அரிய பஞ்சமுக வாத்யம்!

പഞ്ചമുഖമിഴാവ്൧

Written by London swaminathan

Research article no.1885,

Date: 24 May 2015; London Time: 7-44 am

((படங்கள் வெவ்வேறு இடங்களிலிருந்து எடுக்கப்பட்டன;நன்றி))

பஞ்சமுக வாத்யம் என்னும் தோல் கருவி ஒரு அரிய இசைக் அருவி. இது தேவாரத்தில் “குடமுழா” என்று குறிப்பிடப் படுவதிலிருந்து ஒரு காலத்தில், சோழநாட்டில் பெருவாரியாக பயன்படுத்தப்பட்டது தெரிகிறது.

இது பஞ்ச உலோகத்தால் ஆகியது. அதன் அடிப்பகுதி கடம் என்னும் வாத்தியம் போல பெரிய பானை வடிவத்தில் இருக்கும். அதற்கு ஐந்து முகங்கள் உண்டு. அவை ஒவ்வொன்றும் வட்ட வடிவில் இருப்பதால் அதை வட்டத் தட்டு என்பர். இதைப் பசுத்தோல் போற்றி மூடி இருப்பர். ஒவ்வொரு முகத்தின் – வட்டத் தட்டின் – மீதும் மூடப்பட்டதோலின் கனமும் வேவ்வேறு அளவில் இருப்பதால் இது வெவ்வேறு ஒலியை எழுப்பும். அதாவது ஐந்து முகங்களும் ஐந்து விதமான ஓசையை எழுப்பும்.

இதை சிவன், தாண்டவம் ஆடும் போது, நந்திகேசுரர் வாசிப்பார்.

மயிலை.வேங்கடசாமி எழுதிய ஒரு பழைய கட்டுரையில் கொடுத்த தகவல்களைத் தொகுத்துத் தருகிறேன்:

இது அதிக கனமான கருவி. ஆகையால் மரச் சட்டத்தின் மீது அதை வைத்து, சட்டத்தின் கீழ் சக்கரங்களைப் பொருத்தி இருக்கிறார்கள். இதனால் இதை எங்கேயும் எளிதில் வண்டி போல உருட்டிச் சென்றுவிடலாம்.

சிவனுக்கு ஐந்து முகங்கள் உண்டு. அவை ஐந்து வகையான தொழில்களைப் புரிகின்றன என்று சைவ ஆகமங்கள் சொல்லும். இந்த ஐந்து முக, ஐந்து தத்துவ விஷயங்களை விளக்குவதே பஞ்ச முக வாத்யம் ஆகும்.

IMG_3721 (2)

அதாவது சிவனுடைய பஞ்ச க்ருத்யங்களை – ஐந்து தொழில்களை—ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் — என்னும் ஐந்து செயல்களை விளக்க நடராஜப் பெருமான் ஐந்து வகை நடனங்களை ஆடினார். ஒவ்வொன்றுக்கும் வேறுவேறு ஒலிகள் தேவைப் பட்டதால் ஐந்து முகங்களிலும் தோலின் மென்மையும், பருமையும் அதற்குத் தக அமைக்கப்படது.

ஐந்து முகங்களுக்கும் நான்கு திசைகளின் பெயர்களையும், நடுவில் உள்ள முகத்தை ஆகாய திசை என்றும் சொல்லுவர்.

கீழேயுள்ள பட்டியலைப் பார்த்தால்  இது விளங்கும்:

ஆக்கல் – சதியோஜாதம்- மேற்கு

காத்தல் – வாமதேவம்- வடக்கு

அழித்தல் – அகோரம் – தெற்கு

மறைத்தல் – தத்புருஷம் – கிழக்கு

அருளல்- ஈசானம் – வானம்

சில பஞ்சமுக வாத்யங்களில் பாம்பு, மலர்கள் போன்ற சித்திர வேலைப் பாடுகளும் உள.

எனது கருத்து:

நம்முடைய இசைக் கருவிகள் இந்து மத தத்துவங்களை விளக்க வந்தவை என்பது மிகவும் வியப்பான விஷயம். இப்படி ஒவ்வொரு இசைக் கருவியையும் ஆராய்ந்தால் புதிய விஷயங்கள் புலப்படலாம். இதை எழுதுவதற்க்குக் காரணம், மஹா பாரதப் போர் துவங்கும்போது வாசித்த ஆறு சங்குகளின் பெயர்களை பகவத் கீதையில் காணலாம். அதில் கிருஷ்ணன் ஊதிய சங்கின் பெயர் பாஞ்சஜன்யம் (கீதை -15). இதிலும் ஐந்து ஒலிகள் பற்றிய குறிப்பு உளது.கிருஷ்ணனின் புல்லாங்குழலிலும், சரஸ்வதியின் வீணையிலும் பல தத்துவங்கள் இருகின்றன.

“தவம் செய்த தவம்” என்ற அருமையான நூலில், தொல் பொருட் துறை அறிஞரும் வரலாற்றுப் பேரறிஞருமான டாக்டர் இரா.நாகசாமி கீழ்கண்ட தவலை எழுதியுள்ளார்: இன்றும் கூட கேரளத்திலும் தமிழ்நாட்டில் திருவாரூர், திருத்துறைப் பூண்டி ஆகிய இடங்களிலும் இந்த வாத்தியம் பூஜை நேரத்தில் வாசிக்கப்படுவதை அற்கிறோம்:

“நந்திகேசுவரர் சிறந்த நாட்டியசார்யராக மட்டும் இல்லாமல் சிறந்த இசை ஆசிரியராகவும் திகழ்ந்திருக்கிறார். அம்பலத்தரசர் ஆடுகின்ற போது நந்தி மத்தளம் வாசிக்கிறார் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. தமிழ்நாட்டில் பல சிற்பங்களும் ஓவியங்களும் இக்காட்சியைச் சித்தரிக்கின்றன. “குடமுழா நந்தீசனை வாயில் காப்பாகக் கொண்டார்” என்பது தேவாரம். தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் பிற இடங்களிலும் உள்ள சிற்பங்களில் சிவன் ஆடும்போது நந்திகேசுவரர் பஞ்சமுக வாத்யம் என்னும் குடமுழா வாத்தியத்தை வாசிப்பதாக உள்ளதைக் காணலாம். திருவாரூர், திருத்துறைபூண்டி ஆகிய தலங்களில் இன்றும் பஞ்சமுக வாத்தியம் வாசிக்கப்படுகிறது. இதை பாரசவர் என்ற குலத்தோர் வாசிக்கின்றனர். அண்மையில் கிடைத்த “பஞ்சமுக வாத்தியலக்ஷணம்” என்னும் சுவடியில் இது நந்திகேசுவரரால் இசைக்கப்பட்டது என்றும், ஆதலின் இதை இசைக்கும் முன்னர் நந்திகேசுவரருக்குச் சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது. ஆதலின் வாத்ய சாஸ்திரங்களிலும் நந்திகேசுவரர் சிறந்தவர் என்பது தெரியவருகிறது”.

(தவம் செய்த தவம் — என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது. இந்நூலில் காஞ்சி மஹா பெரியவர் பற்றி உள்ள பல அரிய தகவல்களை அரிய டாக்டர் நாகசாமியின் http://www.tamilartsaademy.com வெப்சைட்டுக்குச் செல்லவும்.)

-சுபம்-

IMG_3722 (2)

நந்திகேஸ்வரர், பஞ்சமுக வாத்யம் வாசிக்கும் காட்சி.

Leave a comment

Leave a comment