயத்தை நிர்மாணித்தவன் இவனே என்று ஆராய்ச்சி அறிஞர்கள் கருதுகின்றனர்.தனக்கு முன்னால் ஜோதிடத்தில் வல்லவர்களாக இருந்த அனைத்து ரிஷிகள், மேதைகள் ஆகியோரின் நூல்கள் அனைத்தையும் வல்லாளன் முதலில் கற்றுத் தேர்ந்தான். பின்னர் தான் கண்டு பிடித்த அரிய முத்தான கருத்துகளைத் தொகுத்து அற்புத சாகரம் என்ற நூலை எழுதலானான்.

 

அற்புத சாகரம்

 பராசரர்,காஸ்யபர்,கர்கர்,வராஹமிஹிரர்,ரிஷிபுத்திரர்,வஸந்தராஜர்,  பிரம்மகுப்தர், பட்ட பலபத்ரா உள்ளிட்ட ஏராளமான மேதைகளை வல்லாளன் குறிப்பிடுவதால் இவன் அத்துணை பேரையும் நன்கு அறிந்தவன், அவர்களின் நூல்களைக் கரைத்துக் குடித்தவன் என்பது தெளிவாக விளங்குகிறது!தனது புதுமையான நூலின் அத்தியாயங்களுக்கு அத்தியாயம் என்றோ அதிகாரம் என்றோ பெயர்களைச் சூட்டாமல் சுழல் என்று பெயரைச் சூட்டினான் வல்லாளன். இதன் படி இவனது அற்புத சாகரத்தில் பூனைச் சுழல், நாய்ச் சுழல், நரிச் சுழல்,பல்லிச் சுழல், எறும்புச் சுழல், பறவைச் சுழல்,ஈச் சுழல், கொதுகுச் சுழல், சிலந்திச் சுழல், வண்டுச் சுழல், தவளைச் சுழல், கருங்குருவிச் சுழல்,கிருஷ்ணபட்சிச் சுழல், காகச் சுழல், இடிச் சுழல், பரிதி வட்டச் சுழல் என்பன போன்ற சுழல்கள் ஏராளம் உள்ளன். ஒவ்வொரு சுழலும் ஏன் ஏற்படுகிறது,அவரவர் கர்ம வினைக்கு ஏற்ப நவ கிரகங்கள் தரும் பலன்கள் என்னென்ன என்பனவற்றை அவன் விளக்கும் விதமே சுவாரசியமானது! சப்தரிஷி மண்டலத்தின் தோற்றத்தையும் வல்லாளன் அழகுற விவரிக்கிறான். பூமி, ராகு, கேதுக்கள் பற்றிய இவனது ஆராய்ச்சி பல புதிய உண்மைகளை விளக்குகிறது.

 

ஜோதிடத்தில் ஒரு மா மன்னன் ஆர்வம் உடையவனாக இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால் அதில் வல்லவனாகி ஆராய்ச்சிகள் செய்து புதிய பாணியில் சிறந்த கருத்துக்களைக் கொண்ட ஒரு நூலை எழுதியது தான் அற்புதமான விஷயமாக ஆகிறது. அற்புத சாகரத்தை எழுதிய மன்னன் அற்புத மன்னனே எனச் சொல்ல வைக்கிறது.

 

My brother S Nagarajan’s other articles on Astrology, Astrologers and Astronomers are available on this blog. Please read them: swami.

Contact swami_48@yahoo.com

 

****************

Leave a comment

Leave a comment