Rare Pictures of Ramayana from Picture Ramayana
Shabari worshipping Rama
Article No.1751; Date:- 27 March, 2015
Written by S NAGARAJAN
Uploaded at London time 8-19 GMT
28-3-2015 ஶ்ரீ ராம நவமி. அதையொட்டிய சிறப்புக் கட்டுரை இது! ராமரின் அருள் வேண்டி அவர் பாதம் பணிவோம்; நலம் பெறுவோம்! லோகாஸ் ஸமஸ்தா சுகினோ பவந்து!
ச.நாகராஜன்
இராமாயண நூல்கள்
ஆதி கவி வால்மீகி ராமாயணத்தைப் பற்றிய பல்லாயிரக்கணக்கான கட்டுரைகள் பல்வேறு மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. இராமாயணத்தை பல்வேறு கவிஞர்களும் காவியங்களாகத் தங்கள் தங்கள் மொழியில் இயற்றியுள்ளனர். பல்வேறு நாடுகளில் இன்று புழக்கத்திலிருந்து வரும் இராமாயணக் கதைகளும் ஏராளம். கம்ப இராமாயணம், துளஸி இராமாயணம், பவபூதியின் உத்தர ராம சரிதம், வாசிஷ்ட இராமாயணம், ஆனந்த ராமாயணம் என்று நூல்களின் பட்டியலைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
இராமாயண வெண்பா
இந்த வரிசையில் தமிழில் வெண்பாவைக் கொண்டு மட்டுமே இயற்றப்பட்டுள்ள அரிய நூல் இராமாயண வெண்பா. இதை இயற்றியவர் சமீப காலத்தில் மதுரையில் வாழ்ந்த மதுரகவி ஶ்ரீநிவாசையங்கார் என்பவர். இவர் வாழ்ந்த காலம் 1863-1937 என்பது தெரிய வருகிறது. இயற்றுவதற்கு மிகவும் கஷ்டமான வெண்பா பாக்களால் அமுதூறும் அழகிய சொற்களால் இராமாயணத்தை இயற்றியுள்ளது ஒன்றே இவரது அரிய புலமைக்கு ஒரு சான்றாகும்.இருபதாம் நூற்றாண்டில் மதுரையில் உள்ள சிறிய கிராமத்தில் இவர் வாழ்ந்திருந்தார் என்பதையும் தனது இந்த நூலை தமிழ்ச் சங்கத்திடம் ஒப்படைத்திருந்தார் என்பதையும் நாம் அறிய முடிகிறது. கிட்கிந்தா காண்டம் முடிய 1853 வெண்பாக்களும், சுந்தர காண்டம் மற்றும் யுத்த காண்டத்தில் 2061 வெண்பாக்களும் அடங்கியுள்ள அரிய நூல் இது!
Hanuman crossing the Ocean
நூலின் பெருமையை முதல் பாடலே நன்கு விளக்கி விடுகிறது!
உலகம் புகழ் அமுதம் ஒப்பாகும் தூய
நலன்மலிரா மாயணத்தை நன்கு – நிலன்மிசையான்
வெண்பாவால் பாடி வினைகடிய எப்பொழுதும்
கண்பாராய் மாருதிநீ காண்…. பாடல் 9
‘அமுதத்திற்கு ஒப்பாகும்; தூய நலன் மலி இராமாயணம்’ என்று இராமாயணத்தைப் புகழ்ந்து துதித்து அதை வெண்பாவால் பாட அனுமனைத் துதிக்கிறார் கவிஞர்.
ஆழ்வார்கள் பாடிய பாடல்களில் தெரிந்தெடுத்த அமுதூறும் சொற்களை நூல் முழுவதும் ஆங்காங்கே பார்க்க முடியும்.
கவிச் சுவையும் சொற் சுவையும் பொருள் சுவையும் உள்ள பாடல்களில் சுந்தர காண்டத்தில் உள்ள சில பாக்களை இங்கு பார்ப்போம்.
தவம் இருந்த தையல்!
எண்ண லெழுத லிசைத்த லெழின்மலர்ப்பூங்
கண்ணுறவே நோக்கல் கவினறிதல் – உண்ணுதலோ
டெல்லா மிராம னெனத் துயிலுங் கொண்டறியாள்
பொல்லா மணிநேரப் பொன் —–சுந்தர காண்டம் பாடல் 120
எண்ணுதல், எழுதல், இசைத்தல், கண்ணுற நோக்கல், கவின் அறிதல், உண்ணுதல் இவை எல்லாம் சீதைக்கு இராமன் என்ற எண்ணம் தான் என்பதைச் சொல்லி அவள் தூங்காமல் தவம் இருந்ததை துயிலும் கொண்டறியாள் என்ற வார்த்தைகளால் சொல்லி சீதையின் தவத்தை கவிஞர் அற்புதமாக ஒரே வெண்பாவில் விளக்கி விடுகிறார்.
