கடவுள் ஏன் கை, கால்களை கொடுத்தார்?

akhandabhajan2001_1

கடவுள் ஏன் கை, கால்களை கொடுத்தார்? வேதம் முதல் பாரதி வரை தந்த பதில்கள்

எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண் 973; தேதி 12th April 2014

உடலின் அங்கங்கள் ஒவ்வொன்றும் இறைவனை வணங்குவதற்கே என்று முதல் முதலில் வேத கால ரிஷிகள் பாடினார்கள். இதில் அற்புதம் என்னவென்றால் தமிழில் இளங்கோ அடிகள், அப்பர், குலசேகர ஆழ்வார், பாரதியார் ஆகிய எல்லோரும் இதே கருத்தை மேலும் மேலும் சுவைபடப் பாடியுள்ளனர்.

வேதத்தில் ரிஷிகள் பிரார்த்தனை

ஓம் பத்ரம் கர்ணேபி: ஸ்ருணுயாம தேவா:
பத்ரம் பஸ்யேமாக்ஷபிர் யஜத்ரா:
ஸ்திரை ரங்கைஸ் துவஸ்டுவாம்ஸஸ் தனூபி:
வ்யஸேம தேவஹிதம் யதாயு:
ஓ தேவர்களே! நல்ல மங்களகாரமான செய்திகள் எங்கள் காதுகளில் விழட்டும். போற்றுதலுக்குரிய பெரியோர்களே, எங்கள் கண்கள் மங்களகரமான விஷயங்களைக் காணட்டும். நாங்கள் (வாயால்) உன் புகழைப் பாடிக் கொண்டிருப்போமாக. கடவுளால் எங்களுக்கு கொடுக்கப்பட்ட வாழ்நாள் முழுதும் கட்டுடலும் வலிமையான அங்கங்களும் எங்களுக்கு இருக்க அருள் புரிவாயாக (யஜூர் வேதம்)
இதே பிரார்த்தனை அதர்வ சீர்ஷோபநிஷத் முதலிய பல இடங்களிலும் வருகின்றன.

datta speaking
People are listening to Sri Ganapati Sachidanada Swamiji

சிலம்பில் நாராயணன்

முதலில் ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று பாரதியாரால் பாடப்பட்ட சிலம்பில் இளங்கோ கூறுவதைப் பார்ப்போம்.

இறைவன் நமக்கு நாக்கைக் கொடுத்ததே நாராயணன் புகழ் பாடத்தான் என்று இளங்கோ அடிகள் பாடுகிறார்.

வடவரையை மத்தாக்கி, வாசுகியை நாணாக்கி
கடல் வண்ணன்! பண்டொரு நாள் கடல் வயிறு கலக்கினையே;
—————————–
மூ உலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடும் கான் போந்து,
சோ அரணும் போர்மடியத் தொல் இலங்கைக் கட்டழித்த
சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே!
திருமால் சீர் கேளாத செவியென்ன செவியே!

பெரியவனை மாயவனைப் பேர் உலகம் எல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார் – தம் கண்ணென்ன கண்ணே?

மடந்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர் பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தாரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே?
நாராயணா என்னா நாவென்ன நாவே?

சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை, இளங்கோ அடிகள்

பொருள்: மூன்று உலகங்களையும் இரண்டே அடிகளில் முடித்தான் (வாமன அவதாரம்). அந்த அடிகள் சிவக்குமாறு தம்பியுடன் காட்டுக்குப் போனான் ‘சோ’ என்னும் அரணை அழித்ததைவிட பழமைமிகு இலங்கையின் காவலை அழித்தான். இந்த சேவகன் புகழைக் கேட்காத காதுகளும் காதுகள் என்று சொல்லத் தகுதி உண்டா?

எல்லோர்க்கும் மூத்தவன் — உலகம் எல்லாம் அவன் உந்தியிடத்தில் தோன்றிய தாமரையில் விரிந்தது — கண்கள், கைகள், வாய். காலடிகள் ஆகியன சிவந்து தோன்றும் அந்தக் கருப்பனை (கிருஷ்ணனை) காணாத கண்களை யாராவது கண் என்று அழைப்பார்களா! அவனைக் கண்கொட்டாமல் பார்க்கவேண்டும். அதை மீறி கண்களை இமைத்தால் அவைகள் கண்களே இல்லை!

