தமிழ் இந்து இளங்கோ!

kannaki cooking
Kannaki cooking for Kovalan (Picture from World Tamil Conference Souvenir)

எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்-1051 ; தேதி -19 May 2014.

தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள் உண்டு. நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி என்பன அவை. முதல் மூன்று காப்பியங்களும் முழுதாகக் கிடைத்தது நம் தவப் பயனே. இமூன்றில் சிலப்பதிகாரம் தனிப் பெரும் இடத்தை வகிக்கிறது. தமிழர்களுக்கு உரிய ஒரே கதை கண்ணகி கதை ஒன்றுதான். இதை எழுதிய இளங்கோ அடிகள் சேரன் செங்குட்டுவனின் தம்பி என்றும் அவர் துறவியானதாகவும் பல கதைகள் உண்டு. ஆனால் ஒன்றுக்கும் மறுக்க முடியாத ஆதாரம் எதுவும் இல்லை. சிலர் அவரை சமணத் துறவி என்பர். அதை நிரூபிக்கக் கிடைக்கும் சான்றுகளைவிட அவர் இந்து என்று சொல்லச் செய்யும் சான்றுகளே அவரது காப்பியத்தில் அதிகம் இருக்கின்றன. இதை வாசகர்களே முடிவு செய்ய போதுமான சான்றுகள் உதவும்.

முதலாவது சமணர்களுக்கு தெய்வம் இல்லை. ஆனால் இளங்கோவோ :”தெய்வம் தெளிமின்”- என்று அறிவுரை புகல்கிறார்.
இரண்டாவதாக “நாராயணனை ஏற்றாத நாவென்ன நாவே” என்று பாடுகிறார். இராம பிரானைப் புகழ்கிறார். சிவனுடைய நடனங்களையும் காளிக்கூத்தையும் நமக்குத் தருகிறார். கொற்றவையின் புகழ் பாடுகிறார். செங்குட்டுவன் தலைமேல் சிவபெருமானின் பாதங்களைச் சுமந்து சென்றதாகச் சொல்கிறார். தெய்வமே வழிபடாத புத்த, சமண வழக்கங்களை ஒதுக்கித் தள்:ளிவிட்டு, இந்துமத முறையில் கண்ணகியைப் பத்தினித் தெய்வமாக வழிபட வைக்கிறார். முதல் முதலில் பிராமணர் களைக் கொண்டு நடத்திய கல்யாணத்தை கண்ணகி, கோவலன் கல்யாணத்தில் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறார். தீ வலம் வந்து கல்யாணம் முடித்ததை தமிழில் முதல் முறையாக அவர்தான் நமக்குக் கூறுகிறார். கரிகாலன் நல்ல நாள் பார்த்து, ‘’புண்ணிய’’ திசையான வடதிசை போகியது இப்படித் தடுக்கி விழுந்த இடமெல்லாம் சிலம்பு முழுதும் இந்துமதம்!!

இந்துக்களின் புனித நதியான கங்கையையும் புனித மலையான இமயத்தையும் போற்றுகிறார். புண்ய இமயத்தில் கல் எடுத்து புண்ய கங்கையில் நீராட்டி கோவில் சமைத்ததைக் காட்டுகிறார். காவிரியை ‘’தெய்வ’’க் காவிரி என்று துதிக்கிறார். இப்படி மலையையும் நதியையும் தெய்வமாகக் கும்பிடுவது இந்துக்களால் மட்டுமே முடியும். புத்தரும் மஹாவீரரும் தெய்வம் பற்றியே பேசவில்லை.. கண்ணகி, கோவலன் இருவருக்கும் உண்மையிலேயே கவுந்தி அடிகள், வழிகாட்டித் துணையாக இருந்ததற்கு நன்றிக் கடனாக அவரது அருகதேவனையும் போற்றினார்.

