
ராமாயண வழிகாட்டி
அத்தியாயம் – 1
ச.நாகராஜன்
வால்மீகி முனிவரால் இயற்றப்பட்ட ராமாயணத்தில் இல்லாத நன்னெறிகளே இல்லை. வேதத்திற்குச் சமானம் என்று ஆன்றோர்களால் கொண்டாடப்பட்ட இந்த நூலை தினமும் பாராயணம் செய்ய வேண்டும் என்பது அவர்களின் அறிவுரை!
சூக்தி சதகம் என்னும் சுபாஷித தொகுப்பு நூலில் வரும் ஒரு அற்புதமான கவிதை வால்மீகியை ராம ராம என்று கூவும் குயில் என்று வர்ணிக்கிறது. ராமாயணத்தை பாராயணம் செய்யும் பக்தர்கள் முதலில் சொல்லும் ஸ்லோகங்களில் இதுவும் ஒன்று.
கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம் I
ஆருஹ்ய கவிதா ஷாகாம் வந்தே வால்மீகி கோகிலம் II
ஆருஹ்ய கவிதா ஷாகாம் – கவிதை என்னும் மரத்தின் உச்சியில் ஏறி
கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம் – ராம ராம என்னும் இனிய அக்ஷரங்களை இனிமையாகக் கூவும்
வந்தே வால்மீகி கோகிலம் – அந்த வால்மீகி என்னும் குயிலை வணங்குகிறேன்
முதல் காவியத்தை இயற்றியதால் வால்மீகி ஆதி கவி எனப்படுகிறார். முதல் காவியம் ராமாயணம் என்பதால் இது ஆதி காவியம் என அழைக்கப்படுகிறது. கவிதையின் சிகரத்தில் ஏறியவர் என்பதோடு ராம நாமத்தைக் கூவிக் கூவிப் பாடும் குயில் என வால்மீகி அழைக்கப்படுகிறார்.
24000 ஸ்லோகங்களில் ஏகைகமக்ஷரம் ப்ரோக்தம் மஹாபாதக நாசனம் என்று ஒரு அக்ஷரத்தைச் சொன்னாலே மஹா பாதகங்களும் நாசமடையும் என்று உறுதி சொல்லப்பட்டிருப்பதால் முடிந்த அளவு அதை நாம் கற்று பாராயணம் செய்வது நலம் பயக்கும்.
ராமாயணத்தில் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில நல்ல ஸ்லோகங்களை இனம் காட்டும் முயற்சியே ராமாயண வழிகாட்டி.
இதன் மூலம் மூல ராமாயணத்தின் அனைத்து ஸ்லோகங்களையும் படிக்கும் ஆசை எழுந்தால் அதுவே இந்த முயற்சிக்கான வெற்றி.
மனப்பூர்வமாகக் கொண்டாடப்பட வேண்டியவர்கள் யார்?
தன்யா: கலு மஹாத்மானோ முனயஸ்த்யக்த கில்பிஷா
ஜிதாத்மானோ மஹாபாகா யேஷாம் நஸ்த: ப்ரியா ப்ரியே
எவர்களுக்கு சுகதுக்கம் இரண்டும் இல்லாமல் இருக்கின்றதோ அவர்கள் தான் மஹாத்மாக்கள். ஜிதேந்திரியர்கள். மஹாபாக்கியசாலிகள்.முனிவர்கள்.தன்யர்கள். மனப்பூர்வமாகக் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.
(கொடிய ராக்ஷஸிகள் சீதையை மிரட்ட வருந்தி சீதை புலம்பும் போது கூறியது – வால்மீகி ராமாயணம்; சுந்தர காண்டம் இருபத்தாறாவது ஸர்க்கம் 49ஆம் ஸ்லோகம்)
மஹான்களுக்கு சீதையின் நமஸ்காரம்
ப்ரியாந்ந ஸம்பவேத் து:க்க
மப்ரியா ததிகம் பயம்
தாப்யாம் ஹி யே வியுஜ்யந்தே
நமஸ்தேஷாம் மஹாத்மனாம்
சுகமெனக் கொண்டதால் மன அஸந்துஷ்டி இல்லாதிருக்கிறது. துக்கமெனக் கொண்டதால் அனாவஸ்யமான மன ஏக்கம் உண்டாகிறது. எவர்கள் அவ்விரண்டுகளாலும் விடுபட்டிருக்கிறார்களோ அந்த மஹாத்மாக்களுக்கு நமஸ்காரம்
(கொடிய ராக்ஷஸிகள் சீதையை மிரட்ட வருந்தி சீதை புலம்பும் போது கூறியது – வால்மீகி ராமாயணம்; சுந்தர காண்டம் இருபத்தாறாவது ஸர்க்கம் 50ஆம் ஸ்லோகம்)
மஹாத்மாக்களை நமஸ்கரிப்பதால் ஆபத்து, மா சம்பத்து ஆகி விடுகிறது! By S Nagarajan
****************