கலியுக அவதாரம் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் ஜயந்தி தினம் நவம்பர் 23ஆம் தேதி. அதையொட்டிய சிறப்புக் கட்டுரை இது.
Post No. 1425 dated 21st November 2014
Written by S Nagarajan
உபதேச மந்திரப் பொருளாலே உனை நான் நினைந்து அருள் பெறுவேனோ!
By ச.நாகராஜன்
கல்வி அனைத்தையும் ஒரே வார்த்தையில் சுருக்கி விடலாம்! அன்பு, அனைத்தையும் தழுவும் அன்பு!அன்பில்லாத வாழ்க்கை சாவை விடக் கொடியது! –பாபா
பாபாவின் உபதேச உரைகள்
ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அவதார தினமான நவம்பர் 23ஆம் தேதியன்று இறைவனின் சாந்நியத்தில் பல காலமாக புட்டபர்த்தி கோலாகலமாகத் திகழ்ந்து வந்ததை அணுக்க பக்தர்கள் அனைவரும் அறிவர்.
பகவானின் கையினாலேயே லட்டு பிரசாதத்தை ஏற்று மகிழ்ந்தோர் லட்சக் கணக்கில் உள்ளனர். அவர்கள் தங்களின் பாக்கியத்தை நினைந்து மகிழும் போதே இந்த அவதார தினத்தில் அவர் பூதவுடலுடன் நம்முடன் இல்லையே என்ற ஏக்கத்தையும் அடைவது இயல்பே!
ஆனால் பகவானின் கடந்த கால அருளுரைகளை நோக்கினால், அவர் தனது உபதேச உரைகளை பக்தர்கள் அனைவரும் திருப்பித் திருப்பி மனதில் ஏற்று கற்று அதன் படி நிற்பதையே விரும்பினார் என்பதை அறிவோம்.
சத்யம் சிவம் சுந்தரம் நான்கு பாகங்களில் அவர் வரலாற்றை விளக்கும் போது ‘சத்ய சாய் ஸ்பீக்ஸ்’ (சுமார் 42 தொகுதிகள்) அவரது உபதேச உரைகளை அள்ளித் தருகிறது.
புத்தி என்னும் பறவை
உபநிடதத்தை பாபா விளக்கும் பாங்கே தனி! அது இறைவனின் விளக்கமாயிற்றே!ஒரு உதாரண விளக்கத்தை மட்டும் இங்கே காணலாம்:
பத்து உபநிடதங்களில் ஒன்றான தைத்ரீய உபநிடதம் புத்தியைப் பறவையாக விவரிக்கிறது. ‘ச்ரத்தா’ அதனுடைய தலை. அதனுடைய வலது இறக்கை ‘ரிதம்’ – பிரபஞ்ச லயம். அதனுடைய இடது இறக்கை ‘சத்யம்’ – உண்மை. பறவையின் பிரதான உடல் ‘மஹத் தத்வம்’ – பேருண்மை. அதன் வால் யோகா. இப்படி ஐந்து பகுதிகளை அதன் முழு வடிவத்தில் கொண்டுள்ள புத்தி அசாதாரணமான சக்தியைக் கொண்டதாகும்.
ச்ரத்தையே முக்கியம்
இப்படி உபநிடதத்தை விளக்கும் பாபா ஒரு சிறிய கதையையும் கூறுகிறார் இப்படி:
ஒரு முறை விக்கிரமாதித்த மஹாராஜா பண்டிதர் சபையைக் கூட்டி ச்ரத்தா, மேதா, புத்தி இந்த மூன்றில் எது மிகவும் முக்கியமானது என்று கேட்டான்.ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைக் கூறவே குழப்பம் தான் நிலவியது. இறுதியில் ஒருவாறாக சமாதானம் அடைந்த அவர்கள் ஒரு மனதாக மேதா – அதாவது திறமை தான் மிக முக்கியமானது என்று தங்கள் முடிவைத் தெரிவித்தனர். ஆனால் விக்கிரமாதித்தனோ மிகவும் ஏமாற்றம் அடைந்தான்.
பண்டிதர்களை நோக்கி அவன், “ஓ! பண்டிதர்களே! ஆஸ்தா என்றால் ஆசக்தி . ச்ரத்தா என்றாலோ மிக்க உற்சாகம், நம்பிக்கை ஆகும். ஸ்வஸ்தா என்றால் ஸ்திரத்வம் அதாவது உறுதி. ஆசக்தியும் ஸ்திரத்வமும் இல்லாத மேதா பயனற்றது. தன்னுடைய திறமையையும் புத்திசாலித்தனத்தையும் மட்டுமே நம்பும் ஒருவனின் வாழ்க்கை குறிக்கோள் உடைய வாழ்க்கையாக அமையாது. அவன் மிக்க உற்சாகத்துடன் நம்பிக்கையையும் திட உறுதியுடன் கொண்டிருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அவன் பெரிய காரியங்களைச் சாதிக்க முடியும். ச்ரத்தை மிகவும் முக்கியமானது. அது இல்லாமல் எதையும் சாதிக்கவே முடியாது. ச்ரத்தை இருந்தது எனில் சிறு தீப்பொறி உங்களிடம் இருந்தாலும் அது ஊதி விடப்பட்டு பெரும் ஜுவாலையாக ஆகி விடும். ச்ரத்தை இல்லை எனில் தீ ஜுவாலையே உங்களிடம் இருந்தாலும் அது அணைந்து விடும். அதே போல ச்ரத்தை இருந்தால் ஒரு சிறிய விதையைக் கூட ஆலமரமாகப் பெரிதாக்க முடியும்.”
விக்கிரமாதித்தனின் இந்த விளக்கத்தால் பண்டிதர்கள் தெளிந்தனர். இதை விளக்கிய பாபா இன்றைய நாளில் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மிகவும் வளர்ந்து விட்டாலும் கூட ஆன்மீக முன்னேற்றமும் அதனுடன் இணைய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