கதை போகும் போக்கில் வேதம் சொல்லும் பார்ப்பனச் சிறுவர்கள், புனித யாத்திரை செய்யும் பார்ப்பனன், நாரதரின் வீணை, பூரண கும்பம், இந்துக்களின் 64 கலைகள், ஜம்புத்வீபம் (நாவலம் தண்பொழில்) திருவிளையாடல் புராணக் கதைகள், சிபிச் சக்கரவர்த்தி கதை, பஞ்ச தந்திரக் கதைகள் என ஏராளமான விஷயங்களைத் தருகிறார். ஆனால் கவுந்தி அடிகள் என்பவர் வாயிலாக சமணர்களின் பெருமையையும் பாடுகிறார். அந்த ஒரு காரணத்திற்காக இளங்கோ மீது சமணர் என்று முத்திரை குத்திவிட முடியாது.

அர்த்தநாரீஸ்வரர், மஹிஷாசுரமர்த்தனி, வாலகீய மகரிஷிகள், மும்முறை வலம் வருதல், விமானத்தில் கோவலன் வந்து கண்ணகியை அழைத்துச் செல்லல், இந்துக் கடவுளரின் வாகனங்கள், திருப்பதி, ஸ்ரீரங்கம், திருமாலிருஞ்சோலை மகிமை – இப்படி சிலப்பதிகாரம் முழுதும் இந்துமதக் கலைக்களஞ்சியமாக விளங்குகிறது!!!

இளங்கோ என்பவர் தமிழ் இந்துவா? தமிழ் சமணரா? என்று பட்டிமன்றம் நடத்தினால் இந்து என்ற கட்சி எளிதில் வெற்றி பெரும் அளவுக்கு இந்து மதக் கருத்துக்களை அள்ளித் தெளித்திருக்கிறார் இளங்கோ.

kannaki
Kannaki giving her anklet to Kovalan.

உலகில் ஒரு இந்து மட்டுமே மற்ற கடவுள்களைப் புகழ்வான். ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகாநந்தர், மஹாத்மா காந்தி போன்றோர் பிற சமயக் கடவுளையும் போற்றினர். இந்துவைத் தவிர உலகில் வேறு எந்த மதத் தலைவரும் இப்படிச் செய்ததில்லை. வேறு எந்த மத நூல்களிலும் இந்துக் கடவுள்களைப் புகழ்ந்ததைக் கண்டதும் இல்லை, கேட்டதும் இல்லை, படித்ததும் இல்லை. அப்படியே உவமைக்காக இந்துக் கடவுளரை ‘வம்புக்கு இழுத்தாலும்’ தங்களுடைய சமயக் கருத்துக்கு முரணான விஷயங்களைப் போதிக்க மாட்டார்கள்.

இளங்கோ சொல்லும் ‘விதி மிகவும் வலியது’ என்ற கருத்தும் இந்துக்களின் கர்ம வினைக் கொள்கைதான். வடமொழி நாடகங்களிலும் மஹாபாரதத்திலும் விதி பற்றி நூற்றுக்கணக்கான மேற்கோள்கள் உண்டு. ஆக அந்தக் கொள்கை காரணமாகவும் இளங்கோவுக்கு சமண மத முத்திரை குத்த முடியாது. இதோ இளங்கோவின் வாசகங்கள்:–

“பரிவும் இடுக்கணும், பாங்குற நீங்குமின்
தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்;
பொய்யுரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;
ஊனூண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;
தானம் செய்மின்; தவம்பல தாங்குமின்
செய்நன்றி கொல்லன்மின், தீ நட்பு இகழ்மின்
பொய்க்கரி போகன்மின், பொருள்மொழி நீங்கன்மின்
அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்
பிறவோர் அவைக்களம் பிழைத்தும் பெயர்மின்
பிறமனை அஞ்சுமின், பிழையுயிர் ஓம்புமின்
அறமனை காமின், அல்லவை கடிமின்
கள்ளும் களவும் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா
உளநாள் வரையாது ஒல்லுவது ஒழியாது
செல்லும் தேஎத்துக்கு உறுதுணை தேடுமின்
மல்லன் மாஞாலத்து வாழ்வீர் ஈங்கென்”
(வரந்தரு காதை)

