Written by London swaminathan
Post no.1879, Date: 21 May 2015.
இலக்கியப் பணியில் கண்ணதாசன்! – 2
By ச.நாகராஜன்
சரஸ்வதி அருள் பெற்ற கவிஞர்!
மடை திறந்த வெள்ளம் போல வாயைத் திறந்தவுடன் கவிதை வெள்ளமாகப் பொழிய வேண்டுமெனில் அதற்கு முதல் காரணம் இறைவனின் திருவருள் தான் என்பதைக் கண்ணதாசன் மிக நன்றாக உணர்ந்திருந்தார்.
அவரிடம் நெருங்கிப் பழகி அவரது உதவியாளராக இருந்த இராம.முத்தையா கண்ணதாசனைப் பற்றிக் கூறுவது இது:-
“அவர் அடிக்கடி சொல்லிக் கொள்வது; “எனக்குள் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது. அந்த சக்தியால் தான், நான் எதையும் சிந்திக்க, எழுதவும் முடிகிறது!” என்று. ஒரு வேளை நான் மகாகவி பாரதியின் மறு பிறப்பாக இருப்பேனோ, என்று கூட அவர் சிந்தித்துப் பார்ப்பார்.’ஆகவே நானும் சிறு வயதிலேயே இறந்து விடுவேனோ என்றும் பயப்படுவார்.”
‘தெய்வத்தை நம்பி..’ என்ற கட்டுரையில் இராம. முத்தையா எழுதிய வரிகள் இவை.
எல்லாக் கவிஞர்களுக்கும் அதீத படைப்பாற்றல் தோன்றி நம்ப முடியாத வார்த்தைச் சித்திரங்கள் தம்மிடமிருந்து வந்து விழுகின்ற போது அதை அவர்களாலேயே நம்ப முடியவில்லை – இதை நாமா எழுதினோம் என்று! அருளாளர்களும் இதே போலவே உணர்கின்றனர்.
ஓரிரு எடுத்துக்காட்டை மட்டும் இங்கு பார்ப்போம். வெள்ளம் போல் கலைப் பெருக்கும் கவிப் பெருக்கும் துள்ளி வர அற்புத கவிதைகளை மழையெனக் கொட்டிய மஹாகவி பாரதியார், “ மனத்தினிலே நின்றிதனை எழுதுகின்றாள் மனோன்மணி யென் மாசக்தி வையத்தேவி” என்று கூறி இறைவி தன்னுள் இருப்பதை உணர்ந்து பேசுகிறார்.(பாரதி அறுபத்தாறு – முதல் கடவுள் வாழ்த்துப் பாடல்)
“யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்ததனால்” என்று வாக்கிற்கு அருணகிரி என்று போற்றப்படும் மகான் அருணகிரிநாதர் முருகனே தனக்குத் தானே தன் மூலம் அனைத்தையும் படைத்துக் கொண்டதாகச் சொல்கிறார். (கந்தர் அனுபூதி – பாடல் 17)
திருமூலரோ, ‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே!” என்கிறார். (திருமந்திரம் பாடல் 81)
இப்படி பல உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
இளையராஜா பெற்ற வாழ்த்து
இசைஞானி இளையராஜா அற்புதமாக இந்தக் கருத்தை இப்படிப் பதிவு செய்கிறார்:-
“இசையமைப்பாளனாக அறிமுகமான பின், அதே ‘அருண் பிரசாத் மூவிஸில்’ எனது இரண்டாவது படமான ‘பாலூட்டி வளர்த்த கிளிக்கு’ப் பணியாற்ற நேர்ந்த போது, கவிஞர் என்னைப் பார்த்ததும், “நீதானா அந்த இளையராஜா! நான் அப்பவே நெனச்சேன், நீயாகத் தான் இருக்குமென்று!” என்று தன் உள்ளம் திறந்த வாழ்த்தையும் கூறி, என்னை வரவேற்கும் விதத்தில், ‘கண்ணோட கண்ணு’ என்ற பாடலில்,
“வா, ராஜா, வா!”
என்ற தனது வாழ்த்து முத்திரையையும் பதித்தார்.
