கண்டவர் விண்டிலர்! விண்டவர் கண்டிலர்!!

Sri_Ramakrishna

சம்ஸ்கிருத, தமிழ் மொழி உப்பு பொம்மை கதைகள்

எழுதியவர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:947 தேதி ஏப்ரல் 1, 2014.

கல்லூரியில் ‘கெமிஸ்ட்ரீ’ படிக்கும் மாணவர்களுக்கு இரசாயன (வேதியியல்) பரிசோதனைக் கூடத்தில் உப்பு பரிசோதனைகள் நிறைய வரும். இந்தப் பரிசோதனை களைத் துவக்கிவத்தவர்கள் உபநிஷத ரிஷிகள். பெரிய கருத்துக்களை சின்னக் குழந்தைகளுக்குச் சொல்லித் தருவது போல உபநிஷதங்கள் கற்பிக்கின்றன. ஒரு மாணவனை ஒரு கைப்பிடி உப்பைக் கொண்டுவரச் சொன்னார் ஒரு ரிஷி. அவனையே விட்டு ஒரு கோப்பை நீரில் போடச் சொன்னார். அது கரைந்த பின்னர் உப்பு எங்கே போனது என்று கேள்வி கேட்டு, உப்பு நீரை சுவைக்கச் சொல்லி இன்னும் சில கேள்விகளைக் கேட்டுவிட்டு பிரம்மம் பற்றிப் பாடம் நடத்துகிறார். பிற்காலத்தில் எல்லோரும் இந்த உவமைகளைப் பயன்படுத்தத் துவங்கினர்.

இதே கருத்தைச் சொல்லும் ஒரு சித்தர் பாடல்:

நாழி உப்பும் நாழி அப்பும்/ என்ற பாடலை “சிவவாக்கியருடன் 60 வினாடி பேட்டி” என்ற தலைப்பில் ஏற்கனவே கொடுத்துள்ளேன்:

நாழி அப்பும் நாழி உப்பும் நாழியான வாறு போல்
ஆழியோனும் ஈசனும் அமர்ந்து வாழ்ந்திருந்த இடம்
ஏறில் ஆறு ஈசனும் இயங்கு சக்ரதரனையும்
வேறு கூறு பேசுவோர் வீழ்வர் வீண் நரகிலே.

அரியும் சிவனும் ஒன்னு, அறியாதவன் வாயிலே மண்ணு என்னும் கிராமியப் பழமொழியை விளக்க உப்பு- நீர் உவமையைப் பயன்படுத்துகிறார் சிவவாக்கியர் என்னும் சித்தர். உப்பு – எல்லோருக்கும் தெரிந்த சொல். அப்பு என்றால் தண்ணீர் என்று பொருள்.

கடவுளைப் பார்த்த எவரும் அவரை வருணிக்க முடியாது. அவ்வளவு மகிமை நிறைந்தவர். வருணனைகளுக்கு அப்பாற்பட்டவர். கண்டவர் விண்டிலர்.

யாராவது ஒருவன் கடவுளின் ரூப லாவண்யங்களை வருணித்து கடவுள் இப்படித்தான் இருப்பான் என்று சொன்னால் அவன் கடவுளைப் பார்த்ததே இல்லை என்று பொருள். அதவது விண்டவர் கண்டிலர். இதற்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் சில கதைகளைச் சொல்கிறார். அதே விஷயங்களை சித்தர்களும் தமிழ் அடியார்களும் சொல்லுகின்றனர். சங்கத் தமிழ் இலக்கியத்திலும் இந்த உவமை இருக்கிறது!!

ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமிலார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேனம் கொட்டாமோ—என்று மாணிக்கவாசகர் பாடினார்.

best ice use it

நான்கு சுவையான கதைகள்

ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதைகள் மிகவும் பிரபலமானவை; எல்லோரும் கேட்டிருப்பார்கள் ஆகவே சுருக்கமாகப் பார்த்துவிட்டுத் தமிழ் அடியார்களின் பாடல்களைக் காண்போம்.

கதை 1:– ஒரு உப்பு பொம்மை கடலின் ஆழத்தைக் காண வேண்டும் என்று ஆசைப்பட்டது. அது மட்டும் அல்ல. அதை எல்லோருக்கும் சொல்லவேண்டும் என்றும் திட்டம் தீட்டியது. உடனே கடல் நீரில் குதித்தது. அதற்கு மிகவும் சந்தோஷம். வாழ்நாள் முழுதும் எதை எண்ணியதோ அது நடந்துவிட்டது! ஆனால் சில அடி ஆழம் போவதற்குள் உப்பு எல்லாம் கரைந்து கடலுடன் ஐக்கியமாகிவிட்டது. அதே போலத்தான் பிரம்மன் பற்றிய அறிவும். கடவுளுக்கு நெருக்கமானவர்கள் சமாதியில் செல்லும் போது பிரம்மம் பற்றி ஞானம் வருகிறது. அதில் மூழ்கியவர்கள் வெளியே வருவதில்லை. பிரம்மத்துடன் ஐக்கியமாகிவிடுகிறார்கள்.

