ஸ்வர்ண புத்தர்!

 

Image

ச.நாகராஜன் 

 

   புத்த மதத்தில் சாந்தி ததும்பிய முகத்துடன் இருக்கும் புத்தரின் திரு உருவத்திற்கு பக்தி ததும்பிய தனி மதிப்பு உண்டு.

 

    ஏராளமான மோன நிலை புத்தர் சிலைகள் உலகினர் அனைவருக்கும் சாந்தியைத் தருவதற்கெனவே ஆங்காங்கே புத்த பிக்ஷுக்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வந்தன.

 

     அவற்றுள் ஒன்று தான் இன்று தாய்லாந்தில் உள்ள (அன்றைய சயாம்) ஸ்வர்ண புத்தரின் சிலை.

 

      250 வருடங்களுக்கு முன்பு பர்மா சயாமை ஆக்கிரமிக்க முடிவு செய்தது. சயாமில் இருந்த புத்த துறவிகள் அற்புதமான புத்தர் சிலை ஒன்றை வணங்கி வந்தனர். பர்மியர்களிடமிருந்து அந்தச் சிலையைக் காக்க துறவிகள் முடிவு செய்தனர். அதற்குரிய ஏற்பாட்டைச் செய்து முடித்த அவர்கள் 1767ஆம் ஆண்டு நடந்த பர்மிய படையெடுப்பில் கொல்லப்பட்டனர். அயுத்தயா சாம்ராஜ்ய சிதைவுகளில் களிமண்ணால் நன்கு மூடப்பட்டிருந்த புத்தர் சிலை யாரும் கவனிப்பாரின்றி ஓரிடத்தில் இருந்தது.

 

1801ஆம் ஆண்டு மன்னராக இருந்த புத்த யோட்ஃபா சுலாலோக் எனப்படும் மன்னர் முதலாம் ராமர் (ராமா- I) பாங்காக்கைப் புதிய தலைநகரமாக நிர்மாணித்து சிதிலமடைந்து இருக்கும் புத்த விஹாரங்களில்  உள்ள அனைத்து புத்தர் சிலைகளும் பாதுகாப்பாக பாங்காங்கிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். அயுத்தயாவில் கவனிப்பாரின்றிக் கிடந்த சிலை பாங்காக் நகரம் நோக்கி நகர்ந்தது.

 

   மன்னர் மூன்றாம் ராமர் (ராமா- III) காலத்தில் (1824-1851) பாங்காக்கில் வாட் சோட்நாராம் என்ற இடத்தில்  இருந்த சிலை காலக்கிரமத்தில் அது இருந்த இடம் சிதிலமடையவே 1935ஆம் ஆண்டு பாங்காக்கில் உள்ள வாட் டைமிட் என்ற இடத்தில் உள்ள சிறிய பகோடாவிற்குக் கொண்டு வரப்பட்டது. இருபது வருட காலம் ஒரு சின்ன கொட்டகையில் அந்தச் சிலை கொலு வீற்றிருந்தது.

 

    1954ஆம் ஆண்டு ஒரு புதிய விஹாரம் அங்கு எழுப்பப்படவே இந்த புத்தர் சிலையை அங்கு நிறுவி விடலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. 1955 மே மாதம் 25ஆம் தேதி புதிய இடத்தில் சிலை நிறுவப்பட்டது. ஆனால் ஒரு நள்ளிரவில் நடந்த சம்பவத்தால் அந்த புத்தரின் உண்மையான மதிப்பும் அழகும் தெரிய வந்தது. நடந்தது இது தான்:

 

சிலையைத் தூக்குவதற்காக துறவிகள் ஒரு கிரேனை ஏற்பாடு செய்திருந்தனர். கிரேன் சிலையைத் தூக்கிய போது எதிர்பார்த்ததை விட அது மிகவும் கனமானதாக இருந்தது. சிலையை பத்திரமாக புதிய இடத்திற்குக் கொண்டு போகவேண்டும் என்ற கவலையுடன் கிரேனை அப்படியே நிறுத்தச் செய்தனர் துறவிகள். அடுத்த நாள் இன்னும் அதிக சக்தி வாய்ந்த கிரேனைக் கொண்டு வர ஏற்பாடு செய்தனர். ஆனால் அன்று இரவோ பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. சிலை பத்திரமாக இருக்கிறதா என்று பார்க்க விரும்பிய தலைமை பிக்ஷு ஒரு விளக்கை ஏந்தியவாறே சிலைக்கு அருகில் வந்தார். சிலையை நோக்கிய அவர் சிலையின் ஒரு இடம் மட்டும் பளபளப்பாக இருக்கவே ஆச்சரியமடைந்தார். அந்த இடத்தில் இருந்த களிமண் உதிர்ந்திருந்தது. பிக்ஷு சிலையை பத்திரமாக சுரண்ட ஆரம்பித்தார்.

