இந்துக்கள் கண்டுபிடித்ததை வெளிநாட்டினர் மீண்டும் “கண்டுபிடித்த” விநோதம்!!

Compiled by London swaminathan

Article No.1842 Date: 2 May 2015

Uploaded at London time: 13-52

உலகம் உருண்டையானது என்பதை யார் முதலில் சொன்னார்கள்?

சூரியனை பூமி சுற்றுகிறது என்பதை யார் முதலில் சொன்னார்கள்?

கிரஹணம் எப்படி ஏற்படுகிறது என்பதை யார் முதலில் சொன்னார்கள்?

சந்திரனின் மீது படும் சூரிய ஒளியே அதன் பிரகாசத்துக்கு காரணம் என்பதை யார் முதலில் சொன்னார்கள்?

 

—–இது போன்ற பல கேள்விகளுக்கு விடை வேண்டும் என்று என்சைக்ளோபீடியாவுக்குப் போனீர்களானால் உங்களுக்கு தவறான தகவலே கிடைக்கும். இவை அனைத்தும் ரிக் வேதத்திலும் அதர்வ வேதத்திலும் ஏற்கனவே உள்ளன. அதுவும் வெள்ளைக்காரர்கள், ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு மொழிகளில் மொழிபெயர்த்த பகுதிகளில் உள்ளன. இருந்தபோதிலும் இவைகளை இன்னும் கலைகளஞ்சியங்களில் ஏற்றவில்லை!!!!

அதுமட்டுமல்ல. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட சங்கத் தமிழ் பாடல்களிலும் கடல் சூழ் மண்டிலம் என்று நிறைய இடங்களில் வருகிறது. பூகோளம், ககோளம் என்ற சொற்கள் சம்ஸ்கிருதத்தில் வருகின்றன. கோளம் என்பதில் இருந்தே ‘குளோப்’ (பூமி உருண்டை) என்ற சொல் வந்தது.

வேத இலக்கியத்தில் வரும் 27 நட்சத்திர முறையை ஐரோப்பியர்கள் ரிக் வேத காலமான கி.மு 1700-ல் அறிந்திலர். ஆகவே நாம் யாரிடமும் வானவியலையோ சோதிட சாத்திரத்தையோ கடன் வாங்கவும் இல்லை. இந்துக்கள் வெளி நாட்டில் இருந்து வந்து இங்கு குடியேறவும் இல்லை.

ஜெர்மானிய அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும், சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்காதர திலகரும் ரிக் வேதத்தில் உள்ள வான சாத்திரக் குறிப்புகளை தனித்தனியே ஆராய்ந்ததில் வேதத்தின் காலம் கி.மு.4500—க்கு முன் என்று கண்டறிந்தனர். இருவரும் ஒருவர் மற்றொருவரை அறியாமல் செய்த ஆராய்ச்சியில் கிடைத்த வியத்தகு முடிவு இது. இன்னும் கொஞ்சம் காலத்தில் மேலை உலகமும் இதை ஒப்புக் கொள்ளும்.

1.வானசாத்திரம் பற்றிய படிப்பை ரிக் வேத முனிவர்கள் நட்சத்திர வித்யை என்றும் வானசாத்திர வல்லுனர்களை ‘நட்சத்திர தர்ச’ அல்லது ‘கணக’ என்றும் அழைத்தனர். சங்கத் தமிழரும் ‘கணி’ என்றே அழைத்தனர்.

2.ரிக் வேதகால ரிஷிகள் பிருத்வி=பூமி, அந்தரிக்ஷம் (நடு), தியௌ (வானம்) என்று மூன்றாகப் பிரித்தனர் (1 -115-1, 2-40-4 etc).

3.பூமி வட்ட வடிவமானது என்றும் அது அந்தரத்தில் தொங்குகிறது என்றும் ரிஷிகள் கூறினர் ( RV 1-33-8; 4-55-3). சதபத பிராம்மணமும் பூமியை பரிமண்டலம் என்று கூறுகிறது. சங்கத் தமிழரும் மண்டிலம் என்றே கூறினர்.

4.பூமி சுற்றுகிறது என்றும் அது சூரியனால் நிகழ்கிறது என்றும் அவர்களுக்குத் தெரியும். பகல், இரவு, பருவ காலம் ஆகியனவும் சூரியனால் நிகழ்கிறது என்பதும் வேதங்களில் உள்ளது ( RV 6-58-1, 1-95-3).

5.நிலவு என்பது சூரியனின் ஒளியைப் பிரதிபலிக்கிறது என்பதையும் ரிஷிகள் கூறுகின்றனர் (9-71-9).

