கொக்கைப் போல இருப்பான், கோழி போல இருப்பான், உப்பைப் போல இருப்பான் பக்தன்

kokku

கொக்கைப் போல இருப்பான், கோழி போல இருப்பான், உப்பைப் போல இருப்பான் பக்தன்

By London Swaminathan
Post No. 900 Dated 11th March 2014

கொக்கும் துறவியரும்

தமிழர்கள் தெய்வ பக்தி மிகுந்தவர்கள். எதைக் கண்டாலும் அதில் தெய்வத்தை ஏற்றிவிடுவர். ‘’யாதும் ஊரே யாவரும் கேளிர்’’– என்ற புறப்பாட்டில் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் தோணியைப் பார்த்த புலவர் அதன் மூலம் கர்ம வினைக் கொள்கையைப் புகட்டியதை ‘’தீதும் நன்றும் பிறர்தர வாரா ‘’ என்ற கட்டுரையில் நான் விளக்கியதைப் படித்திருப்பீர்கள்.

இதோ கொக்கு பற்றி என்ன சொல்கிறார் சங்கப் புலவர்?

செக்கர்கொள் பொழுதினான் ஒலிநீவி, இனநாரை
முக்கோல்கொள் அந்தணர் முதுமொழி நினைவார்போல்
எக்கர்மேல் இறை கொள்ளும், இலங்குநீர்த் தண்சேர்ப்ப!
(நெய்தற்கலி, கலித்தொகை)

பொருள்: அழகிய மேலைத்திசையில் மாலைக் கதிரவன் சேர்ந்துவிட்டான். சந்திரனும் அழகுடன் தோன்றிவிட்டான். செக்கர் வானம் தெரிகிறது. முக்கோல் ஏந்திய அந்தணர்கள் மந்திரங்களை தியானம் செய்துகொண்டு இருப்பது போல நாரைகள் கடற்கரை மணலிலே கண்மூடி அமர்ந்திருந்தன. இப்படி நீர்வளம் நிரம்பிய நாடு உடையவனே—நல்லந்துவனார் என்ற புலவர் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே பாடிவிட்டார்.

stork fish

இதையே இன்னொரு வகையில் விளக்கலாம். ‘’கொக்குக்கு ஒன்றே மதி’’ என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதே போல முனிவர்களுக்கும் ஒன்றே மதி. கொக்குக்கு வேண்டியது இரை. அதற்கு வயிற்றுப் பசி. ஞானிகளுக்கு அறிவுப் பசி. அவர்களுக்கு வேண்டியது இறையுணர்வு அல்லது முக்தி. ஆக இருவரும் மாலையில் தியானம் செய்வது பொருத்தமான உவமை.

‘’காணாமல் கோணாமல் கண்டு கொடு’’— என்பது தமிழ் பழமொழி. இறைவனை வழிபடும் இந்துக்கள் முப்போது அவனை வழிபடுவர். காணாது (சூரியனைக் காணாது= அதிகாலையில்), கோணாது (நம்முடைய நிழல் சாய்வாக விழாத வேளை= அதாவது நண்பகல்), கண்டு (சந்தியா காலம்=பொழுது சாயும் நேரம்= சூரியனைக் கண்டு) கொடு. அந்தணர்கள் முப்போதும் இப்படி நீர் கொடுத்து தியானம் செய்வர். அது முனிவர்களுக்கும் பொருந்தும்.

வள்ளுவன் கண்ட கொக்கு

தமிழ்ப் புலவன் வள்ளுவனும் இப்படித்தான். காக்கை, கொக்கு, எலி, புலி, யானை, பாம்பு—எல்லாவற்றையும் பயன்படுத்தி நமக்குப் பாடம் சொல்லித் தருகிறான். இக் கட்டுரையில் வரும் கொக்கை மட்டும் எடுத்துக் கொள்வோம்:

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து (490)

big fish

பொருள்: எதையும் கொக்கு போல காலம் அறிந்து செய்ய வேண்டும். அமைதியாக, அடக்கமாக இருக்க வேண்டிய நேரத்தில் கொக்கு போல இருங்கள். பெரிய மீன் வரும்போது கொக்கு ஒரே குத்தில் எப்படி மீனைப் பிடிக்கிறதோ அப்படி ஒரே அடியில் பகைவனை வீழ்த்துங்கள் என்பார்.

பகை, எதிரி என்பதை எல்லாம் மறந்துவிட்டு நல்ல செயல்கள் ஆற்றவும் இந்த அறிவுரை பொருந்தும். இதோ இன்னொரு அழகான கொக்குப் பாட்டு:

அடக்கம் உடையார் அறிவிலார் என்று எண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா – மடைத் தலையில்
ஓடு மீன் ஓட உறு மீன் வரும் அளவும்
வாடி இருக்குமாம் கொக்கு (வாக்குண்டாம்)

பொருள்: ஒருவன் அடக்கமாக அமைதியாக இருக்கிறான். அவன் அறிவில்லதவன் போல என்று நினைத்து, ஒருவனைப் போய் சீண்டி விடாதீர்கள். அவர்கள் கொக்கைப் போன்றவர்கள். சின்ன மீன் எல்லாம் ஓடட்டும் என்று விட்டுவிட்டு வாட்டத்தோடு நிற்கும். இதை நம்பி ஏமாந்த பெரிய மீன் ஒன்று அருகில் வருகையில் ஒரே அடியில் ‘லபக்’ என்று விழுங்கிவிடும் கொக்கு.