உபநிடதம் விளக்கும் புத்தி
“புத்தி மேதாவை விட வலிமை வாய்ந்தது. புத்தி என்பது சாதாரணமாக விளக்கப்படும் புத்தி கூர்மை மட்டும் அல்ல. அது அமைதியுடன் கூடிய ஆஸக்தி (உற்சாகம், நம்பிக்கை) மற்றும் ஸ்வஸ்தாவைக் (ஸ்திரத்வம், உறுதி) கொண்டதாகும். இந்த புத்தியானது ரிதம், சத்யம்,யோகா, மற்றும் மஹத் தத்வத்தால் பெரிதும் வளமடைகிறது.”
இப்படி உபநிடத ரகசியத்தைக் காலத்திற்கேற்றவாறு எளிமையாக விளக்கி நம்மை “புத்திசாலியாக” ஆக்க பாபா விழைகிறார்.
பாபாவின் கணக்கு சற்று வித்தியாசமானது.
மனிதனின் அறிவு ஐந்து வகைப்படும் என்று கூறி அதை விளக்கும் பாபா ஒரு விசித்திரமான கணக்கையும் தருகிறார். மூன்றிலிருந்து ஒன்றைக் கழித்தால் வருவது ஒன்று என்பது தான் அது! (3-1=1 !!)
இன்றைய நாட்களில் எல்லோரிடமும் பெரிதும் காணப்படுவது புத்தக அறிவு (book knowldege). இதைப் பெறுவதற்காக அரிய வாழ்நாளில் பெரும் பகுதியை வீணாக்குகிறோம். இதைப் பெறவே நம் நேரத்தைச் செலவழிப்பதால் பொது அறிவும்(general knowledge) இயல்பான அறிவும் (common sense) இல்லாமல் போய் விடுகிறது. இவை இரண்டையும் சமூகத்தில் சேவை செய்வதால் மட்டுமே பெறலாம். விஷயத்தைப் பகுத்துப் பார்க்கும் (discrimination knowledge)அறிவு நான்காவதாகும். இதுவோ இன்றைய நாட்களில் சுயநலத்திற்காகப் பயன்படுத்தப்படும் ஒன்றாக ஆகி விட்டது. சுய நலத்தை விட்டு விட்டு லோக க்ஷேமத்திற்காகப் பயன்படுத்தப் பட வேண்டிய அறிவு இது.
சாதாரண எண் கணிதத்தில் கூறப்படுவது போல் அல்லாது ஆன்மீக கணிதத்தின் படி மூன்றிலிருந்து ஒன்றைக் கழித்தால் வருவது ஒன்றாகும்! (3-1=1) கடவுள், மாயை, பிரபஞ்சம் ஆகிய மூன்றினுள் கடவுளே ‘இருக்கின்ற பொருள்’. மாயை கண்ணாடி. பிரபஞ்சம் கடவுளின் பிரதிபலிப்பு. கண்ணாடியை அகற்றி விட்டால் மாயையும் இல்லை, பிரபஞ்சமும் இல்லை. கடவுள் மட்டுமே இருக்கிறார். ஆகவே மூன்றிலிருந்து (கடவுள், மாயை, பிரபஞ்சம்) ஒன்றைக் (மாயையை) கழித்து விட்டால் மாயையும் பிரதிபலிப்பான பிரபஞ்சமும் போய், மிஞ்சுவது கடவுள் தான்!
இதை சுலபமாக அனைவராலும் அறிய முடியவில்லை. ஏனெனில் அவர்களிடம் ஐந்தாவது வகையான ப்ராக்டிகல் நாலெட்ஜ் எனப்படும் அனுபவ ஞானம் இல்லை. இதை ஒவ்வொருவனும் அடைவது அவசியம்.”
பாபாவின் விளக்கம் நம் சிந்தனையைத் தூண்டுகிறது.
இப்படிப்பட்ட ச்ரத்தா, மேதா,புத்தி மற்றும் ஐந்து வகை அறிவினாலும் எதை அடைய வேண்டும்! இறைவனைத் தான்! இறைவனோ அன்பு மயம்!
எப்படி சூரியனையும் சூரிய கிரணங்களையும் பிரிக்க முடியாதோ, கடலையும் அதன் அலைகளையும் பிரிக்க முடியாதோ அதே போல கடவுளையும் அன்பையும் பிரிக்க முடியாது.
ஆகவே ஜகம் முழுதும் அன்பைச் செலுத்துங்கள். சாயி உங்கள் வயப்படுவான். ஏனெனில் சாயியும் ப்ரேமையும் ஒன்றே தான்!
சாயியின் மொத்த உரைகளின் சாரத்தையும் எடுத்துப் பார்த்தால் ஒவ்வொரு நாளையும் “அன்பில் ஆரம்பி. அன்பில் வழி நடத்து; அன்பில் முடி” என்பது தான்!
இந்த அன்பு மந்திரமே சாயி மந்திரம்.
உபதேச மந்திரப் பொருளாலே உனை நான் நினைந்து அருள் பெறுவேனோ என்று உளமார நினைந்து அன்புருவாம் சாயியை வணங்கிப் போற்றுவோம்! அவன் அருளைப் பெறுவோம்!!

This is written by my elder brother S Nagarajan for the Tamil Magazine ஞான ஆலயம்- — London Swaminathan.
******************************
contact swami_48@yahoo.com




Sankarkumar
/ November 21, 2014Om SriSaiRam!
Happy Birthday pranams Dear Baba!