அறியாமையின் ஒட்டுமொத்த வடிவம் கம்சன். அவனுடைய வஞ்சனை எல்லாவற்றையும் கண்ணன் சமாளித்தான். பாண்டவர்க்காக அவன் கௌரவர்கள் இடத்தில் தூது சென்றபோது வேதங்கள் எல்லாம் அவனோடு சென்றன. அத்தகையவனின் பெருமையைச் சொல்லாத நாக்கும் ஒரு நாக்கா? நாராயணா என்று சொல்லாத நாக்கை எவரேனும் நாக்கு என்று சொல்ல முடியுமா?

mouth for singing

Sri Sathya Sai Baba singing Bhajan songs

குலசேகர ஆழ்வாரின் முகுந்தமாலா

குலசேகர ஆழ்வார் எழுதிய முகுந்த மாலையில் 40 ஸ்லோகங்கள் இருக்கின்றன. அதில் 16ஆவது ஸ்லோகம் கடவுளை வணங்குவதே கை, கால்களின் பணி என்று காட்டுகிறது. ‘’ஜிஹ்வே! கீர்த்தய கேசவம் முரரிபும் சேதோ’’ என்ற ஸ்லோகத்தின் மொழிபெயர்ப்பு இதோ:

வாராய் நாக்கே! கேசவனை ஸ்தோத்திரம் செய்!
நெஞ்சே முராசுரனைக் கொன்ற கண்ணனை தியானம் செய்.
கைகளே திருமாலை ஆராதியுங்கள்!
காதுகளே தன்னையடைந்தவர்களை ஒருகாலும் நழுவ
விடாதவனான கண்ணனுடைய கதைகளைக் கேளுங்கள்!
கண்களே! கண்ணனைக் கண்டு அனுபவியுங்கள்!
கால்களே! எம் பெருமான் திருக்கோயிலுக்குச் செல்லுங்கள்!
மூக்கே! முகுந்தனுடைய திருவடிகளில் ஸமர்ப்பித்த துளசியை நுகரு!
தலையே! எம்பருமானை வணங்கு!

வேதத்தில் அவர்கள் படித்த ‘’பத்ரம் கர்ணேபி ஸ்ருனுயாம தேவா” என்ற கருத்துக்களை எல்லோரும் பதிகங்களிலும் பாசுரங்களிலும் பாடுவதைப் படிக்கையில் பேரின்பம் கிட்டும்.

அப்பர் பாடிய திரு அங்க மாலை

தலையே நீ வணங்காய் – தலைமாலை தலைக்கணிந்து
தலையாலே பலிதேரும் தலைவனைத் தலையே நீ வணங்காய்
கண்காள் காண்மின்களோ – கடல் நஞ்சுண்ட கண்டம் தன்னை
எண்தோள் வீசி ஆடும் பிரான் தன்னைக் கண்காள் காண்மின்களோ
செவிகாள்! கேண்மின்களோ! – சிவன் எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப் பிரான் திறம் எப்போதும் செவிகாள்! கேண்மின்களோ!
வாயே! வாழ்த்து கண்டாய் – மதயானை யுரி போர்த்துப்
பேய்வாழ் காட்டகத்து ஆடும் பிரான் தன்னை வாயே! வாழ்த்து கண்டாய்

மேலும் பல பாடல்களில் — மூக்கே, நெஞ்சே, கை, ஆக்கை, கால் என்று பல உறுப்புகளும் இறைவனையே வணங்கவேண்டும் என்று பாடுகிறார்..
திருவங்க மாலை 4-9-5 தேவாரத் திருமுறை 4

hands for worship

Swamiji praying with hands

பாரதி பாடல்

நமது காலத்தில் வாழ்ந்த பாரதியும் வேதக் கருத்துக்களை எதிரொலிக்கும் பாடலைப் பாடுகிறார். அவர் பாடிய பாடல்தான் மிக நீண்ட பாடல். 46 பகுதிகளைக் கொண்டது :–
பாடலின் தலைப்பு: சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம்

கையைச், சக்தி தனக்கே கருவியாக்கு – அது
சாதனைகள் யாவினையும்ங் கூடும் – கையைச்
சக்தி தனக்கே கருவியாக்கு – அது
சக்தியுற்றுக் கல்லினையுஞ் சாடும்.

கண்ணைச், சக்தி தனக்கே கருவியாக்கு – அது
சக்தி வழியினை அது காணும் – கண்ணைச்
சக்தி தனக்கே கருவியாக்கு – அது
சத்தியமும் நல்லருளும் பூணும்.

செவி, சக்தி தனக்கே கருவியாக்கு – சிவ
சக்தி சொலும் மொழியது கேட்கும் – செவி
சக்தி தனக்கே கருவியாக்கு – அது
சக்தி திருப்பாடலினை கேட்கும்.

இதைத் தொடர்ந்து மனம், சித்தம், மதி, அகம் என்று எல்லாவற்றையும் சேர்த்துப் பாடுகிறார். இறுதியாக:-

“சிவ, சக்தி என்றும் வாழி என்று பாடு – சிவ
சக்தி சக்தி என்று குதித்தாடு – சிவ
சக்தி என்றும் வாழி என்று பாடு சிவ
சக்தி சக்தி என்று விளையாடு” —- என்று சொல்லி முடிக்கிறார்.

பாரதி ஆடுவதும் பாடுவதும் விளையாடுவதும் இறைவனைக் குறித்தே!
bodypartsadaptivebook
Body Parts are for worshipping God

Contact swami_48@yahoo.com

Leave a comment

Leave a comment