பெருங்கதை என்னும் நூலிலும் இதே கருத்தில் ஒரு செய்யுள் உண்டு:

ஒடுங்கி இருந்தே உன்னியது முடிக்கும்
கொடுங்கால் கொக்கின் கோளினமாகிச்
சாய்ப்பிட மாகப் போர்ப்படை பரப்பி
வலிகெழு வேந்தனை வணக்குதும் (பெருங்.3-17-61/4)
fish stork

இதுகாறும் கொக்கை எதிர்மறை அணுகு முறையில் பார்த்தோம். கொக்கை பக்தனுக்கும் உவமையாக்குகிறார் ஒரு வைஷ்ணவர். அவருடைய பெயர் அனந்தாழ்வான். ராமானுஜருக்குப் பின் வாழ்ந்த ஒரு ஆசார்யார். அவரிடம் ஒருவர், ‘’வைணவன் என்பவன் யார்? அவனுக்கான இலக்கணம் என்ன?’’ என்று கேட்கிறார். அதற்கு அனந்தாழ்வான் கூறிய பதில்:

கொக்கை போல இருப்பான் கோழி போல இருப்பான்
உப்பைப் போல இருப்பான் உம்மைப் போல இருப்பான்.

கொக்கைப் போல இருப்பான்

எங்கு நீர் நிலை இருக்கிறதோ அங்கே கொக்குகள் இருக்கும். மஹா பாரதம் படித்தவர்களுக்குத் தெரியும். திரவுபதி தாகம் எடுக்கிறது என்று சொன்னவுடன் பாண்டவர்கள் ஒரு மரத்தின் மீது ஏறி ஏதேனும் நீர் நிலை இருக்கிறதா என்று பார்த்தனர். அவர்களில் ஒருவன் கொக்கு போன்ற நீர்ப்பறவைகள் வட்டமிடுவதைப் பார்த்துவிட்டு அங்கே தண்ணீர் கிடைக்கும் என்கிறான். வைணவனும் எங்கே திருமாலின் கோவில் குளங்கள் இருக்கிறதோ அங்கேதான் இருப்பான்.

kozi,kozi, fb

கோழி போல இருப்பான்

கோழி என்ன செய்கிறது? குப்பையை எல்லாம் விலக்கிவிட்டு தனக்கு வேணும் உணவை மட்டுமே தின்னுகிறது. வைணவனும் இப்படித்தான். குப்பைகளைக் களைந்துவிட்டு சத்தான விஷயங்களை மட்டுமே எடுத்துக் கொள்வான். அது மட்டுமல்ல; கோழி தனது குஞ்சுகளுக்கும் ஊட்டுவது போல உலகிற்கெல்லாம் பாகவத தர்மத்தைப் பரப்புவான். இங்கு லண்டனில் ஸ்டேஷன் வாசல்களில் ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் நின்று கொண்டு கிருஷ்ண பக்தியைப் பரப்புவதை நாங்கள் அன்றாடம் காண்கிறோம்.

உப்பைப் போல இருப்பான்

வைணவன் ஒரு ஊதுபத்தி; தன்னை அழித்து மற்றவகளுக்கு வாசனை தருவான். அவன் ஒரு மெழுகுவர்த்தி. தன்னை அழித்துக் கொண்டு பிறருக்கு ஒளி தருவான். அவன் ஒரு உப்புக் கல். சமைத்த உணவுக்குள் ஒன்றி மறைந்து மற்றவர்களுக்கு சுவை தருவான். அதாவது ஞானம் அளிப்பான். தொண்டனுக்கும் தொண்டனாக தாஸானுதாஸனாக வாழ்வான்.

chicken

உம்மைப்போல இருப்பான்

என்னை வந்து கேள்வி கேட்டு, அதற்கு நான் சொன்ன பதில் எல்லாவற்றையும் உன்னிப்பாக, பொறுமையோடு கேட்டாயே – ஒரு வைணவன் இப்படித்தான் ஞானப் பசியோடும் பொறுமையோடும் இருப்பான் என்றாராம் அனந்தாழ்வான்.

ஆக கொக்கும் கோழியும் உப்பும் கூட நீதி புகட்டும் இந்து மதத்தில்!! வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் அன்றோ!!

Contact swami_48@yahoo.com

Read also my earlier posts:
The Connection between William Wordsworth and Dattatreya posted 10 November 2011
13 Saints in Nature posted on 7 November 2013

Leave a comment

1 Comment

  1. innamburan's avatar

    Reblogged this on innamburan and commented:
    இது வைணவத்தின் தத்துவ விசாரணையை ரத்னச்சுருக்கமாக சொல்வது. நான் இது பற்றி எழுதுவதாக இருந்தேன். நீங்கள் அந்த பணியை செய்துவிட்டீர்கள்.வாழ்த்துக்கள்.

Leave a comment