 

    அவர் கண்டதை அவராலேயே நம்ப முடியவில்லை. அது ஒரு ஸ்வர்ண விக்கிரஹம். முழுவதும் தங்கம். பிரம்மாண்டமான தங்கச் சிலை அது! விஷயம் பரவியது. உலகமே வியந்தது. பத்திரிக்கைகள் தினந்தோறும் இந்தக் கண்டுபிடிப்பையும் இந்த புத்தரின் வரலாற்றையும் வெளியிட ஆரம்பித்தன. அன்று ஆரம்பித்த பரபரப்பு இன்று வரை நீங்கவில்லை.

 

    இந்த ஸ்வர்ண புத்தரை ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் தரிசித்து சாந்தி பெறுகின்றனர். புத்தர் மீது பூசப்பட்டிருந்த களிமண் பூச்சை அகற்றுவதை ஒவ்வொரு நிலையிலும் போட்டோ எடுத்தனர். அந்த போட்டோக்களும் சில களிமண் பூச்சுத் துண்டுகளும் இன்றும் அந்த விஹாரத்திற்கு  விஜயம் செய்வோரின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

 

   இந்த தங்கச் சிலை ஒன்பது பாகங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பூச்சை முழுவதுமாக நீக்கிய போது அதன் பீடத்தில் ஒரு சாவி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சாவியே ஒன்பது பாகங்களைப் பிரிப்பதற்கும் பின்னர் பூட்டுவதற்குமான சாவியாகும்! சிலையின் ஒன்பது பாகங்களும் கச்சிதமாக ஒன்றுடன் ஒன்று பொருந்துமாறு இருப்பது சிற்பக் கலையின் உச்ச அதிசயம்! இந்த  ஒன்பது பாகங்களும் சிலையைச் செய்த இடத்திலிருந்து சயாம் கொண்டு வர எளிதாக இருப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கிறது.

 

    புராதன காலத்தில் அனைத்து புத்தர் சிலைகளும் பாரதத்திலேயே செய்யப்பட்டு உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கொண்டு செல்லப்பட்டன. ஆகவே தங்க புத்தர் வடிவமைக்கப்பட்ட இடம் பாரதமே!

 

   இதில் ஆச்சரியமான இன்னொரு விஷயம் களிமண் புத்தர் தன்னை ஸ்வர்ண புத்தராக வெளிப்படுத்திக் கொண்ட ஆண்டு புத்தர் மறைந்த 2500 ஆண்டு துவக்கத்தை ஒட்டி அமைந்தது தான்! இது புத்தர் செய்த அற்புதம் என்றே புத்த மதத்தினர் நம்புகின்றனர். 2010 இல் பிப்ரவரி 14ஆம் தேதி புதிய கட்டிடம் திறக்கப்பட்டது. இங்கு தான் இப்போது தங்க புத்தர் கோவில் கொண்டுள்ளார்.

 

     தங்க புத்தரின் சிலை மூன்று மீட்டர் உயரமுள்ளது (9அடி9 அங்குலம்) எடையோ ஐந்தரை டன்கள். அவ்வளவும் தங்கம்.12 அங்குல களிமண் பூச்சினால் ஓரமாக ஒதுங்கி இருந்த புத்தர் ஸ்வர்ணமயமாக ஆனவுடன் உலகின் கவனத்தைக் கவர்ந்து விட்டார்!

 

   சுகோதை சிலைகள் என்று கூறப்படும் இப்படிப்பட்ட சிலைகள் பீடத்தில் இருப்பது போல அமைக்கப்படும். இது ஆன்மீக சக்தி அலைகளைக் குறிப்பிடுகிறது. இந்தச் சிலை இருக்குமிடத்திலிருந்து ஆன்மீக அலைகள் பரவ ஆரம்பிக்கும்.

   சிலையின் அமைப்பை சிற்பிகளும் பக்தர்களும் வெகுவாக ஆராய்ந்துள்ளனர். உச்சி வகிடு ஆங்கில எழுத்தான ‘V’ போல அமைந்திருப்பதால் இது சிற்ப சாஸ்திரப்படி அமைக்கப்பட்ட ஆன்மீக அலைகளைக் கொண்ட புத்தர் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பரந்த மார்பும் கழுத்தில் உள்ள மூன்று மடிப்புகளும் காதுகளைத் தொடும் அகன்ற அழகிய வாயும் அவர் சித்தார்த்தராக இருந்த போதிருந்த இளவரசர் தோற்றத்திற்கான அடையாளம் என்பது ஆய்வாளர்களின் குறிப்பு!

 

   தங்க மயமான புத்தர் பரப்பும் அமைதி அலைகளை உலகினர் அனைவரும் ஏற்றுக் கொண்டால்  உலகமே ஸ்வர்ண லோகம் ஆகி விடும் அல்லவா!

சின்ன உண்மை

ஸ்வர்ண புத்தரின் இன்றைய மதிப்பு 2500 லட்சம் டாலர்கள்! ஒரு டாலர் 60 ரூபாய் என்று கொண்டால் இந்திய ரூபாய் மதிப்பில் இந்த ஸ்வர்ண புத்தரின் மதிப்பு 1500 கோடி ரூபாய்!

 

This article is written by my brother Santanam Nagarajan for nilacharal.com–swaminathan

 

Leave a comment

Leave a comment