ஆராய்ச்சிக் கட்டுரை:– லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:– 1242: தேதி 19 ஆகஸ்ட் 2014.
நாம் அனைவரும் ஒரு காலத்தில் நட்சத்திரங்களின் துகள்களாக இருந்தோம். இது ஒரு விஞ்ஞானச் செய்தி. ஆனால் புண்யம் செய்தவர்கள் எல்லோரும் நட்சத்திரங்கள் ஆவார்கள் என்பது மஹபாரதம் தரும் அதிசயச் செய்தி. நட்சத்திரங்கள் எல்லாம் கடவுள் என்பது எகிப்திய, மாயா நாகரீக வரலாறு தரும் செய்தி; அனைத்தையும் சுருக்கமாக்ச் சொல்வதே இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கம்.
பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது மஹாபாரத வனபர்வத்தில் வரும் அர்ஜுனனின் விண்வெளிப் பயணத்தைப் படித்து அதிசயித்துப் போனேன். ஆனால் அது ‘’சிம்பாலிக்’’க்காக (அடையாளபூர்வமாக) சொன்ன செய்தி என்று விட்டு விட்டேன். லண்டனுக்கு வந்த பின்னர் ராஜாங்க ஆஸ்தான விண்வெளி விஞ்ஞானி பாட்ரிக் மூர் நடத்தும் “இரவு நேரத்தில் வானக் காட்சி” என்ற கிரகங்கள்—நட்சத்திரங்கள் நிகழ்ச்சியைப் பார்த்து வந்தேன். ஒரு நாள் அவர் சொன்னார், “ நாம் எல்லோரும் ஒரு காலத்தில் நட்சத்திரங்களின் துகள்களாக இருந்தோ என்று! மஹாபாரத வன பர்வ செய்தியை ஒப்பிட்டுப் பார்த்தபோது புல்லரித்தது.
அர்ஜுனனின் விண்வெளிப் பயணம்
அதாவது அர்ஜுனனை மாதலி என்ற சாரதி விண்வெளி ரதத்தில் ஐந்தாண்டுகளுக்கு சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் வர்ணனை மஹா பாரத வன பர்வத்தில் உள்ளது. அர்ஜுனன் ஒளிமிகுந்த ஆயிரக் கணக்கான ரதங்களைப் பார்த்து இவர்கள் என்று கேட்கிறான். இந்த ஒளிமிகுந்த மக்கள் எல்லாம் புண்யம் செய்தவர்கள், இவர்களைத்தான் நீங்கள் நட்சத்திரங் களாக பூமியில் பார்க்கிறீர்கள் என்று மாதலி விளக்கம் தருகிறான். இதை பாட்ரிக் மூர் என்ற வானியல் அறிஞ்ர் சொன்னதோடு ஒப்பிடுகிறேன்:
கோடி கோடி வருடங்களுக்கு முன் மாபெரும் வெடிப்பு (பிக் பேங்) ஏற்பட்டது. அப்போது விரிவடையத் துவங்கிய பிரபஞ்சம் இன்னும் பலூன் போல விரிவடைந்து கொண்டே இருக்கிறது. இதில் தோன்றிய ஒரு சின்னத் துகள் சூரிய மண்டலம். அதிலுள்ள ஒரு இம்மி அளவான பூமியில் அந்த நட்சத்திரத் துகள்கள் இறுகி மனித இனம் தோன்றியது என்பர் விஞ்ஞானிகள்.
அவர்கள் கணக்குப் படி நட்சத்திரங்கள் என்பது கோள உருவத்தில் சுற்றும் வாயுக் கோளங்கள். அதில் ஹைட்ரஜனும் ஹீலியமும் பிரதானமாக இருக்கின்றன. ஒவ்வொரு வினாடியிலும் கோடிக் கணக்கான ஹைட்ரஜன் குண்டுகள் வெடிப்பதால் அவை வெப்பத்தையும் ஒளியையும் உமிழ்கின்றன. சூரியனும் ஒரு சின்ன வகை நட்சத்திரம்தான்.
இதை எல்லாம் விஞ்ஞானம் சொன்னாலும் மாபெரும் வெடிப்பு ஏன் நிகழ்ந்தது? அதன் முடிவு என்ன? என்பதை விஞ்ஞானத்தால் விளக்க முடியவில்லை. பாட்ரிக் மூர் சொன்னது போல நாம் எல்லோரும் நட்சத்திரத் தூசியாக இருந்ததை ஒப்புக் கொண்டாலும் அதற்குள் ஆத்மா ஒன்று இருப்பதை விஞ்ஞானம் ஒத்துக் கொள்வதில்லை. அங்குதான் மதம் வந்து கை கொடுக்கிறது!
வியாசர் எழுதிய மஹாபாரத வனபர்வத்தைப் படிப்பவர்கள் இன்றும் வியப்படைவார்கள். அவர் சொன்ன பல விஷயங்களுக்கு இப்போது விஞ்ஞான விளக்கம் கிடைக்கிறது. அவரை ஒரு விஞ்ஞானி என்று அறிஞர்கள் ஒப்புக் கொள்ள மறுத்தாலும், 5000 ஆண்டுகளுக்கு முன்னரே விஞ்ஞான புனைக் கதை எழுதிய முதல் மனிதன் என்ற பட்டத்தையாவது கொடுக்க வேண்டும். நீண்ட விண்வெளிப் பயண வர்னணையை வன பர்வத்தில் படிக்கலாம். அது பற்றி தனியாக எழுதுவேன்.

