கஜினி முகமது நாணயத்தில் சம்ஸ்கிருதம்!

Ghaznavid-A1610.GZ5-Mahmud-MH02.33

கட்டுரையாளர் – லண்டன் சுவாமினாதன்

 

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1582; தேதி 17 ஜனவரி 2015

எனக்கு மதுரை சேதுபதி உயர் நிலைப் பள்ளியில் தமிழ் கற்பித்த ஆசிரியர் ம.க.சிவசுப்பிரமணியம், — நாங்கள் ஏதாவது தவறான விடை எழுதிவிட்டால், என்ன இது?

 

கோகுலாஷ்டமிக்கும் குலாம்காதருக்கும் முடிச்சு போடுகிறாய்?

 

அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் முடிச்சு போடுகிறாய்?

 

ராமநவமிக்கும் ரம்ஜான் பண்டிகைக்கும் முடிச்சு போடுகிறாய்?

 

என்று திட்டுவார். அவர் கஜினி முகமதுவுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் உள்ள தொடர்பை அறிந்திருந்தால் அப்படி எங்களைத் திட்டி இருக்க மாட்டார்!!!!

ராஜதரங்கினி என்னும் காஷ்மீர் வரலாற்று நூலில் இருந்து பல சுவைமிகு விஷயங்களை எழுதினேன். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒரு காஷ்மீரி பிராமணன். அவரது மைத்துனர் ஆர்.எஸ்.பண்டிட்  ராஜதரங்கினியை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அப்போது நேருவும் பண்டிட்டும் வெவ்வேறு சிறைகளில் (பிரிட்டிஷாரால) அடைக்கப்படிருந்தனர். ஆர்.எஸ்.பண்டிட் மிகவும் விசால புத்தி படைத்தவர். ஆங்காங்கே நிறைய விஷயங்களைத் தருகிறார். இதோ சில:

 

ராஜ தரங்கினி என்றால் “அரசர்களின் ஆறு/நதி” எனப் பொருள். இதை கல்ஹணர் என்னும் கவி  “கடவுளின் மொழியான சம்ஸ்கிருதத்தில்” எழுதியது ஏன் என்று ஆர்.எஸ். பண்டிட் விளக்குகிறார்.

MassudOfGhazniCoin

“12-ஆம் நூற்றாண்டு வரை சம்ஸ்கிருதம் சீரும் சிறப்புடநும் விளங்கியது என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. கல்ஹணர் தனது நூலை சம்ஸ்கிருதத்தில் எழுதக் காரணம் இது காச்மீரில் மட்டும் இன்றி உலகம் முழுதும் சிறப்பு அடைய வேண்டும் என்பதற்காகத்தான்”.

 

(கல்ஹணர் கண்ட கனவு பலித்தது. இந்தியாவின் முதல் வரலாற்று நூல் ராஜ தரங்கினி தான் என்று இன்று வெளி நாட்டினர் போற்றுகின்றனர். புராணங்கள்— வரலாற்றை எழுதிய போதும் —  இந்த சக வருஷம் அல்லது கலியுக ஆண்டு அல்லது விக்ரம சஹாப்தம் என்று குறிப்பிடவில்லை. கல்ஹணர் ஒருவர்தான் சக வருடம் மற்றும்  காஷ்மீரில் புழங்கிய லௌகீக வருஷம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு முதல் முலில் இந்திய வரலாற்றை 900 ஆண்டுகளுக்கு முன் எழுதினார்)

காஷ்மீரில் க்ஷேமேந்திரா, பில்ஹணர், கல்ஹணர், வாக்பதி முதலிய பிரபல கவிஞர்கள் வாழ்ந்தனர். அதில் பில்ஹணர் எழுதிய ஒரு நூலில் “காஷ்மீர் பெண்கள் தூய சம்ஸ்கிருதம் பேசுவர். அழகிலோ ஒப்பற்ற அழகுடையவர்கள்” என்று புகழ்வதையும் பண்டிட் எடுதுக் காட்டுகிறார். சாளுக்கிய மகாராஜா சபையை அலங்கரித்த கவிஞர் பில்ஹணர் என்றும் அவர்  காஷ்மீர் பண்டிதர்களுக்காக இந்தியாவே ஏங்கி நின்றது என்றும் எழுதியதை பண்டிட் எடுத்துக் கூறுகிறார்.

கஜினி முகமது என்பான், இந்தியா மீது 17 முறை படை எடுத்து இந்துக் கோவில் எல்லாவற்றையும் — குறிப்பாக 12 ஜோதிர் லிங்கத் தலங்களில் ஒன்றான சோமனாதபுரத்தைத் தரை மட்டம் ஆக்கிக் கொள்ளை அடித்து ஆப்கனிஸ்தானத்தில் உள்ள கஜினியில், தங்க வாசல் கதவுகளைக் — கோட்டைக் கதவுகளை அமைத்தான். அவன் கூட 11 ஆம் நூற்றாண்டில் வெளியிட்ட நாணயங்களில் பாரசீக மொழியுடன் சம்ஸ்கிருத மொழியில் காசுகளை அச்சிட்டான் — இந்தக் காசுகள் பிரிட்டிஷ் மியூசியத்தில் உள்ளன என்கிறார் பண்டிட்.

