DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
WRIITEN BY ச.நாகராஜன்
Date : 13 September 2015
Post No. 2154
Time uploaded in London: – காலை 11-19
(Thanks for the pictures)
ச.நாகராஜன்
விஷய அடுக்கு
எதையும் அடுக்கினாலே அழகு தான். கொலு பொம்மைகளை அடுக்குவதில் தான் எத்தனை ஆயிரம் விதங்கள். வீட்டுக்கு வீடு படைப்பாற்றல் – கிரியேடிவிடி! அது ஒரு அழகு.
வார்த்தைகளையும் விஷயங்களையும் அடுக்குவது இன்னொரு அழகு!
அடுக்கு மொழி என்றாலே ஒரு கவர்ச்சி தான்! (தீயசக்திகள் தமிழகத்தில் தமிழர்களை ஏய்க்கும் அடுக்குமொழி தவிர மற்ற அனைத்தும் நல்லவையே)
ராமன், பரதன், கர்ணன் என்றால் மகிழ்ச்சியுடன் விஷயத்தைச் சற்று அறிந்து கொள்ள ஆவலாக இருக்கும்.
3 ராமர், 3 பரதர் 6 கர்ணர்கள் என்றால்.. ஆவல் பன்மடங்காகும்.
3 ராமர்கள் யார்?
தசரத ராமன், பரசுராமன், பலராமன்!
ராம நாமத்தால் இம்மை மறுமை நலம் பெறலாம். நன்மையும் செல்வமும் பெறலாம். சென்மமும் மரணமும் இன்றி இன்புறலாம்.
தசரத ராமனையா தெரியாது, ராம, ராம, ராம ராமஜயம்!
அடுத்து பரசுராமன். ஜமதக்னி-ரேணுகாவின் புதல்வர்!
பரசுராம பார்கவர்! தசரத ராமன் தந்தை, தாய் சொல்லைத் தட்டவில்லை. ஆனால் பரசுராமன் தந்தை சொல் தட்டவில்லை. தாயின் தலையைத் துண்டிக்க தந்தை ஆணையிட அதை சிரமேற்கொண்டு ஏற்ற தந்தை சொல் தட்டா தனயன் பரசுராமன்!
அடுத்து பலராமன்! கண்ணனின் அண்ணன். மகாபாரதப் போரின் போது தீர்த்த யாத்திரை சென்றவர் கடைசி க்ளைமாக்ஸில் வந்து தன் முத்திரையைப் பதிக்கிறார். துரியோதனன் – பீமன் சண்டையில் கதையை பீமன் துரியோதனனின் இடுப்புக்குக் கீழே துடையில் அடித்தது தவறு என்று ஆட்சேபணை கிளப்பியவர். தரையில் இருந்த போது தான் அடிக்கக் கூடாது, துரியோதனன் ஆகாயத்தில் உயர்ந்த போது கதை அவன் துடையில் பட்டது என்று மாமாயக் கண்ணன் அவரை சமாதானப் படுத்த அமைதியாகிறார். ஆயிரம் சம்பவங்கள் இவரைச் சுற்றி. அறியாமல் இருக்க முடியாதே!
பல்லக்கை சுமந்துவரும் ஜடபரதன்
மூன்று பரதர்கள் யார்
அடுத்த மூவர் – 3 பரதர்
ராமனின் தம்பி பரதன்
பரத வம்ச பரதன்
ஜட பரதன்
கானகம் வந்த பரதனை முதலில் சந்தேகித்து அவனது உண்மையான ராம பக்தியை அறிந்த பின்னர் குகன் கூறுவது:-
“தாய் உரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னை
தீவினை என்ன நீத்து, சிந்தனை முகத்தில் தேக்கி,
போயினை என்ற போழ்து, புகழினோய் தன்மை கண்டால்
ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ, தெரியன் அம்மா”
—- (அயோத்தியா காண்டம் குகப் படலம்)
சிந்தனை முகத்தில் தேக்கி, ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ, என்றெல்லாம் கம்பரைத் தவிரை வேறு யாரால் தான் சொல்ல முடியும் தெரியன், அம்மா!
அடுத்து பரதன்! பாரத தேசத்தில் பிறந்து பரதனைத் தெரியவில்லை என்றால் அது தேசீய அவமானம். புகழோங்கிய பரதனின் வழித்தோன்றல் என்பதில் தான் நமக்கு என்ன ஒரு பெருமிதம்!
அடுத்து ஜட பரதர். மான் ஈன்ற குட்டி மீது பாசம் வைத்து மறு ஜன்மம் பெற்றவர். பல்லக்கில் மன்னனை எட்டி எட்டி காலை வைத்துத் தூக்க, பல்லக்கு ஆட, மன்னன் கோபப் பட்டு இறங்கி, யார் நீ என்று வினவ, அவனுக்கு அடித்தது யோகம்! ஆன்ம லாபம் பெற வைத்த உபதேசத்தை ஜட பரதர் உபதேசித்த வரலாறு நம்மைப் புல்லரிக்க வைக்கும்.