6.குதிரைக்கு 34 -விலாஎலும்புகள் (17+17) இருப்பதாக(RV 1-161-18) வேதம் கூறுவதும் வானசாத்திரக் குறிப்பு என்று சில வெளி நாட்டினர் எழுதியுள்ளனர். ஐரோப்பிய குதிரைகளுக்கு 36 விலா எலும்புகள் என்பதால் ரிக்வேத கால இந்துக்கள் இந்த நாட்டில் தோன்றிய குதிரைகள் பற்றியே பேசியதும் அவர்கள் இங்கே தோன்றியவர்க ளேயன்றி வெளி நாட்டில் இருந்து வந்தவர்கள் அல்ல என்பதும் தெளிவாகிறது. அண்மையில் நடந்த ஆய்வில் காண்டாமிருகம், குதிரைகள் இங்கு தோன்றியதற்கான பாஸில் அச்சுகளும் (படிம அச்சு) கிடைத்திருக்கின்றன.

7.ஒரு ஆண்டை 12 ராசிகளாக/ 12 மாதங்களாகப் பிரித்ததும் வேத கால விற்பன்னர்களே. சூரியனின் போக்கை அனுசரித்து தட்சிணாயனம், உத்தராயணம் என்றும் ஆண்டை இருகூறாகப் பிரித்தனர். ஆறு பருவங்களாகப் பிரித்தனர். தொல்காப்பியமும் ஆறு பருவப் பிரிவையே கூறுவதால்  இந்துக்கள் ஐரோப்பாவில் இருந்து குடியேறவில்லை என்பது தெளிவாகிறது. ஐரோப்பாவிலும் பிற நாகரீகங்களிலும் ஆறு பருவப் பிரிவுகள் கிடையாது.

8.நட்சத்திரங்களை 27 ஆகவும் அபிஜித் என்னும் நட்சத்திரம் துருவ நட்சத்திரமாக இருந்த காலத்தில் 28 ஆகவும் பிரித்திருந்தனர்.

9.ஆண்டுத் துவக்கத்தை மார்ச்/ஏப்ரலிலிலும், டிசம்பரிலும்/மார்கழி (மாசானாம் அஹம் மார்கசீர்ஷம்—பகவத் கீதை) இந்துக்களின் நூல்கள் கூறுவதால் அவர்கள் வெவ்வேறு நட்சத்திர நிலைகளை அறிந்ததும் அவ்வளவு பழைய காலத்தில் அவர்கள் வாழ்ந்ததும் தெரிகிறது வானாவதாரத்தில் ஓங்கி உலகளந்த உத்தமன் மூவடியால் உலகத்தை அளந்த குறிப்பும் வேதத்தில் உள்ளது இதுவும் வான சாத்திரக் குறிப்பு என்ற ஒரு விளக்கம் உளது.

10.ஒரு சில குறிப்புகளை மட்டும் வைத்து வேத கால நாகரீகத்தை மதிப்பிட முடியாது. அவர்கள் வான சாத்திரம் முதல் பிராணி இயல், மருத்துவம் வரை கூறும் எல்லா விஷயங்களையும் ஒட்டு மொத்தமாகப் பார்க்கையில் — அவர்கள் கூறும் பிரம்மாண்டமான எண்களைப் பார்க்கையில் — இன்று கம்ப்யூட்டர்களுக்கு எல்லாம் மூல காரணமாக இருக்கும் பூஜ்யம் முதலியவற்றைக் கண்டு பிடித்ததைப் பார்க்கையில் — எல்லோரும் இன்புற்றிருப்பதேயன்றி வேறொன்றும் அறியோம் என்ற கருத்ததைத் தொனிக்கும் ரிக்வேதத்தின் கடைசி துதியைப் பார்க்கையில் —- உலகிலேயே அதிக நாகரீகம் வாய்ந்தவர்கள் வேத கால இந்துக்களே என்று துணியலாம்.

11.சூரிய, சந்திர கிரகணங்கள் பற்றிய குறிப்புகள் ரிக் வேதத்திலும் அதர்வணத்திலும் உள. அது பூமி, நிலவின் நிழல்களால் ஏற்படுவதையும் கூறி இருக்கின்றனர்.

இது எனது ஆங்கிலக் கட்டுரையின் சுருக்கம். முழு விவரம் வேண்டுவோர், சில தினங்களுக்கு முன் வெளியான ஆங்கிலக் கட்டுரையைக் காணவும்.

Leave a comment

1 Comment

  1. Anantharaman Venkataraman's avatar

    Great! Swmay Sir……Thanks a lot

Leave a comment