Post No 1553; Dated 7th January 2015.
தமிழ் என்னும் விந்தை! -25
திரிபங்கி – 2
by ச.நாகராஜன்
திரிபங்கிக்கு மாறனலங்காரம் தரும் இலக்கணம் இது.
நனியொரு பாவாய் நடந்தது தானே
தனிதனி மூன்றாஞ் சால்புறு பொருண்மையிற் பகுப்ப நிற்பது
திரிபங்கியதாகும்.
திரிபங்கிக்கு உதாரணச் செய்யுளாக மாறனலங்காரம் தரும் செய்யுள் இது:-
“வாரிதிபார் மன்மதன் பூசல்பார் வெய்ய மாமதி பார்
ஊரலர்பா ரன்னையிங் கேசல்பாருய் யுமாறிலைபார்
சோர்குழல்பார் பொன்னிறஞ்சேர்தல்பார் துய்யமான் மயல்பார்
நாரணனே தென்னரங்கேசனே தெய்வ நாயகனே
இதனை மூன்றாகப் பகுத்த பா கட்டங்களில் வருமாறு:-
| வாரிதிபார் | மன்மதன்பூசல்பார் | வெய்யமாமதி பார் |
| ஊரலர் பார் | அன்னையிங்கேசல் பார் | உய்யுமாறிலை பார் |
| சோர்குழல் பார் | பொன்னிறஞ்சேர்தல் பார் | துய்யமான்மயல் பார் |
| நாரணனே | தென்னரங்கேசனே | தெய்வநாயகனே |
வாரிதிபார் ஊரலர் பார் சோர்குழல் பார் நாரணனே
மன்மதன்பூசல்பார் அன்னையிங்கேசல் பார் பொன்னிறஞ்சேர்தல் பார் தென்னரங்கேசனே
வெய்யமாமதி பார் உய்யுமாறிலை பார் துய்யமான்மயல் பார் தெய்வநாயகனே
யாழ்ப்பாணக் கவிஞர் க.மயில்வாகனப் பிள்ளை இயற்றிய கட்டளைக் கலித்துறையில் அமைந்த திரிபங்கிப் பாடல் இது:-
“தந்தையென் பேனன்னை தானுமென் பேன்சற் குருவுமென்பேன்
சிந்தையன் பாய்நின்னை நாடிநிற் பேனற் றிருநகுலை
வந்துறச் சீர்மன்னு வாழ்வளிப் பாய்மற் றருணிறையத்
தந்திருப் பாய்வன்னி சேர்கரத் தாய்தற் பரமுதலே”
இச்செய்யுள் மூன்று வஞ்சித் துறை ஆகுமாறு கீழ்க்கண்டபடி பிரிக்கலாம்:-
- தந்தை யென்பேன் சிந்தையன்பாய் வந்துறச் சீர் தந்திருப்பாய்
- அன்னைதா னுமென்பேன் நின்னைநா டிநிற்பேன் மன்னுவாழ் வளிப்பாய் வன்னிசேர் கரத்தாய்
- சற்குரு வுமென்பேன் நற்றிரு நகுலை மற்றரு ணிறையத் தற்பர முதலே
நேரிசை வெண்பாவில் அவர் அமைத்த இன்னொரு திரிபங்கி வெண்பாப் பாடல் இது:-
கங்கரா பன்னாகக் கச்சார் வியனிடையாய்
பங்கதனின் மின்னாள் பயில்வடிவா –
வெங்கயிலை மன்னா வியனகுலை வானவா
இங்கஞ்சல் என்னா யியைபயனும் ஈ
இந்த வெண்பா கீழ்க்கண்ட இரு வெண்பாக்களை உருவாக்கும்:-
- பன்னாகக் கச்சார் வியனிடையாய் பங்கதனின் மின்னாள் பயில் வடிவா வெங்கயிலை – மன்னா வியனகுலை வானவா விங்கஞ்ச லென்னா யியைபயனு மீகங்க ரா
- பயனுமீ கங்கரா பன்னாகக் கச்சார் வியனிடையாய் பங்கதனின் மின்னாள் – பயில்வடிவா வெங்கயிலை மன்னா வியனகுலை வானவா விங்கஞ்ச லென்னா வியை
எப்படி ஒரு அற்புதமான கவித் திறமையை நம் தமிழ் கவிஞர்கள் கொண்டிருக்கிறார்கள், பாருங்கள்!
வளம் வாய்ந்த நம் தமிழ் மொழி அன்றோ செம்மொழி!
*****
contact swami_48@yahoo.com