தானம், தவம் போன்ற பகவத் கீதை சொற்களை வள்ளுவனும் இரண்டு இடங்களில் பயன் படுத்தியதை ‘வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன் என்ற கட்டுரையில் ஏற்கனவே காட்டியுள்ளேன். இளங்கோவும் ‘’வெஜிட்டேரியன்’’ உணவு சாப்பிடுதல், கள் குடிப்பதைக் கைவிடல், மறுமைக்காக இப்போதே தருமம், புண்ணியம் செய்தல் ஆகியவற்றை வலியுறுத்துகிறார்.

இவ்வளவு சொன்ன பிறகும், யாராவது தனக்கு தப்பான முத்திரை குத்திவிடப் போகிறார்களே என்று பயந்து பகிரங்கமாக ராமனையும் கிருஷ்ணனையும் புகழ்ந்து தள்ளுகிறார்:–

“வடவரையை மத்தாக்கி, வாசுகியை நாணாக்கி
கடல் வண்ணன்! பண்டொரு நாள் கடல் வயிறு கலக்கினையே;
—————————–
மூ உலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடும் கான் போந்து,
சோ அரணும் போர்மடியத் தொல் இலங்கைக் கட்டழித்த
சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே!
திருமால் சீர் கேளாத செவியென்ன செவியே!

பெரியவனை மாயவனைப் பேர் உலகம் எல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார் – தம் கண்ணென்ன கண்ணே?

மடந்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர் பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தாரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே?
நாராயணா என்னா நாவென்ன நாவே?”
–சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை, இளங்கோ அடிகள்.
tamil makal
Tamil queen in Sangam age.

பொருள்: மூன்று உலகங்களையும் இரண்டே அடிகளில் முடித்தான் (வாமன அவதாரம்). அந்த அடிகள் சிவக்குமாறு தம்பியுடன் காட்டுக்குப் போனான் ‘சோ’ என்னும் அரணை அழித்ததைவிட பழமைமிகு இலங்கையின் காவலை அழித்தான். இந்த சேவகன் புகழைக் கேட்காத காதுகளும் காதுகள் என்று சொல்லத் தகுதி உண்டா?

எல்லோர்க்கும் மூத்தவன் — உலகம் எல்லாம் அவன் உந்தியிடத்தில் தோன்றிய தாமரையில் விரிந்தது — கண்கள், கைகள், வாய். காலடிகள் ஆகியன சிவந்து தோன்றும் அந்தக் கருப்பனை (கிருஷ்ணனை) காணாத கண்களை யாராவது கண் என்று அழைப்பார்களா! அவனைக் கண்கொட்டாமல் பார்க்கவேண்டும். அதை மீறி கண்களை இமைத்தால் அவைகள் கண்களே இல்லை!

அறியாமையின் ஒட்டுமொத்த வடிவம் கம்சன். அவனுடைய வஞ்சனை எல்லாவற்றையும் கண்ணன் சமாளித்தான். பாண்டவர்க்காக அவன் கௌரவர்கள் இடத்தில் தூது சென்றபோது வேதங்கள் எல்லாம் அவனோடு சென்றன. அத்தகையவனின் பெருமையைச் சொல்லாத நாக்கும் ஒரு நாக்கா? நாராயணா என்று சொல்லாத நாக்கை எவரேனும் நாக்கு என்று சொல்ல முடியுமா?

மதுரை பற்றி வியப்பான தகவல்!

