Pictures of Shiva and Brahma
சம்ஸ்கிருதச் செல்வம்-5
புலவரின் வேதனை: சிவன் இப்படிச் செய்யாமல் விட்டு விட்டானே!
By ச.நாகராஜன்
பொல்லாத வார்த்தைகளில் ஒன்று விதி என்பது! புரிந்து கொள்ள முடியாததும் கூட!
சோக மனத்துடன் வருந்தும் ஒருவனுக்கு ஆறுதல் அளிக்கிறார் ஒரு புலவர் இப்படி:-
ஏன் அதிகமாக சிந்திக்கிறாய்?
கிம் சிந்த்தேன பஹுனா?
ஏன் அவன் சோக மனத்துடன் வருந்துகிறான்?
கிம் வா சோகேன மனஸி நிஹிதேன?
முன் நெற்றியில் விதியால் என்ன எழுதப்பட்டிருக்கிறதொ அது நிச்சயம் நடக்கும்!
தன்னிஸ்சித்தம் பவிஷ்யதி
விதினா லிகிதம் லலாடே யத்
தீர்க்கமாக விதியைப் பற்றிச் சொல்லி விட்டார் அவர் இப்படி:-
கிம் சிந்த்தேன பஹுனா?
கிம் வா சோகேன மனஸி நிஹிதேன? I
தன்னிஸ்சித்தம் பவிஷ்யதி
விதினா லிகிதம் லலாடே யத் II
(லலாடம் – முன் நெற்றி லிகிதம் – எழுதப்பட்டது)
ஆனால் இன்னொரு புலவரோ உலகத்தில் நடப்பதை எல்லாம் நன்கு கூர்ந்து கவனிக்கிறார். நல்லவனுக்கு ஏகப்பட்ட சோதனைகள்! தீயவர்களோ கொடி கட்டிப்
பறக்கிறார்கள். செல்வத்தில் புரள்கிறார்கள்.
அனைவரையும் இஷ்டத்திற்கு வாட்டுகிறார்கள். இது சரியா? விதி இப்படி இருக்குமானால் அது சரி இல்லையே! வருகிறது கோபம் அவருக்கு. சிவன் செய்தது சரி இல்லை என்று ஒரே போடாகப் போடுகிறார் சிவன் மேல் ஏன் கோபம்? சிவனுக்கும் விதிக்கும் என்ன சம்பந்தம்?
அனுசிதமேவாசரிதம்
பசுபதினா யத்திதே: சிரச்சின்னம்
சிவன் செய்தது முறையில்லை. பிரம்மாவின் தலையை மட்டும் தான் அவர் அறுத்தெறிந்தார்.
சின்னோ ந சாஸ்ய ஹஸ்தோ
யேனாயம் துர்லிபிம் லிகதி
எந்தக் கையால் மோசமான எழுத்துக்களை (விதியை) அவர் எழுதுகிறாரோ அந்தக் கையை அறுக்கவில்லையே!
பாடலை முழுதுமாகப் பார்ப்போம்:-
அனுசிதமேவாசரிதம்
பசுபதினா யத்திதே: சிரச்சின்னம் I
சின்னோ ந சாஸ்ய ஹஸ்தோ
யேனாயம் துர்லிபிம் லிகதி II
(அனுசிதம் – முறையில்லை; பசுபதி – சிவன் துர்லிபி – மோசமான எழுத்து – அதாவது விதி)
பிரம்மாவின் தலையை அறுத்து என்ன பிரயோஜனம்? மோசமான விதியை எழுதும் பிரம்மாவின் கையை அல்லவா சிவன் அறுத்தெறிந்திருக்க வேண்டும்!
நாட்டு நடப்பைப் பார்த்தால் கவிஞரின் கோபம் நியாயமானது தான் என்று நமக்கும் அப்படியே தான் தோன்றுகிறது. ஆனால் விஷயம் பற்றி நன்கு ஆய்ந்த கவிஞர் இதற்குச் சமாதானம் கூறுகிறார் இப்படி:-
க்ருத கர்மக்ஷயோ நாஸ்தி
கல்பகோடி ஷதைரபி I
அவஸ்யமேவ போக்தவ்யம்
க்ருதம் கர்ம சுபாசுபம் II
ஒருவன் செய்த கர்மம் அவனை கோடி கல்பம் சென்றாலும் விடாது. அவன் செய்ததற்கான பலனை அனுபவித்தே ஆக வேண்டும். அது நல்ல செயலோ அல்லது கெட்ட செயலோ பலனை அனுபவித்தே ஆக வேண்டும்!
க்ருத கர்மம் – ஒருவன் செய்த செயல்களின்
க்ஷயோ நாஸ்தி –விளைவுகள் நாசமடைவதில்லை
அவஸ்யம் ஏவ –நிச்சயமாக
போக்தவ்யம் – அனுபவித்தே ஆக வேண்டும்
கல்ப கோடி ஷதைரபி– நூறு கோடி கல்பம் சென்றாலும் சரி
சுபாசுபம் – நல்ல மற்றும் தீய
க்ருதம் கர்ம – செயல்களைச் செய்ததற்கான பலன்களை அனுபவித்தே தீர வேண்டும்.
இப்படி கர்மம் பற்றிய உண்மையை நமக்குக் கூறி நம்மைத் தெளிவு படுத்துகிறார்கள் நம் பெரியோர்!
இப்போது நமக்கு மனம் ஆறுதல் அடைகிறது. செய்ததன் விளைவை ஒரு நாள் தீயவன் அனுபவித்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் நம்மை நல்ல பாதையில் செல்லத் தூண்டுகிறது!
*********************