இந்துக்களின் நட்சத்திர வழிபாடு
நாமும் அருந்ததி அதை ஒட்டியுள்ள சப்தரிஷி மண்டலம், அகத்திய நட்சத்திரம், துருவ நட்சத்திரம், திரிசங்கு நட்சத்திரம் ஆகியவற்றை புனிதர்களாகவே வழிபடுகிறாம். வானில் தெரியும் ஏழு நட்சத்திரங்களான சப்த ரிஷி மண்டலத்தை “கை தொழு எழுவர்” என்று சங்கப் புலவர் புகழ்கிறார். கார்த்திகை நட்சத்திரம், ரோகிணி நட்சத்திரம் ஆகியனவும் நம்மால் வழிபடப் படுகின்றன. சங்க காலத் தமிழர்கள் ரோகிணி நட்சத்திரத்தில் மட்டும் கல்யாணம் செய்ததை சிலப்பதிகரமும் அகநானூறும் பாடுகின்றன.
இதே போல எகிப்தியர்களும் மாயா நாகரீக மக்களும், மன்னர்கள் இறந்த பின்னர் நட்சத்திரங்களாக மாறுகின்றனர் என்று எழுதிவைத்துள்ளனர். அண்மைக்கால ஆரய்ச்சியில் கியாப்ஸ்-குபு பிரமிட்டில் நட்சத்திரப் படங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் 90 பிரமிடுகளில் மூன்று பெரிய, பழைய பிரமிடுகள் ‘’ஓரியன்’’ நட்சத்திர மண்டலத்திலுள்ள மூன்று நட்சத்திரங்களை நோக்கி அமைந்துள்ளதும் தெரியவந்துள்ளது. அதாவது காற்றுப் போவதற்கான மூன்று ஓட்டைகள், அந்த மூன்று நட்சத்திரங்களை நோக்கி அமைந்துள்ளன. 1994 பிப்ரவரியில் பி.பி.சி. ஒளிபரப்பிய ஓரியன் மிஸ்ட்ரி என்ற டாகுமெண்டரியில் இது பற்றி விரிவாகக் காட்டினார்கள். அப்போது நான் எழுதி வைத்த ஆராய்ச்சிக் குறிப்புகளை இப்பொழுது சொல்வதற்குக் காரணம் உண்டு.
சிவன் என்னும் வேடன்
ஓரியன் நட்சத்திரக் கூட்டத்தில் உள்ள ஆருத்ரா நட்சத்திரம் சிவனுக்கு உரிய நட்சத்திரம். சிவ பெருமானை வேடனாக நாம் உடைகள் போட்டுக் காட்டுவதோடு அல்லாமல் ருத்ரம் என்னும் யஜூர்வேத மந்திரம் அவரை வேடனாகவே வருணிக்கிறது. இதே கதை சிறிது மாற்றத்தோடு கிரேக்க புராணத்திலும் இருக்கிறது. கிரேக்கர்களின் புராணக் கதைகள் சிதைந்து போன வடிவத்தில் இயற்றப்பட்ட இந்து புராணக் கதைகள் என்று மாக்ஸ்முல்லர் கூறுவார். ஆக்வே நம்மிடம் காப்பி அடித்த கதைதான் ஓரியன் வேடன் கதை என்பதாகும்.
ஐதரேய பிராமணம் என்னும் வேதப் பகுதியில் ம்ருக வ்யாத (வேடன்) என்ற பெயரில் ஓரியன் நட்சத்திரம் வருணிக்கப்படுகிறது. அவர் பிரஜாபதி என்றும் அவர் மகள் ரோகிணியை துரத்திச் செல்கிறார் என்றும் பிராமணங்களில் எழுதப்பட்டுள்ளது. அப்போது சிரியஸ் வேடன் வடிவத்தில் அம்பு எய்ததாகவும் உள்ளது. அதர்வ வேதம் 27 நட்சத்திரங்களையும் பட்டியல் இடுகிறது. கிரேக்கர்கள் நூல்களை எழுதுவதற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே வேதகால கீதங்கள் சரஸ்வதி நதிதீரத்தில் ஒலிக்கத் துவங்கி விட்டன. ஆக வேடன் கதை இந்தியாவில் இருந்தே ஏற்றுமதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

உதவிய நூல்கள்:
Page 308, Mahabharata, The Book of the Forest (Vana Parva), Translated by A B Van Buitenen
Page 141 of Fingerprints of the Gods by Graham Hancock
Page 174, Volume 2 of Vedic Index by A A MacDonnell and A B Keith.
Page 160, An Illustrated Dictionary of Classical Mythology by Gilbert Meadows.



You must be logged in to post a comment.