நான் கண்ட நால்வர்

bharati malar

Article No. 2102

Written by S NAGARAJAN
Date : 27 August  2015
Time uploaded in London :– காலை 8-43

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்! – 4

ச.நாகராஜன்

நான் கண்ட நால்வர்

1959ஆம் ஆண்டு பிரபஞ்ச ஜோதி பிரசுராலயத்தால் வெளியிடப்பட்ட இந்த அருமையான நூலை எழுதியவர் தமிழ் உலகம் நன்கு அறிந்த அறிஞர் வெ.சாமிநாத சர்மா (1895-1978) ஆவார். மீண்டும் செப்டம்பர் 1998இல் இதை மறுபதிப்பு செய்த பெருமை திரு வே.சுப்பையா (அமரர் வெ.சாமிநாத சர்மாவின் பக்தர் இவர்) பூங்கொடி பதிப்பகம் சென்னையைச் சாரும்.

திரு.வி.கலியாண சுந்தர முதலியார், வ.வே.சு. ஐயர், சுப்ரமணிய சிவா, மகாகவி பாரதியார் ஆகிய நால்வரைப் பற்றிய நூல் இது.

இந்த நூலைப் படிக்கும் போது திரு வி.க, வ.வே.சு.ஐயர், சுப்ரமணிய சிவா, பாரதியார் ஆகியோரிடையே நிலவிய நட்பை நன்கு உணர முடியும். திரு வி.க. ஆசிரியராக இருந்த தேசபக்தன் பத்திரிக்கையின் வரலாறு மிக சுவையாக நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. அதில் வெ.சாமிநாத சர்மா பணி புரிந்து வந்ததால் ஒரு நேரடி அனுபவத்தை நாம் உணர்கிறோம். ஏராளமான சுவையான சம்பவங்களை விவரிக்கும் இந்த நூலை பாரதி ஆர்வலர்கள் நிச்சயம் படிக்க வேண்டும்.

 

நேர்வழி செல்வோம்

சென்னை திலகர் கட்டத்தில் ஹிந்து பத்திரிகையின் ஆசிரியர் ஶ்ரீ கஸ்தூரி ரங்க ஐயங்கார் தலைமை வகித்துப் பேசிக் கொண்டிருந்த கூட்டத்தில் கூட்டத்தைக் கிழித்துக் கொண்டு, அதாவது உட்கார்ந்திருப்பவர்களைத் தள்ளி விட்டுக் கொண்டு வந்தார் மகாகவி பாரதியார்.

மேடையுடன் இணைக்கப்பட்டிருந்த பெஞ்சு ஒன்றை மேஜையாகக் கொண்டு பத்திரிகை பிரதிநிதியாக குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தார் வெ.சாமிநாத சர்மா. அங்கு வந்த கவிஞர் சர்மாவையும் ஹிந்து பத்திரிகையின் பிரதிநிதியாக வந்திருந்த வாசுதேவய்யர் என்பவரையும் சிறிது தள்ளி விட்டு நடுவில் உட்கார்ந்தார்.

சர்மாவுக்கு சிறிது ஆத்திரம் வந்தது. கவிஞரை முறைத்துப் பார்த்தார். “என்ன, முறைத்துப் பார்க்கிறீர்?” என்றார் கவிஞர்.

“ஒன்றுமில்லை, கூட்டத்தைக் கிழித்துக் கொண்டு இப்படிக் குறுக்காக வந்தீர்களே? சுற்றிக் கொண்டு வரக் கூடாதா?” என்று கேட்டார் சர்மா.

நாம் சுற்றுவழி செல்லமாட்டோம். நேர்வழி தான் செல்வோம்என்று உரக்கச் சொல்லிக் கொண்டே அவர் துடைமீது ஓங்கி ஓர் அறை அறைந்தார் கவிஞர். அறைந்து விட்டு ஹ, ஹவென்று சிரிக்கவும் செய்தார்.

