அற்புதப் பாடல் ராகவனே ரமணா!

guru_teach_rama

Article No.1750; Date:- 26  March, 2015

Written by S NAGARAJAN

Uploaded at London time  6-15 GMT

 

 

தமிழ் திரைப்படங்களில் ராமர் – 15

ச.நாகராஜன்

ராகவனே ரமணா ரகுநாதா!

 

அற்புதப் பாடல் ராகவனே ரமணா

 

தமிழ் திரைப்படங்களில் அற்புதமான பாடலாக மலர்ந்து அழியாத இடம் பெற்று விட்ட ஒரு பாடல் ராகவனே ரமணா ரகுநாதா. இயக்குநர் மணிவண்ணன் இயக்கி, 1983ஆம் ஆண்டு வெளியான இளமைக் காலங்கள் படத்தில் இது இடம் பெற்றது.

தேனினும் இனிய குரலில் பி.சுசீலாவும் எஸ்.பி.சைலஜாவும் பாடிய இந்தப் பாடலை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும். அப்படி அருமையாக, இனிமையாகப் பாடியுள்ளனர். இதற்கு இசை அமைத்துள்ளவர் இளையரயாஜா! வார்த்தைகளில் அவர் இசை விளையாடியதா, அல்லது அவரது இசைக்கென வார்த்தைகள் அபிநயம் பிடித்ததா என அனைவரும் வியக்கும் அளவில் பாடல் அமைந்திருக்கிறது.

rama guha

கவிஞர் முத்துலிங்கம் பாடல்! இளையராஜா இசை

 

பாடலை இயற்றியவர் கவிஞர் முத்துலிங்கம். இவர் ஒரு விழாவில் பேசுகையில் தான் சுமார் 1410 பாடல்களை இயற்றி உள்ளதாகவும், அவற்றில் இருநூறுக்கும் மேற்பட்ட பாடல்கள் ஹிட் என்றும் கூறினார். நடந்து கொண்டே சிந்தித்து எழுதும் பழக்கம் உடைய இவரது பல பாடல்களில் முன்னணிப் பாடலாக ராகவனே, ரமணா திகழும் என்பதில் ஐயமில்லை.

ராகவனே ரமணா ரகுநாதா                              பாற்கடல் வாசா .. ஜானகி நேசா                                               பாடுகின்றேன் வரம் தா .. ஆ ஆ  (ராகவனே)

கல்லான பெண் கூட உன்னாலே               பெண்ணாகி எழுந்தாளே மண் மேலே                                                     கல்லான பெண் கூட உன்னாலே                                               பெண்ணாகி எழுந்தாளே மண் மேலே

வைதேகி நாதா வடமலை ராஜா            வைதேகி நாதா வடமலை ராஜா                                                                                     ஆனந்தா… அன்பைத் தா           (ராகவனே)

தியாகேசர் உனை நெஞ்சில் பதித்தாரே             சங்கீத மலர் கொண்டு துதித்தாரே                                                 சங்கீத மலர் கொண்டு துதித்தாரே                          ஶ்ரீராமசந்த்ரா தசரத ராமா                                                     ஶ்ரீராமசந்த்ரா தசரத ராமா
ஆனந்தா… அன்பைத் தா           (ராகவனே)

 ramakoti

பாடலின் சிறப்பு

 

படத்தில் நடித்துப் புகழ் பெற்றோர் நடிகர் மோகன் மற்றும் நடிகை ரோஹிணி.

மோகனைப் பொறுத்த மட்டில் மைக்கின் முன்னால் நின்று ஒரு பாடலைப் பாடினாலேயே படம் வெற்றி தான் என்று திரைப்பட ரசிகர்கள் செல்லமாகக் கூறுவர். அலட்டிக் கொள்ளாமல் நடிக்கும் மோகனின் பல படங்கள் சுலபமாக நூறு நாட்களைத் தாண்டும். பயணங்கள் முடிவதில்லை, மௌன ராகம் என பல படங்களைச் சொல்லலாம்.

இளமையுடன் இருக்கும் ரோஹிணி நவராத்திரி கொலு முன்னர் பாட்டைப் பாடுவதாக காட்சி அமைப்பு உள்ளது. ராகவனே ரமணா ரகுநாதா என்ற பாடலை அவர் பாட ஆரம்பிக்க மோகன் அங்கு வந்து ஓரமாக நிற்கிறார்.

பாடலுக்கென பிரம்மாண்டமான இரு கைகள் விரித்திருக்கும்படியான ஒரு செட். அந்தக் கைகளில் அருமையாக அபிநயம் பிடித்து அனாயாசமாக ஆடுகிறார் ரோஹிணி. ஆனந்தா என்ற வார்த்தையில் இசை அபிநயம் பிடித்து ஆடுவதைப் பார்த்தும் கேட்டும் ரசிக்கலாம்!