கதை 2: புதிதாக கல்யாணம் ஆன ஒரு பையன் மாமனார் வீட்டுக்கு நண்பர்களுடன் போனான். ஹாலில் (கூடத்தில்) உட்கார்ந்தான். அவனுடைய மனைவியின் தோழிகள் புது மாப்பிள்ளையைப் பார்க்கக் கூடிவிட்டனர். கட்டுக்கடங்காத ஆர்வம்! எல்லோரும் ஜன்னல் வழியாகப் பார்த்து, ஒவ்வொரு பையனையாக காட்டி ‘இவன்தான் உன் புருஷனா?’ என்று கேட்கின்றனர். ஒவ்வொரு பையனைக் காட்டி தோழிகள் கேள்வி கேட்கும் போதெல்லாம், புன்னகை செய்தவாறே ‘அவன் இல்லை’, ‘அவன் இல்லை’ என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். அவளுடைய உண்மையான கணவனைக் காட்டி இவன் தானா உன் புருஷன்? என்ற போது அவள் முகம் மலர்ந்தது. ஆனால் ‘இல்லை’ என்ற பதிலோ ‘ஆமாம்’ என்ற பதிலோ வரவேயில்லை. தோழிகளுக்குப் புரிந்துவிட்டது. பிரம்மமனைக் கண்டவர் நிலையும் இதே. அவர்கள் பேரானந்தத்தில் மூழ்கி மவுனம் ஆகிவிடுவர்.

ice-sculpture-350

கதை 3:- ஒரு மனிதனுக்கு இரண்டு பையன்கள் இருந்தனர். இரண்டு மகன்களையும் குருகுலத்தில் சேர்த்தார். பல ஆண்டுகளுக்குப் பின்னர் இருவரும் வீடு திரும்பினர். மூத்தவனைப் பார்த்து பிரம்மத்தின் இயல்புகள் என்ன? என்று கேள்வி கேட்டார். உடனே அவன் பல செய்யுள்களை ஒப்புவித்து, தனது மேதா விலாசத்தைக் காட்டினான். நீ பிரம்மத்தை அறியவே இல்லை என்று தந்தை சொல்லிவிட்டார். இரண்டாவது மகனை அதே கேள்வி கேட்டார். அவன் கீழ் நோக்கிய பார்வையுடன் மவுன நிலைக்குப் போய்விட்டான். தந்தைக்குப் புரிந்துவிட்டது; அவனுக்கு பிரம்ம ஞானம் எற்பட்டு விட்டது என்று.

கதை 4: நான்கு நண்பர்கள் ஒரு பெரிய சுவரால் சூழப்பட்ட ஒரு உயரமான கட்டிடத்தைப் பார்த்தனர். உள்ளே என்ன இருக்கிறது என்பதை அறிய நால்வருக்கும் ஒரே ஆசை. முதல் ஆள் உயர ஏறிப் போய் எட்டிப் பார்த்தான். ஆ! ஆ! ஆ! என்று குரல் மட்டுமே வந்தது. உள்ளே குதித்து விட்டான். இரண்டாவது, மூன்றாவது, நாலாவது ஆள் ஒவ்வொருவனாகப் போனார்கள். அவர்களுக்கும் இதே கதிதான். பிரம்மத்தை அறிந்தவர்கள் வெளியே வரவும் மாட்டார்கள், பிரம்மத்தினது குண இயல்புகளை வருணிக்கவும் மாட்டார்கள். வருணிக்கவும் முடியாது. ஆனந்தக் கடலில் நீந்தத் துவங்கிவிடுவார்கள்.

scaling wall

இந்த நாலு எடுத்துக் காட்டுகள் மூலம் ராமகிருஷ்ண பரமஹம்சர் பிரம்மஞானிகளின் இயல்பை விளக்குகிறார். ஆனால் ஒரு சில ஞானியர் மட்டும், மனித குல நன்மைக்காக மிகவும் ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு நம்மிடையே திரும்பி ஓடிவருகிறார்கள்.

