ராமம் ஸத்யபராக்ரமம்!

rama shantham

ராமாயண வழிகாட்டி — அத்தியாயம் 21
கட்டுரையாளர்: ச.நாகராஜன்
கட்டுரை எண்- 969; தேதி ஏப்ரல் 10, 2014

ராமாயண மஹா காவியத்தில் ஏராளமான ரிஷிகள் நம் கண் முன்னே நிறுத்தப்படுகின்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு வாய்ந்தவர்கள்.

தேவரிஷியில் சிறந்தவரான நாரதரால் தான் கதை ஆரம்பிக்கப்படுகிறது.
பிரம்மரிஷியில் சிறந்தவரான வசிஷ்டரால் தான் கதை வழி நடத்தப்படுகிறது.
ராஜரிஷியில் சிறந்தவரான விசுவாமித்திரரால் தான் ராமரின் வாழ்வில் திருமணம் என்னும் திருப்பு முனை ஏற்படுகிறது.

சீதையின் தந்தையும் ராமரது மாமனாரும் ஆன ஜனகரோ ராஜரிஷி.
இவர்கள் தவிர நாஸ்திக வாதத்தை ராமரிடமே பேசிய (!) ஜாபாலி உள்ளிட்ட ஏராளமான ரிஷிகளின் பட்டியலை நாம் காவியத்தில் காண்கிறோம். சில ரிஷிகளின் அதிசயச் செய்திகள் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.

விசுவாமித்திரர் ராமரை இன்னார் என்று முதலில் அறிவிக்கும் ஸ்லோகம் பால காண்டத்திலேயே இடம் பெற்று விடுகிறது.
அவர் கூறிய முக்கியமான ஸ்லோகத்திற்கு இன்றும் தேர்ந்த பிரவசனகர்த்தாக்கள் முடிவில்லா விரிவுரை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்!.அவ்வளவு பொருள் பொதிந்த சொற்களை வால்மீகி விசுவாமித்திரர் வாயிலாக ஒரே ஸ்லோகத்தில் கூறி விட்டார்.
ஸ்லோகத்தைப் பார்ப்போம்:-

அஹம்வேத்மி மஹாத்மானம் ராமம் ஸத்யபராக்ரமம் I வசிஷ்டோபி மஹதேஜா யே சேமே தபஸி ஸ்திதா: II
– பால காண்டம், பத்தொன்பதாம் ஸர்க்கம், 15ஆம் ஸ்லோகம்

அஹம் – நான் ராமம் – ராமரை மஹாத்மானம் – மஹாத்மாவாக ஸத்யபராக்ரமம் – ஸத்யபராக்கிரமராக வேத்மி – உண்மையாய் அறிகிறேன் மஹாதேஜா – மஹா தேஜஸ்வியான வசிஷ்டோபி – வசிஷ்டரும் கூட யே – எவர்கள் தபஸி – தவம் புரிவதில் ஸ்திதா – நிலை கொண்டவர்களோ: இமே ச – அந்த இவர்களும் அறிவார்கள்

அஹம் வேத்மி என்ற வார்த்தைகள் வேதம் கூறும் வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் என்று புருஷ ஸுக்தத்தில் வரும் வேத வாக்கியத்தைச் சுட்டிக் காட்டுகிறது. புருஷம் இங்கு ஸத்ய பராக்ரமாகவும் மஹாந்தம் மஹாத்மாவாகவும் இங்கு சுட்டிக் காட்டப்படுகிறது.

