Article No. 2044
Written by S NAGARAJAN
Swami_48@yahoo.com
Date : 5 August 2015
Time uploaded in London : – 8-52 am
My brother S NAGARAJAN has been contributing to Gana Alayam, Bhagya, E-zine and several other magazines and blogs for years. Following is his recent article (Pictures are added by me from various sources;thanks): London swaminathan
கடந்த நான்கரை வருடங்களாக டைரக்டர் கே.பாக்யராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளி வரும் பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடர் வெளியாகி வருகிறது.31-7-2015 இதழில் வெளிவந்துள்ள கட்டுரை இது.
அறிவியல் துளிகள் 232
மூன்றே நிமிடங்களில் மூளை ஆற்றலைக் கூட்டலாம்!
By ச.நாகராஜன்
“மூளையைப் பயன்படுத்துவதால் மூளை ஆற்றல் கூடுகிறது. உடல் பயிற்சி செய்வதால் உடல் வலிமை கூடுவதைப் போல” – ஏ.என்.வில்ஸன்
இன்டர்நெட் மூலமாக சமீபத்தில் பரபரப்பாக அனைவரும் படிக்கும் ஒரு விஷயம் மூன்றே நிமிடங்களில் மூளை ஆற்றலைக் கூட்ட முடியும் என்பது தான்!
சக்தி வாய்ந்த ஒரு சிறு பயிற்சி மூலம் இந்த அரிய மூளை ஆற்றலைப் பெறலாம் எனத் தெரிவிக்கப்படுவதால் அனைவரின் கவனமும் இதன் மீது திரும்பியுள்ளது.
முதன்முதலக அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து சிபிஎஸ் செய்தி அறிக்கை ஒன்று இதைக் கூறியதோடு இந்தப் பயிற்சி இப்படி ஒரு ஆற்றலைத் தருவது உண்மை தான் என யேல் நகரைச் சேர்ந்த மூளை இயல் நிபுணர் ஒருவர் கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகிய அனைவரும் கூறியுள்ளதையும் மேற்கோளாக எடுத்துக் காட்டியது.
ஆடிஸம் (autism) எனப்படும் மனவளம் குன்றிய நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களும், மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளும் இதனால் பெரும் பயன் அடைய முடியும் என்பது கூடுதலான போனஸ் தகவல்! அல்ஜெமீர் வியாதி உள்ள வயதானோருக்கும் இது பயன் அளிக்க வல்லது!
அத்தோடு மட்டுமல்ல, ‘டல்’லாக இருக்கும் மூளையை இது துடிப்புடன் செயல் பட வைக்கும். மந்த நிலையைப் போக்கும். உணர்ச்சியில் மாறுபாடு, மூட் சரியில்லை என்பன போன்ற குறைபாடுகளையும் இந்தப் பயிற்சி போக்குகிறது! நினைவாற்றலைக் கூட்டுவதுடன், ஸ்மார்ட்டாக ஒருவரை இது ஆக்குகிறது. எந்த மனநிலை உள்ளவருக்கும் கூட இது பொருந்துகிறது!
அது சரி, அந்தப் பயிற்சி தான் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள ஆசை மேலிடுகிறது, இல்லையா?
பாதங்களை நேராக இருக்கும்படி வைத்து கால்களை தோள்களின் அகலத்திற்கு விரித்து வைத்துக் கொள்ள வேண்டும். வலது காதை இடது கை கட்டைவிரல் மற்றும் சுட்டு விரலால் பிடித்துக் கொள்ள வேண்டும். இதே போல இடது காதை வலது கை கட்டைவிரல் மற்றும் சுட்டுவிரலால் பிடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் குந்தி அமர்ந்து மூச்சை உள்ளிழுக்க வேண்டும். பிறகு மெதுவாக எழுந்திருக்க வேண்டும். எழுந்திருக்கும் போது மூச்சை வெளியில் விட வேண்டும். ஆக இப்படி அமரும் போதும் எழுந்திருக்கும் போதும் மூச்சுப் பயிற்சியைச் சீராகச் செய்தல் வேண்டும். மூன்று நிமிடங்கள் தொடர்ந்து இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்தல் வேண்டும். ஐந்து நிமிடம் வரை தொடரலாம் என்றாலும், மூன்று நிமிடப் பயிற்சியே நிச்சயமாகப் போதும். எந்த வயதினரும் இதை செய்யலாம்!
லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த டாக்டர் எரிக் ராபின்ஸ் (Eric Robins), இந்தப் பயிற்சி மூலம் மூளை செல்களும் நியூரான்களும் ஆற்றல் உட்டப்பட்டவையாகின்றன என்கிறார். அவர் இதை தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு பிரிஸ்கிரிப்ஷனாக எழுதிக் கொடுத்து வருகிறார். அதனால் நோயாளிகள் மிக நல்ல பலனை அடைகின்றனர் என்கிறார். அவர் கூறும் ஒரு எடுத்துக்காட்டு இது: ஒரு பையன் பள்ளியில் பாடங்களைச் சரியாகவே கற்க முடியவில்லை. இந்தப் பயிற்சியைச் செய்ய ஆரம்பித்தவுடன் அவன் ‘ஏ’ கிரேடுடன் முதல் மாணவனாக ஆனான்.