இந்த வார்த்தைகளை மட்டும் மனிதர்கள் கடைப்பிடிக்க ஆரம்பித்தால் கடவுள் ராஜ்யம் என்பது பூவுலகில் வந்து இறங்கி விடும் என்று சொல்கிறார் சர்மா.

முருகா, முருகா, முருகா

 

 

சர்மா அவர்கள் கூறும் இன்னொரு சம்பவத்தை அவர் வார்த்தைகளிலேயே பார்ப்போம்:-

“பாரதியார் ஒரு சமயம் சென்னை ராயப்பேட்டை மோபரீஸ் ரோடிலுள்ள குகானந்த நிலையத்திற்கு வந்திருந்தார். அப்பொழுது கலியாணசுந்தர முதலியாரும் நானும் வேறு சில நண்பர்களும் அங்கிருந்தோம். மாலை நேரம். நிலையத்து மண்டபத்தில் குமரக் கடவுளின் திருவுருவப் படம் வைக்கப்பட்டிருந்தது. அந்த உருவம் பாரதியாரின் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்து விட்டது. “முருகா, முருகா, முருகா”, என்று தொடங்கும் பாடலை உணர்ச்சி ததும்பப் பாடினார். மாலை நேரத்து மஞ்சள் வெயில் அந்தப் படத்தின் மீது லேசாக படிந்து, முருகனுடைய  திருவுருவத்திற்குத் தனிச் சோபை கொடுத்தது. “வருவாய் மயில் மீதினிலே வடிவேலுடனே வருவாய்” என்ற சரணத்தை அவர் பாடி அதையே திரும்பத் திரும்பச் சொன்ன போது, அந்தக் குமர வடிவம் அவரை நோக்கி மெதுமெதுவாக வருவது போலவே இருந்தது. நாங்கள் அனைவரும் பரவசர்களானோம். அந்தக் காட்சி என் நெஞ்சத்தை விட்டு அகலவே அகலாது. முதலியார் இந்த நிகழ்ச்சியைப் பற்றி அடிக்கடி கூறி ஆனந்தப்பட்டிருக்கிறார்.

தேசபக்தன் பத்திரிகை மீது பாரதியாருக்குத் தனி அன்பு உண்டு. அதன் கருத்துக்களும் தமிழ் நடையும் அவருக்குப் பிடித்திருந்தன. இதற்காக முதலியாரைக் காணும்போதெல்லாம் அவரைப் பாராட்டுவார்.”

புத்தகம் முழுவதும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஏராளமான சுவையான செய்திகள் உள்ளன.

பாரதியார் திருநாளை முதலில் கொண்டாடியவர் சிவா

சுப்ரமணிய சிவா பற்றிய பகுதியில் பல செய்திகளைப் படித்து மகிழலாம்.

பாரதியார் அமரரான பிறகு சென்னையில் அவருடைய திருநாளைக் கொண்டாட வேண்டுமென்று முதன்முதலாக ஏற்பாடு செய்தவர் சிவனார் தான். திருவல்லிக்கேணியில் இப்பொழுது தேசீயப் பெண் பாடசாலை இருக்கிறதல்லவா, அது முந்தி தென்னந்தோப்பாயிருந்தது. அந்த இடத்தில் 1924ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் பாரதியார் அமரரான திருநாளன்று ஒரு பொதுக் கூட்டம் கூட்டினார். கூட்டத்திற்குச் சுமார் நூறு பேரே வந்திருந்தனர். கூட்டத் தொடக்கத்தில் ஶ்ரீ ரா.கிருஷ்ணமூர்த்தி (கல்கி) பாரதியாரின் வந்தே மாதரமென்போம், எங்கள் மாநிலத்தாயை வணங்குதுமென்போம்’ என்ற தொடக்கத்துப் பாடலையும் ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே” என்ற தொடக்கத்துப் பாடலையும் பாடினார். பிறகு திரு வி.கலியாணசுந்தர முதலியார் வீராவேசத்துடன் பேசினார்.”

272 பக்கங்கள் அடங்கிய இந்த நூல் பாரதி ஆர்வலர் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய நூல்!

*************

Leave a comment

Leave a comment