கண்டோம், கண்டோம், கடவுள் துகளைக் கண்டோம்!

peter-higgs-620x409

Peter Higgs at CERN

கண்டோம், கண்டோம், கடவுள் துகளைக் கண்டோம்!

By ச.நாகராஜன்

Post No 1172; Dated 15th July 2014.

பி.பி.சியின் பேட்டி

கடவுள் துகளை (God’s Particle OR Higgs Boson) முதலில் கண்ட பிரபல விஞ்ஞானி டாக்டர் பீட்டர் ஹிக்ஸை (Dr Peter Higgs) பிபிசி ரேடியோ இந்த ஆண்டு (2014) பிப்ரவரி 17ஆம் தேதி பேட்டி கண்டது.

நோபல் பரிசு பெற்ற ஹிக்ஸுக்கு வயது இப்போது 84. அவரை இரண்டு நிமிடங்களில் அதாவது 120 வினாடிகளில் (two minutes) கடவுள் துகளை விளக்க முடியுமா என்று பேட்டி கண்டவர் கேட்ட போது ‘களுக்’கென்று சிரித்த அவர் இரண்டே நிமிடங்களில் கடவுள் துகளை விளக்கினார். விளக்கி முடித்தவுடன் இதையே 30 வினாடிகளில் (Half minute) விளக்க முடியுமா என்று பேட்டியாளர் கேட்ட போது ‘முடியாது’ என்று உறுதியாகக் கூறி விட்டார்.

ஒரு பிரம்மாண்டமான விஷயத்தை 120 வினாடிகளில் அவர் விளக்கியதே ஆச்சரியம் தான்! அதை இன்னும் சுருக்கமாக எப்படி விளக்குவது?

கடவுளைப் பற்றிச் சொல்லும் போது, ‘கண்டவர் விண்டிலர்’, ‘விண்டவர் கண்டிலர்’ என்று சொல்வார்கள். ஆனால் கடவுள் துகளைக் கண்டு பிடித்தவரே அதை இரண்டு நிமிடங்களில் விண்டுரைத்து விட்டார்

god-particle

கடவுள் துகளுக்கு ஏன் அந்தப் பெயர்?
கடவுள் துகள் (God’s Particle) என்பது தான் என்ன? ஏன் அதற்கு அந்தப் பெயர்? ஒரு இரண்டு நிமிட விளக்கத்தைப் பார்ப்போம்! இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது என்பது மனித குலம் வெகு காலமாகக் கேட்டு வரும் கேள்வி! ‘பிக் பேங்’ (Big Bang) என்னும் பெருவெடிப்பினால் பிரபஞ்சம் உருவானதாக விஞ்ஞானிகள் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கொள்கை ஒன்றை முன் வைத்தனர். பிரபஞ்சத்தின் ஸ்டாண்டர்ட் மாடல் ஒன்றையும் உருவாக்கினர். இந்த பிரபஞ்ச மாடல் 12 துகள்களையும் நான்கு விசைகளையும் அடிப்படையாகக் கொண்ட ஒன்று.

6 க்வார்க்குகள், 6 லேப்டான்கள் ஆக பன்னிரெண்டு துகள்களும் மின்காந்த விசை எனப்படும் எலக்ட்ரோ மாக்னெடிக் விசை, ஸ்ட்ராங் நியூக்ளியர் விசை, வீக் இன்டர் ஆக் ஷன் விசை, புவி ஈர்ப்பு விசை ஆக நான்கு விசைகளும் பிரபஞ்ச மாடலில் உள்ளன.

பெரு வெடிப்பு உண்டானவுடன் அணுக்கள் சிதறின. அப்போது அணுக்களுக்கு நிறை இல்லை. அணுவில் நியூட்ரானுக்கு நிறை இல்லை, ஆனால் புரோட்டானுக்கு இருக்கிறது. புரோட்டானுக்கு மட்டும் ஏன் நிறை இருக்கிறது? இதற்குக் காரணமாக ஒரு ஆற்றல் இருக்க வேண்டும். இந்த ஆற்றலைப் பெற ஹிக்ஸ்போஸன் என்ற நிலையைக் கடந்தாக வேண்டும்.

ஒரு புதிய ஆற்றலைத் தரும் இந்தப் பதிமூன்றாவது துகளையே மர்மத் துகள் என்று விஞ்ஞானிகள் கூற ஆரம்பித்தனர். கடவுள் போல இருப்பது உண்மை என்றாலும் நிரூபிப்பது கஷ்டமாக இருப்பதால் இதை கடவுள் துகள் என்று சொல்வதும் தவறல்ல.

