காக்க காக்க ரகசியம் காக்க!

11.சம்ஸ்கிருதச் செல்வம்

 

காக்க காக்க ரகசியம் காக்க!

ச.நாகராஜன்  

 

‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்பது பழமொழி.எதைச் சொல்ல வேண்டும் எதை யாரிடமும் சொல்லக் கூடாது என்பதை அறிந்து கொள்வதே பேசுவதற்கு முன் ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விஷயம். இதை நன்கு உணரச் செய்யும் விதத்தில் கவிஞர் பாடுகிறார் இப்படி:-

 

ஆயுர்வித்தம் க்ருஹசித்ரம் ரஹஸ்யம் மந்த்ரபோஷதம் I

தயோ தானாவமானௌ ச நவ கோப்யானி காரயேத் II

 

ஆயுர் – ஒருவனின் வயது (ஆயுள்)

வித்தம் – செல்வம்

க்ருஹசித்ரம் – வீட்டின் (மோசமான) நிலை

ரஹஸ்யம் – ரகசியமாக வைத்திருக்க வேண்டியவை

மந்த்ரம் – தான் ஜெபிக்கும் அல்லது தான் பெற்ற உபதேச மந்திரம்

போஷதம் – தான் உண்ணும் மருந்துகள்

தயா – தவம்

தானம் – ஒருவன் கொடுக்கும் தானம்

அவமானம் – ஒருவன் பெற்ற அவமானம்

ச நவ – இந்த ஒன்பதும்

கோப்யானி காரயேத் – ரகசியமாகக் காக்கப்பட வேண்டும்.

 

இதே போல ஒரு காரியத்தை ஆரம்பிக்கும் முன்னர் ஊரெங்கும் தம்பட்டம் அடிக்கக் கூடாது.மனதில் நினைத்ததை எல்லாம் எல்லோரிடமும் வெளியில் சொல்லக் கூடாது.

  (நுணலும் தன் வாயால் கெடும்: நுணல்=தவளை)

மனஸா சிந்திதம் கார்யம் வசஸா ந ப்ரகாஷயேத் I

அன்யலக்ஷித கார்யஸ்ய யத: சித்திர்னம் ஜாயதே II

 

மனஸா சிந்திதம் கார்யம் – மனதில் சிந்தித்திருக்கும் ஒரு காரியத்தை

வசஸா ந ப்ரகாஷயேத்வார்த்தைகளால் வெளியில் சொல்லக் கூடாது

 

ஏனெனில் அந்த லக்ஷியத்தை மற்றவர்கள்  புரிந்து கொண்டு விட்டால் அதில் ஒருவர் வெற்றியடைய முடியாது.

நினைத்ததை எல்லாம் வெளிப்படையாகச் சொன்னால் அதை மற்றவர்கள் தாமே முடிக்கப் பார்ப்பார்கள் அல்லது அதற்குத் தடையை எழுப்புவார்கள்.ஆகவே ஒரு கருமத்தை எண்ணித் துணிய வேண்டும். நினைத்ததை நன்கு திட்டமிட்டு முடிக்க வேண்டும்.

 

*************

Leave a comment

Leave a comment