மதுரையில் மன்னவனிடம் குறைகளை முறையிட அடிக்கப்படும் ஆராய்ச்சிமணி ஒலித்ததே இல்லை என்றும் பிராமணர்களின் வேத ஒலி மட்டுமே ஒலிக்கும் என்றும் சொல்கிறார்:-
“மறை நாஓசை அல்லது; யாவதும்
மணி நாஓசை கேட்டதும் இலனே”

பிராமணர்களை எரிக்காதே!!
மதுரைக்கு தீயூட்ட விரும்பிய கண்ணகி ஒரு முலையைத் திருகி வீசவே அக்னி தேவன் அவள் முன் தோன்றுகிறான். உடனே யார், யாரை எரிக்கக் கூடாது என்று சொன்னதில் பிராமணர்களை எரிக்காதே என்று உத்தரவிடுவதாக இளங்கோ பாடுகிறார்:–
“பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர்
மூத்தோர், குழவி, எனும் இவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர்க”— (அழற்படு காதை)

என்று உத்தரவு போடுகிறாள். புத்த மதத்தை உலகம் முழுதும் பரப்பிய அசோகன் கல்வெட்டிலும் பிராமணர் பெயருக்கு அடுத்தே சிரமணர்கள் பெயர் வரும்.இளங்கோவும் காவியம் முழுதும் பிராமணர்களையும் வேதங்களையும் புகழ்கிறார்.

ஆய்ச்சியர் குறவையில் கண்ண பிரானின் லீலைகள் எல்லாவற்றையும் தொகுத்துத் தருகிறார். பாற்கடல் கடைந்தது, கன்றால் விளா எறிந்தது, யமுனையில் விளையாடியது, கதிரவனை சுதர்சன சக்கரத்தால் மறைத்த மாபாரதக் கதை இப்படிப் பல.

விருந்தினரை உபசரித்தல் இந்துக்கள் நாள்தோறும் கடைப்பிடிக்கும் பஞ்ச மஹாயக்ஞங்களில் ஒன்று. அது பற்றியும் கண்ணகியின் வாயிலாகக் கருத்துரைக்கிறார்:

“அறவோர்க்களித்தலும் அந்தணர் ஓம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும்,
தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை” (கொலைக்களக் காதை)

–என்று கண்ணகி வருத்தப்படுவதைக் காட்டுகிறார். அறவோர், துறவியர், அந்தணர், விருந்தினர் என்று குறிப்பிடுதல் காண்க.

சிலப்பதிகாரம், தொல்காப்பியம், திருக்குறள் ஆகிய மூன்றும் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று தக்க காரணங்களுடன் ஏற்கனவே எழுதி இருக்கிறேன். சிலம்பில்தான் முதல்முதல் யாழ் மறைந்து வீணை தோன்றுகிறது. ஏராளமான வடமொழிச் சொற்கள், புராண, இதிஹாசக் கதைகள் வருகின்றன. தொல்காப்பிய விதிகள் பழமையானவை. அதை நூல் வடிவில் தந்தவர் ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்ததை சொல் வழக்குகளே (அதிகாரம்) காட்டிவிடுகின்றன.

தமிழில் உள்ள எல்லா சமய நூல்களும் மறைந்தாலும் சிலப்பதிகாரம் ஒன்றில் இருந்தே சைவ வைணவப் பெருமைகளை அறியமுடியும். சுருங்க்ச் சொன்னால் சிலப்பதிகாரம், ஒரு இந்து மதக் கலைக் களஞ்சியம் ( என்சைக் ளோபீடியா). கையில் ஒரு பென்சில் அல்லது ஹைலைட்டர் பேனாவை வைத்துக் கொண்டு சிலப்பதிகாரத்தில் இந்துமதம் பற்றிய விஷயங்கள் வரும்போதெல்லாம் அடிக்கோடு இடுங்கள். புத்தகம் முழுதும் கோடு மயம்தான்!!!

வாழ்க இளங்கோ! வாழ்க தமிழ் இந்து இளங்கோ!

contact swami _48 @yahoo.com

Leave a comment

1 Comment

  1. lotusmoonbell's avatar

    அருமையான பதிவு. ‘சிலப்பதிகாரம் இந்துமதக் கலைக் களஞ்சியம்.’இந்த உண்மையை யாராலும் மறுக்க முடியாது.

Leave a comment