Nobel Physics

God’s Particle

இந்த கடவுள் துகள் என்ற சொற்றொடர் எப்படி வந்தது? லியான் லெடர்மேன் என்ற விஞ்ஞானி தான் முதன்முதலாக இந்தச் சொற்றொடரை உருவாக்கினார் இப்படி ஒரு துகள் உண்மையில் இருக்கிறதா, இல்லையா என்ற மர்மம் நீடித்து இருக்கவே எரிச்சலுடன் “GOD DAMN” என்று கூறி கடவுளுடன் நான்கு எழுத்து ஆங்கில ஆபாச வார்த்தையைப் பயன்படுத்தினார். திட்டியதோடு மட்டுமல்லாமல் தான் எழுதிய புத்தகத்திற்கும் இதே பெயரை வைத்தார். ஆனால் இதைக் கண்டு திடுக்கிட புத்தக வெளியீட்டாளர், கடவுளை நம்பும் பக்தர்கள் அனைவரின் மனமும் புண்படுமே என்று கூறி காட் பார்டிகிள் என்று தலைப்பை மாற்றினார். கடவுள் துகள் உருவானது.

செர்ன் ஆய்வுக்கூடம் (CERN Particle Physics Laboratory in Geneva, Switzerland)

பிரபஞ்சம் தோன்றி சுமார் 14 பில்லியன் அதாவது 1400 கோடி ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இப்போது அந்த நிலையை யார் உருவாக்குவது, எங்கு உருவாக்குவது!

இதற்கு பதிலை செர்ன் லாபரட்டரியும் அங்குள்ள விஞ்ஞானிகளும் தந்தனர். செர்ன் ஆய்வுக் கூடம் பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து எல்லையை ஒட்டி உள்ள ஜெனிவா (Geneva) நகரில் உள்ள பிரம்மாண்டமான ஆய்வுக் கூடம். இங்கு 27 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு விசேஷ குகை ஒன்றில் தான் புரோட்டானை புரோட்டானுடம் மோத விடும் அதிசய அபூர்வ சோதனைகள் நடந்து வருகின்றன. இங்குள்ள விசேஷ சாதனத்திற்கு லார்ஜ் ஹாட்ரான் கொலைடர் (Large Hadron Collider) என்று பெயர். பல கோடி டாலர் செலவில் இங்கு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்காவே இந்த கடவுள் துகள் சோதனையை கை கழுவி விட்டு நழுவிய நிலையில் செர்ன் (CERN) மும்முரமாக இதில் இறங்கி 2012 ஜூலை மாதம் தான் கண்ட வெற்றியை உலகுக்குப் பறை சாற்றியது.

இதனால் நாம் வாழும் உலகில் ஏற்படப்போகும் மாறுதல்கள் கற்பனைக்கும் அப்பாற்பட்ட பிரம்மாண்டமானவையாக இருக்கப் போகின்றன. மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட போது அதன் பலன் அவ்வளவாகத் தெரியவில்லை. ஆனால் இன்றோ மின்சாரம் இல்லாத வாழ்க்கையை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை அல்லவா!

அது போல புவி ஈர்ப்பு விசை உள்ளிட்ட மர்மங்களுக்கு கடவுள் துகள் பதில் சொல்லும் அப்போது காலப் பயணம் உள்ளிட்ட பல அபூர்வங்களைச் சாதிக்க முடியும்.

Hadron Collider

Hadron Collider at CERN, Geneva, Swiss

அற்புத ஆற்றலைத் தரும் கடவுள் துகள்
கடவுள் துகளைக் கண்ட பிறகு தொடர்ந்த ஆராய்ச்சியில் இப்போதைய நிலை என்ன? பூமிக்கு ஒரு முடிவு உண்டு. அது பற்பல கோடி ஆண்டுகளுக்குப் பின்னரே ஏற்படும் என்பதை கடவுள் துகள் சொல்கிறது.

அந்தப் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னதாகவே அது தரும் அற்புதமான ஆற்றல்களை பூமி வாழ் மக்கள் அனுபவித்து மகிழ்வர் என்பதும் மெய்யாகப் போகிறது.

சுவையான தகவல்கள் அடங்கிய கடவுள் துகளின் பெருமை கடவுளின் பெருமை போல சொல்லில் அடங்காதது சொல்லவும் முடியாதது. இதன் பெருமை நாளுக்கு நாள் கடவுளின் புகழ் போலவே வளரும் என்பது மட்டும் உறுதியாக அனைவரும் நம்புகின்ற ஒரு உண்மை!

((சென்னையிலிருந்து வெளிவரும் முதல் ஓசை நாளிதழில் 22-6-2014 அன்று வெளியான கட்டுரை))

Contact swami_48@yahoo.com

Previous Post
Leave a comment

Leave a comment