அருமையான நாட்டியம். சிறந்த காமரா பதிவு. பாடல் முழுவதும் காமிராவின் விளையாட்டு சிறப்பாக இருப்பதால் நடிப்பு, பாடல், படப்பிடிப்பு, இசை என இந்த நான்கிலும் சிறந்து நிற்கிறது ராகவா ரமணா!

 ramayana

தியாகராஜர் போற்றும் பாதகமலங்கள்

 

பாடல் சொல்லும் கருத்தில் தியாகராஜர் உயர்கிறார்.

அவர் ராமரை நோக்கி கெஞ்சுவார்; அதட்டுவார்; உருகுவார்; கோபிப்பார்; சரணடைவார். சௌராஷ்டிர ராகத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஒரு கிருதியில் அவர் ராமர் பாத கமலங்களை எண்ணி எண்ணி வியக்கிறார்.

வினயமுனனு கௌஸிகுனி வெண்ட                                      சனினாங்க்ருலனு ஜுசுனதென்னடிகோ அந்து                                      வெனுக ராதினி நாதி ஜேஸின                                             சரணமுலனு ஜுகனதென்னடிகோ

என்ற பல்லவி கொண்ட பாடலில் ராமரின் பாதங்களை அவர் வியக்கும் விதம் இப்படி அமைந்துள்ளது

முதல் சரணம்

கனமைன ஸிவுனி சாபமு த்ருஞ்சின                                        பாதமுனு ஜூசுனதென்னடிகோ ஆ                                             ஜனக ராஜு பால கடிகினயா                                                      காள்ளனு ஜுகனதென்னடிகோ

விஸ்வாமித்திரரருடன் அடி நடந்து சென்ற அந்த பாதங்களை என்று நான் காண்பேனோ! அகல்யைக்கு சாப விமோசனம் தந்த அந்த பாதங்களை என்று நான் காண்பேனோ! சீதையின் ஸ்வயம்வரத்தில் சிவ தனுசை காலில் அழுத்தி நிறுத்திய

அந்த பாதங்களை என்று நான் காண்பேனோ! தன் திருமகள் கல்யாணத்தில், ஜனக மஹாராஜன் பாலினால் அலம்பிய அந்த பாதங்களை என்று நான் காண்பேனோ! என்று பொருள் தரும் அற்புதமான கிருதி இது.

தியாகையரையும் புகழ்ந்து அவர் துதித்த பாதங்களையும் கவிஞர் முத்துலிங்கத்தின் பாடல் சுட்டிக் காட்டுவதோடு,

“கல்லான பெண் கூட உன்னாலே                                               பெண்ணாகி எழுந்தாளே மண் மேலே”

என்ற வரிகள் மூலமாக தியாகையர் வியந்த பாதகமலச் சிறப்பையும் சுட்டிக் காட்டி விடுகிறது.

 ramalikita

கம்பனின் கவிதா வரிகள்

கம்பன் விஸ்வாமித்திரன் கௌதம முனிவரிடம் கூறுவதாகப் பாடியுள்ள அற்புத கவிதா வரிகளில் அஞ்சன வண்ணனின் கால் பட்டவுடன் நெஞ்சினால் பிழை இலாள் தன் முன்னைய உருவம் பெற்றாள் என்று சுவைபடக் கூறி இருக்கிறான் இப்படி:-

‘அஞ்சன வண்ணத்தான் தன்                                                          அடித்துகள் கதுவா முன்னம்

வஞ்சி போல் இடையாள் முன்னை

வண்ணத்தள் ஆகி நின்றாள்;

நெஞ்சினால் பிழை இலாளை,

நீ அழைத்திடுக’ என்னக்

கஞ்ச நாள் மலரோன் அன்ன

முனிவனும் கருத்துள் கொண்டான்    (அகலிகைப் படலம் பாடல் 85)

அகலிகை கல்லாக இருக்க அந்தக் கல்லின் மீது காகுத்தன் கால் பட்டதை கம்பன் அனுபவித்துக் கூறும் பாடல் இது:-

“கண்ட கல் மிசை காகுத்தன் கழல் துகள் கதுவ,

உண்ட பேதைமை மயக்கு அற, வேறுபட்டு, உருவம்

கொண்டு மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்பப்

பண்டை வண்ணம் ஆய் நின்றனள்” மாமுனி பணிப்பான்

(அகலிகைப் படலம் பாடல் 71)

ஆக பல்வேறு சிறப்புக்களைக் கொண்டுள்ள பாடலான ராகவனே ரமணா ரகுநாதா காலத்தால் அழியாப் பாடல்களில் ஒன்றாக நிலை பெறுகிறது.

இதுவரை இந்தப் பாடலைக் கேட்கவில்லை எனில் உடனடியாகக் கேட்டு விட்டு மனமகிழ்ச்சியுடன் இதர வேலைகளைத் தொடரலாம்!

***************

Leave a comment

Leave a comment