Ravana attacking Jatayu
அனுமன் சீதையைக் கண்ட காட்சியைக் கவிஞர் இப்படி நயத்துடன் கூறுகிறார்:
இலக்கணமுஞ் சீரு மெழிலு மியல்புஞ்
சொலத்தகுந்த மற்றைத் துறையுஞ் – சிலைப்புயத்தான்
எம்பிரான் சொற்ற எமதனையே யென்றறிந்தான்
வம்புலாந் தார்க்கான் மகன் — சுந்தர காண்டம் பாடல் 142
“எம்பிரான் சொன்ன எம் அன்னை சீதை இவளே தான்” என்பதை இலக்கணமும் சீரும் அழகும், அவள் இயல்பும், இதர துறைகளும் காட்டி விடுவதை பல்துறை வித்தகனான அனுமன் அறிந்து கொண்டான்.
Ramayana donning garments to go to forest
யான் செய்த தவமோ!
சீதையைக் கண்ட அனுமன் வியக்கிறான்!
யான் செய்த மாதவமோ வன்றே லருளுடையான்
தான் செய்த வாடாத் தனித்தவமோ – வான் செய்த
நல்லுலகு செய் தவமோ நாகாப திர்தவமோ
சொல்லரிய தென்றான் துதித்து
நான் செய்த தவமா? அருள் உடையான் செய்த தவமா? வான் உலகு செய்த தவமா? நாகாபதிர் தவமோ? என்று மகிழ்கிறான் அனுமன்.
இராவணன் காம வெறியுடன் சீதையை அணுகி அவள் காலில் விழுவதையும் சீதா பிராட்டி வெகுண்டு அவனைக் கடிந்து துரத்துவதையும் மதுர கவி கவிஞர் விவரிக்கும் பாங்கே அலாதி!-
அணியிழாய்! காதல் அடங்காததாக , பிணி அகல வாழ்வி! எனப் பேணி – மணி வாள் முடி கீழ் உறவே முழு மாமலை போல அடி மேல் வீழ்ந்தான் அயர்ந்து!
Rama breaking the Bow (Shiva Dhanus)
ஏடா! மாடே! பேயே! முடி பத்தும் விழும்! திண்ணம் இது!
சீதை கூறுகிறாள்:-
ஏடா! நிருதற் கிறையே யிரக்கமிலா
மாடே! யறிவிலாவன் பேயே – நாடாமல்
என் சொன்னாய் வாழ்நாட் கிறுதியேன் செய்வாய்
வான் மின் செய்த தென்ன விரைந்து
ஆழிமழைக்கண்ண னருத னாடவர் கோன்
பாழியந்தோள் வீரன் படு சரத்தா – லேழைமதி
நின்முடிகள் பத்துநிலன் வீழுந் திண்ணமிது
கன்மனத்தா யெனவழிவாய் காண்!
ஏடா, இரக்கமிலா மாடே, வன் பேயே என்ற இந்த சுடு சொற்கள் போதாதா ராவணன் அழிவிற்கு!
என் தெய்வமும் நீ; செல்வமும் நீ!
அனுமன் அண்ணல் ராமனைப் பற்றிக் கூற அதைக் கேட்ட சீதை கூறுகிறாள்:-
எங்கோ மகனுக் கிருந்தூது வந்தெனது
பங்கமெலாம் நீத்துயிரும் பாலித்தாய் – இங்குனக்குச்
செய்யுங் கைமாறுளதோ தெய்வமுநீ செல்வமுநீ
அய்யனுநீ யன்னையுநீ யால்!
“என் கோமனுக்காக தூது வந்து என் பங்கம் நீத்து உயிர் பாலித்தாய். உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன். என் தெய்வம் நீ! செல்வமும் நீ! என் தந்தை நீ! என் தாயும் நீயே” என்ற சீதா பிராட்டியின் வார்த்தைகள் நம்மை உருக்குகின்றன!
அழகு ஊறும் அமுதச் சொற்களை உடைய இராமாயண வெண்பாவில் சில பாக்களைப் படிக்கும் போதே அதை முழுவதும் படிக்கும் ஆர்வம் எழும்.
Ramayana Sculptures from South East Asia
கம்பனுடன் கலந்து வாழி
இறுதியாக நூலின் முடிவில் உள்ள வாழ்த்துப் பாவில் கம்பனையும் மறக்கவில்லை கவிஞர்.
வாழி அனுமந்த நகர் வாழி மதுரகவி
வாழியவன் நூல்கள் வழிவழியே –வாழியவே
இம்பர் இராமாயண வெண்பா இன்னுரை
கம்பனுடன் வாழி கலந்து
காலம் காலமாகத் தோன்றி வரும் இராமபிரான் அடியார்களில் அற்புதமாக சமீபத்தில் மதுரையில் தோன்றி அழியாத நூலைத் தந்துள்ள மதுரகவி ஶ்ரீநிவாசையங்காரை வணங்கி அவர் நூலை வாழ்த்தி மகிழ்வோம்!
************
குறிப்பு:-
இந்த நூலை www.projectmadurai.org என்ற தளத்திலிருந்து இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த அரும் பணியைச் செய்துள்ள மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டத்தின் பொறுப்பாளர்களையும் இதற்கு உறுதுணையாக இருந்து அரும் பணி ஆற்றியோரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்! அவர்களுக்கு தமிழ் உலகம் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளது. நன்றி!






Sankarkumar
/ March 27, 2015Excellent article. Induces me to read this sacred book immediately. Thanks
a lot! On this holy Ramanavami day, you could have included the veNbA on
Sri Rama’s birth also! Thanks anyway!