வசிஷ்டரும் என்ற வார்த்தையில் வரும் ‘உம்’ பெரிய நீண்ட உரைக்கு இடம் தரும் ‘உம்’ ஆகும். வசிஷ்டருக்கும் விசுவாமித்திரருக்கும் இடையில் நடந்த போட்டியை புராண இதிஹாஸங்கள் நன்கு விளக்குகின்றன. இருவருக்கும் இடையே இருந்த அந்த இயல்பான பழைய வரலாற்றினால் வசிஷ்டரும் கூட அறிவார் என்று விசுவாமித்திரர் சொல்லும் போது அதில் உள்ள சுவாரசியத்தை நன்கு ரசிக்க முடிகிறது. அவரே மஹா தேஜஸ்வீ என்று வசிஷ்டரைப் புகழ்ந்து கூறுவது பொருள் பொதிந்தது.

அங்கு தசரதனின் ராஜ சபையில் கூடியுள்ள இதர தபஸ்விகளும் ரிஷிகளும் இதை அறிவர் என்று விசுவாமித்திரர் கூறுவது உலகிற்கே இந்த உண்மையை அறிவிக்கத் தான்!

ram business

இனி கம்ப ராமாயணத்தை எடுத்துக் கொண்டால் பால காண்டத்தில் கம்பன் விசுவாமித்திரரை ‘எண்ணிலா அருந்தவத்தோன்’ என்று குறிப்பிடுகிறான்.

இந்த ஒரே ஒரு சொற்றொடருக்கும் ஏராளமான அர்த்தங்கள் கூறப்பட்டு நம்மை வியக்க வைக்கின்றனர் அறிஞர்கள்!

எண்ணிலா அருந்தவத்தோனை எண் + இலா + அரும் + தவத்தோன் என்று பிரித்து எண் என்பதற்கு ஆலோசனை என்று பொருள் கொண்டு இந்த முனிவர் அருந்தவத்தர் ஆயினும் இன்னாரிடத்தில் இன்ன பொருளை இன்ன இடத்தில் இன்ன காலத்தில் கேட்கலாம் என்பதை ஆலோசனை புரிந்து அறியாதவர் என்று பொருள் கொண்டு தசரதனின் உள்ளக்கிடக்கையை அறிந்து கொள்ளலாம்.

எண் + நிலாவு + அரும் + தவத்தோன் என்று பிரித்து ராமாயணத்தைப் படிப்பவரின் எண்ணத்தில் அதாவது நினைவில் நிலாவு அதாவது நிலவி இருக்கும் படியான அரும் தவத்தோன் – பெரும் தவத்தைப் புரிந்த மஹரிஷி என்று பொருள் கொண்டு படிப்பவர் மனம் மகிழலாம். விசுவாமித்திரர் வாழ்வில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து அவரது வரலாற்றுச் சிறப்பினையே இப்படிப் பிரித்துப் பொருள் கொள்ளலாம்.

எண்ணில் + ஆ + வரும் + தவத்தோன் = நினைத்துப் பார்த்தால், ஒரு பசுவாகிய காமதேனுவினால் வந்த தவத்தோன் என்று கொண்டு வசிஷ்ட – விசுவாமித்திர வரலாறை நினைவு கூரலாம்.
இன்னும் எண்ணில் + ஆ + வருந்து + அவத்தோன் என்றும்,
எண்ணில் + ஆ+ அருந்து + தவத்தோன் என்றும்,
எள் + நிலா + அரும் + தவத்தோன் என்றும்,
எள் + நிலா + வரும் + தவத்தோன் என்றும் பிரித்துப் பொருள் கூறலாம்.

ராமரை மஹாத்மாவாகச் சுட்டிக் காட்டும் விசுவாமித்திரரின் இந்த ஸ்லோகம் ஆழ்ந்த பொருள் கொண்டது எனில் விசுவாமித்திரரை யார் என்று இனம் காட்டும் கம்பனின் ஒரு சொற்றொடரும் அற்புதமானது என்றே கூறலாம்.

ராமாயணம் ஒரு தங்கச் சுரங்கம். வேண்டுமட்டும், வெட்டிய மட்டும் தங்கம் பெறலாம்!
தொடர்பு முகவரி: swami_48@yahoo.com

Leave a comment

Leave a comment