“கண்டேன், கண்டேன் கண்டேன்!! கண்ணுக்கினியன கண்டேன், தொண்டீர் எல்லோரும் வாரீர்”– என்று ஆனந்தக் கூத்தாடி நம்மை எல்லாம் உய்விக்க முயற்சி செய்கிறார்கள். “சேரவாரும் ஜெகத்தீரே”– என்று நம்மிடம் கெஞ்சுகின்றனர். அப்படியும் நாம் போகாவிட்டால் “கடைவிரித்தேன் கொள்வரில்லையே”— என்று வருத்தப் படுகிறார்கள்.

திருமூலரின் திருமந்திரம் காட்டும் உண்மை:

உரையற்றது ஒன்றை உரை செய்யும் ஊமர்காள்
கரையற்றது ஒன்றைக் கரைகாணல் ஆகுமோ
திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்
புரையற்றிருந்தான் புரிசடையோனே (2915)

பொருள்; கடவுளை வருணிக்க முடியாது. கரை காண முடியாத கடல் போல அவன் எங்கும் நிறந்தவன். அவனைச் சொல்லுக்குள் அடக்க முயன்றவர்கள் எல்லாம் திணறிப் போய் ஊமையர் போல நிற்கின்றனர். கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர். ஆனால் தெளிந்த மனது உடையோருக்கு அவன் எளிதில் புரிபடுவான்.

.பகவத் கீதையில் பெருங் கடலை, சமுத்திரத்தை ‘’ஆபூர்யமாணம், அசலப் ப்ரதிஷ்டம்’’= எங்கும் நிறைந்தது, நிலைகுலையாதது என்று கிருஷ்ணன் கூறுவான் (2-70). ஆர்பரித்துத் துள்ளி ஓடும் பெரிய, பெரிய நதிகள் எல்லாம் கடலுக்குள் இறங்கியவுடன் சப்தம் ஒடுங்கி தன் நாமம் இழந்துவிடும். இது போல ஆசைகள் எல்லாம் ஒருவனுக்குள் ஒடுங்கவேண்டும். பின்னர் இறைவனைக் காண முடியும்.என்று விளக்க வந்த உவமை இது.

ocean

அப்பினில் உப்பென அத்தன் அணைந்திட்டுச்
செப்பு பராபரஞ் சேர்பரமும் விட்டுக்
கப்புறு சொற்பத மாளக் கலந்தமை
எப்படி அப்படி என்னும் அவ்வாறே (திருமந்திரம்,2905)

பொருள்: தண்ணீரில் உப்பைப் போட்டால் எப்படி இரண்டறக் கலக்கிறதோ அது போல இறைவன் பக்தனுள் இணைந்துவிடுவான் அல்லது பக்தன், இறைவனுக்குள் ஒடுங்கிவிடுவான். பராபரம்= இறைவன், பரம்=பக்தன். பேருயிர் என்னும் இறைவனில் நம் ஆருயிர் இணைந்துவிடும் அத்வைத நிலை. அத்வைதம்= இரண்டில்லை, ஒன்றே.

longexposurewaves-7

கலித்தொகையில் உப்பு பொம்மை

சங்கத் தமிழ் நூல்களில் ஒன்று கலித்தொகை. அதில் கடற்கரையில் உப்பினால் செய்யப்படும் பாவை உறைந்து நெகிழ்ந்து விடுவதுபோலத் தன் உயிர் உகுந்துவிடும் என்று தலைவன் கூறுகிறான்:

நிறை அழி காம நோய் நீந்தி, அறை உற்ற
உப்பியல் பாவை உறையுற்றது போல
உக்குவிடும் என் உயிர் —(கலி 138/16-17)

பொருள்: காம நோய் என்னும் கடலில் நீந்தும் உப்பு பொம்மை கரைவது போல நான் கரைந்து மறைந்து விடுவேன். இந்தப் பாடல் நல்லந்துவனார் பாடிய நெய்தற்கலியில் வருகிறது. ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன அதே கதைதான். ஆனால் பிரம்ம ஞானக் கடலுக்குப் பதில் காமக்கடல் பற்றி நல்லந்துவனார் பாடுகிறார்.

சின்ன உவமை, பெரிய உண்மைகளைப் புகட்டுகின்றன. உபநிடதங்களில் ஆலமர விதை, மனிதனின் கேசம் (முடி) ஆகியவற்றை மேலும் மேலும் சின்னதாகப் பிரித்துக் கொண்டே போகும் உவமைகள் மூலம் நமக்கு விளங்க வைக்கின்றனர். படித்து இன்புறுக.

Contact swami_48@yahoo.com

Leave a comment

Leave a comment