யேல் நரம்பு–உயிரியல் நிபுணரான டாக்டர் யூஜீனியஸ் ஆங் (Yale neurobiologist Dr Eugenius Ang), காது மடல்களைப் பிடிக்கும் படும் போது மூளையின் நரம்புப் பாதைகளை தூண்டிவிடும் அகுபங்சர் புள்ளிகளை அழுத்துகிறோம் என்கிறார். மூளையின் இரு பாதிகளும் காது மடல்களின் எதிர்புறங்களில் உள்ளன. எதிரெதிர் கைகளைப் பயன்படுத்தி காது மடல்களைப் பிடிப்பதால் நுண்ணிய ஆற்றலைத் தூண்டும் மனித உடலின் ஒரு சிறப்பான அமைப்பைப் பயன்படுத்தியவர்களாக ஆகிறோம்.
இந்தப் பயிற்சியைச் செய்து முடித்த பின்னர் எடுக்கப்பட்ட இ இ ஜி (எலக்ட்ரோஎன்செபலோக்ராஃபி) முடிவுகளை ஆங் காண்பித்து விரிவான விளக்கம் ஒன்றைத் தந்தார். அதன்படி, இந்தப் பயிற்சி வலது மற்றும் இடது பக்க மூளைப் பகுதிகள் இரண்டையும் ஒருங்கியையச் செய்கிறது. சாதாரணமாக, இ இ ஜியின் மூலம் எடுக்கப்படும் அளவுகள் உச்சந்தலையில் எலக்ட்ரோடுகள் மூலமாக நியூரான் இயக்கங்கள் (neuron firings) மூளையில் ஏற்படுவதைக் காட்டி விடும். அத்தோடு மூளையின் அலை சமன்பாட்டையும் சீரற்ற தன்மையையும் (wave normalcies and abnormalities) கூட அது காட்டி விடும்.
டாக்டர் ஆங், “ விஞ்ஞான பாஷையில் கூறுவதெனில், மூளையானது ஒவ்வொரு கட்டுப்பாடு பகுதியையும் அதைக் கட்டுப்படுத்தும் உடல் பகுதியையும் பொருத்தமுற அமையச் செய்கிறது. இது மிகச் சரியாக அடையப்பட வேண்டிய ஒரு அமைப்பு முறை. இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட அமைப்பு முறை சாதாரணமாக யாருக்கும் அமைவதில்லை. இன்று விற்கப்படும் மூளை தொழில்நுட்ப சி.டிக்கள் இதை அடைவதற்காக நுண்ணிய ஒலிகளை ஹெட்போன் மூலமாக கேட்க வைக்கின்றன. ஆனால் இந்த எளிய பயிற்சியானது இப்படிப்பட்ட சிடிக்களின் தேவையே இல்லாதபடி இதை எய்த வழி வகை செய்கிறது” என இந்தப் பயிற்சி முறையைப் புகழ்கிறார்.
இதைப் படிக்கும் தமிழ் வாசகர்கள் இலேசாக புன்சிரிப்இபை நழுவ விட்டால் அதில் தப்பே இல்லை. எங்கள் ஊரில் அப்பா, அம்மா, வாத்தியார் சின்ன வயதிலேயே பிள்ளையார் முன்னால் போடச் சொன்ன தோப்புக்கரணத்திற்கு இப்படி ஒரு ‘மாடர்ன் பில்ட் அப்’பா என்று கேட்டால் அது நியாயம் தானே!
வகுப்பில் கேள்விக்கு பதில் சொல்லாத மாணவர்களை ‘உக்கி’ போட வைத்து அவர்களின் மூளைச் செயல்பாட்டைக் காலம் காலமாகத் தூண்டி விட்ட நம் அருமை பள்ளி ‘வாத்தியார்கள்’ டாக்டர் ஆங்கின் நவீன சோதனைகளைச் செய்தா, வழி வழியாக அதைச் செய்து வந்தார்கள்!
நம் முன்னோர்கள் சொன்ன எதிலும் ஒரு ஆழ்ந்த அர்த்தம் இருக்கிறது என்பதை நிரூபிக்க இந்த தோப்புக்கரண சித்தாந்தமும் இப்போது உலகெங்கும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
இதை முதன் முதலாக ப்ராணிக் ஹீலிங் மாஸ்டர் கோயா சோக் சூயி (Koa Chok Sui) தனது ‘சூப்பர் ப்ரெய்ன் யோகா” என்ற நூலில் எழுதினார். பல இடங்களுக்குப் பயணம் செய்து இதை அறிமுகப்படுத்திப் பரப்பினார்.
செலவில்லாத மூன்று நிமிட தோப்புக்கரணத்திற்கு வித்திட்ட பிள்ளையாருக்கு ஒரு தோப்புக்கரணம் போட்டு நமது பணிவான நன்றியைத் தெரிவித்து மூளை ஆற்றலைக் கூட்ட ஆரம்பிக்கலாமே!
***************
-Subham-





You must be logged in to post a comment.