தமிழர்களுக்கு இது வியப்பு அளிக்காது. ஏனெனில் தமிழர்கள் தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் இரு கண்கள் எனப் போற்றினர். புற நானூற்றில் நிறைய புலவர்கள் பெயர்கள் — வால்மீகி, பிரம்மன், தாமோதரன், விஷ்ணுதாசன், கண்ண தாசன், காமாட்சி (காமக்கண்ணி), பூதப்பாண்டியன், சங்கவருணர், சாஸ்தா, கௌசிகன், பரணர், கபிலர் — என்று சம்ஸ்கிருதத்தில் இருப்பதை முன்னரே கண்டோம்.


kashmiri-belle-PH79_l

வள்ளுவர் ஒவ்வொரு அதிகாரத்திலும் சம்ஸ்கிருதச் சொற்களைக் கையாளுவதையும் முதல் குறள், கடைசி குறள்களில் சம்ஸ்கிருதச் சொற்கள் இருப்பதையும் கண்டோம். அவருடைய மனைவி வாசுகியின் பெயரும் சம்ஸ்கிருதம் என்பதை  அறிவோம். கண்ணகி, கோவலன் அப்பாக்கள் பெயர்கள் கோவலன் (கோபாலன்) பெயர்கள் சம்ஸ்கிருதம் என்பதை நாம் அறிவோம். அப்பரின் சகோதரி திலகவதி, காரைக்கால் அம்மையார் பெயர் புனிதவதி சம்ஸ்கிருதப் பெயர்களே என்பதை எல்லாம் நாம் அறிவோம். ஆக கஜினி முகமது சம்ஸ்கிருதத்தில் நாணயம் வெளியிட்டது —

 

நாணயம் ( நேர்மை) -உடைய –

நாணயம் (காசு, பணம்) உடைய —

நா நயம் (சொல் வளம் ) மிக்க —

தமிழர்களுக்கு வியப்பளிக்காது.

பர்தா என்ற சொல் இந்தியாவில் இல்லை!

 

முகத்தைத் திரை கொண்டு மறைப்பது “தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி” என்று பாரதியார் ஒரு பாட்டில் சாடுகிறார். இதே போல காஷ்மீரிலும் இவ்வழக்கம் இல்லை என்கிறார் பண்டிட். “ சம்ஸ்கிருதத்தில் பர்தா என்ற சொல்லுக்கு இணையான சொல் அகராதியிலேயே இல்லை. இந்தியர்கள், ராணிகள் வசிக்கும் இடத்தை அந்தப்புரம்  —- ( இந்த சம்ஸ்கிருதச் சொல்லுக்கு அரண்மனையின் உட் பகுதி என்று பொருள்) — அல்லது சுத்தாந்த ( தூய உட்பகுதி) என்பர்”

இதற்குப் பின் அவர் ராஜ தரங்க்கிணியில் உள்ள கலப்புத் திருமண விஷயங்களை எடுத்துக் காட்டி காஷ்மீரி பெண்கள் எவ்வளவு சுதந்திரம் அனுபவித்தனர் என்பதையும் காட்டுகிறார். (காஷ்மீர் வரலாற்றை கல்ஹணர் எழுதிய 200 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் முஸ்லீம்கள் ஆட்சியைக் கைப்பற்றினர்).

“ காஷ்மீர் வரலாற்றில் புகழ்பெற்ற லலிதாத்தியன், சந்திரபீடா ஆகியோர் ஒரு பனியா (வணிகர்) பெண்ணுக்குப் பிறந்தவர்கள்.அவள் ஏற்கனவே திருமணமாகி கணவனை விட்டுப் பிரிந்தவள் ( ஏழாம் நூற்றாண்டில்).

 

சக்ரவர்மன் என்பவன் தீண்டத்தகாத ஜாதி என்று சொல்லப்பட்ட டொம்பா பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டான். அவளுக்கு உயர்ஜாதிப் பெண்கள் சாமரம் வீசினர். அவளுடைய சகோதரர்கள் அமைச்சர்களாக நியமிக்க ப்பட்டனர்” — என்று பல விஷயங்களை ராஜதரங்கினியில் இருந்து எடுத்துக் காட்டுகிறார்.

 

காச்மீர் பெண்கள் அழகில் எவ்வளவு சிறந்தவர்களோ அந்த அளவுக்கு சம்ஸ்கிருதப்பெயர்கள் சூட்டுவதிலும் சிறந்தவர்கள் என்று கல்ஹணர் குறிப்பிடும் பெண்களின் பெயர்ப்பட்டியலையும் தருகிறார். அதை இன்றைய ஆங்கிலப் பகுதிக் கட்டுறையில் காண்க. பின்னர் தமிழில் தருகிறேன்.

 

-சுபம்–

Leave a comment

Leave a comment