கவிஞர் சரஸ்வதி தேவியின் அருள் பெற்றவர். அவருடைய வாக்குப் பொய்த்ததே இல்லை! அதற்கு எத்தனையோ பாடல்களை உதாரணமாகச் சொல்லலாம். ‘பாட மாட்டேன்’ என்ற அடிகளைப் பாடியதால் தான், கே.ஆர்.ராமசாமி அந்தப் பாடலுக்கப்புறம் பாடவே முடியவில்லை. இதெல்லாம் நீங்கள் அறிந்ததே.”
இளையராஜாவின் ஏற்றத்திற்கு ஒரு காரணம் கவிஞரிடம் அவர் வாங்கிய ஆசிகள் என்பதையும் அவர் வாக்கில் சரஸ்வதி குடி கொண்டிருந்தாள் என்பதையும் அவரே இப்படி, “கவிஞர் என் கனவில் வந்தார்; பாடல் எழுதினார்!” என்ற கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.
நீண்ட நாள் வாழ வேண்டும்
தனது இலக்கியப் பணிக்கு நீண்ட வாழ்நாளை அவர் எதிர்பார்த்து இறைவனிடம் யாசித்தார். அவன் தருவானோ இல்லையோ, என்ன நினைக்கின்றானோ என்று ஒரு பதிவையும் அவரே செய்து விட்டார்.
கவிஞரின் ஐம்பதாவது பிறந்த தினம் வந்த போது பிறந்த நாள் காண்பதில் பிழை இலை என்கிறார்:-
“இறந்த நாள் அனைத்தும் எண்ணி இனி வரும் நாளை எண்ண
பிறந்த நாள் காணு கின்றோம் பிழை இலை; ஆயின் வாழ்வில்
சிறந்த நாள் கணக்குப் பார்த்துத் தேர்ந்துகொண் டாடல் வேண்டும்
பறந்த நாள் இனி வராது பாக்கி நாள் நன்னாளாக!”
என்கிறார்.
கண்ணதாசனைப் பற்றிக் கண்ணதாசன்!
தனது வாழ்க்கையை – சிறந்த நாள் கணக்குப் பார்த்து – அவரே ஒரு மதிப்பீடும் செய்து கொள்கிறார் இப்படி:-
“ஐம்புலன் ரசித்த வாழ்வு அறம் மறம் நிறைந்த வாழ்வு
ஐம்பொறி துடித்த வாழ்வு ஆயிரம் படித்த வாழ்வு
ஐம்பதை நெருங்கும் போது அகம்புறம் கணக்குப் பார்த்து
பைம்புகழ் இனியும் காண பரமனே அருள்வானாக!”
இதை விட, கண்ணதாசனை இன்னொருவரால் மதிப்பிட்டு விட முடியுமா என்ன. அழகான மதிப்பீடு! அளவான மதிப்பீடு! அறத்தின் அளவிலான மதிப்பீடு!
ஐம்புலனையும் ரசிக்க வைத்து, பாவ புண்ணியத்தைக் கலந்து, ஐம்பொறிகளையும் துடிக்க வைத்து, ஆயிரக் கணக்கான நூல்களைப் படித்து, அதைத் தமிழில் முடிந்த வரை வடித்து பைம்புகழ் கண்ட கவிஞர் இன்னும் நெடுங்காலம் வாழ இறைவனை இப்படி வேண்டுகிறார்:-
“ஆண்டுகள் ஐம்பதாகும் ஆரம்பம் திருநாளாகும்
ஆண்டுகள் அறுபதானால் அந்தியில் நன்னாளாகும்
ஈண்டு யான் ஐம்பதாண்டை இனிதுற வரவேற்கின்றேன்
நீண்ட நாள் வாழ ஆசை நிமலன் என் நினைக்கின்றானோ!”
நீண்ட நாள் வாழ ஆசைப்பட்ட கவிஞர் அறுப
தைக் கூடப் பார்க்கவில்லை; நிமலனின் நினைப்பு அப்படி இருந்தது!
சரி, நீண்ட நாள் வாழ வரம் கேட்ட கவிஞர் மரணம் கண்டு அஞ்சினாரா! இதையும் வாத, பிரதிவாதம் செய்ய அவர் இடம் கொடுக்கவில்லை, பதிலை அவரே கூறி விட்டார்!
அது அடுத்த அத்தியாயத்தில் ..
–தொடரும்