மூன்று பரதருக்கும் ஒரு ஜே போட்டு 6 கர்ணர்களின் பக்கம் திரும்புவோம்.
ஆறு கர்ணர்கள் யார்?
மஹாரதி கர்ணன்
கௌரவ குலத்தில் பிறந்த விகர்ணன்
க்ஷேத்திரங்களில் சிறந்த கோகர்ண(ம்)
ராட்சஸரில் சிறந்த கும்பகர்ணன்
ஷ்யாம நிறம் படைத்த காதுகள் கொண்ட குதிரைகள்- ஷ்யாம கர்ண (குதிரை)
சரீரத்தில் உன்னதமாக உள்ளுக்குள் இருக்கும் அந்தக் கரண(ம்.
இந்த ஆறின் சிறப்பே சிறப்பு என்று அடித்து, அடுக்கிச் சொல்கிறார்கள் அறிஞர்கள்!
கர்ணனைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். குந்தியின் புத்ரன். செஞ்சோற்றுக் கடன் கழிக்கச் சேரக் கூடாதவருடன் சேர்ந்தவன். மஹா ரதி. கொடுத்துச் சிவந்தவன்.
விகர்ணன் கௌரவர் நூற்றுவரில் ஒருவன். திரௌபதியை சபை நடுவே துகில் உரித்த போது யாரும் அதைக் கண்டிக்காத சூழ்நிலையில் வாய் திறந்து கண்டித்த தர்மவான் விகர்ணன். கடைசியில், இவனைக் கொல்ல நேர்ந்ததே என்று மனம் துக்கப்பட்டவாறே பீமன் கொன்றான். விகர்ணன் தீயோருடன் சேர்ந்த பாவத்தால் அழிந்து பட்டான்.
சிவ க்ஷேத்திரங்களுள் துளுவ நாட்டில் உள்ள சிறந்த கோகர்ணம் சிவ ஸ்தலங்களுள் பிரசித்தி பெற்றது. சிவபிரானின் காதுகள் பசுவின் காது போலக் குழைந்து இருப்பதால் இந்த புனிதத் தலம் கோகர்ணம் என்ற பெயரைப் பெற்றது.
இன்ன உரு என்று அறிவு ஒணாதான் காண்
ஏழ்கடலும் ஏழ் உலகும் ஆயினான் காண்
மன்னும் மடந்தை ஓர் பாகத்தான் காண்
மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே
என்பது அப்பர்,,வாக்கு (6ஆம் திருமுறை –சந்திரனும் தண்புனலும் எனத் தொடங்கும் பதிகத்தில் 8ஆம் பாடல் காண்க)
ஆறு சமயங்களும் விரும்பி அடி பேணி அரன் ஆகமம் மிகக்
கூறு மனம் ஏறு இரதி வந்து அடியர் கம்பம் வரு கோகரணமே
என்பது ஞானசம்பந்தர் அருளிய பாடல். (3ஆம் திருமுறை என்றும் அரியான் எனத் தொடங்கும் பதிகத்தில் 6அம் பாடல் காண்க).
ராவணனின் தம்பி கும்பகர்ணன்! சீதையைத் தூக்கி வந்தது தப்பு என்று அண்ணனை இடித்து உரைத்தவன். இவன் கூறுவதாக கம்பன் இயற்றிய பாடல் மிகவும் புகழ் பெற்றது. ‘பேசுவது மானம் இடை பேணுவது காமம்’ என்ற இவனது சாட்டையடிச் சொற்கள் ராவணனது அரசவையில் ஒரு நாடகக் காட்சியையே தோற்றுவிக்கிறது.
ஷ்யாம வர்ணம் பொருந்திய குதிரைகள் மிகச் சிறந்தவை என்று அஸ்வ சாஸ்திரம் கூறுகிறது.
சரீர உறுப்புகளில் மிகவும் நுட்பமானது அந்தக் கரணம் – மனச் சாட்சி. இறைவனின் குரலே மனச்சாட்சியின் குரல்.
ஆக இந்த ஆறு கரணங்கள் சிறப்பானவை என்று அழகுற அடுக்கிச் சொல்லும் போது ஏராளமான சிறப்பான விஷயங்களை ஒரு அலசு அலசித் தெரிந்து கொள்ள முடிகிறது.
ஹிந்து இலக்கியத்தை சுவைபடப் புரிந்து கொள்ள இப்படி ‘3 ராமர், 3 பரதர், ஆறு கர்ணர்’ போன்ற சொற்றொடர்கள் உதவுகின்றன இல்லையா!
***************



You must be logged in to post a comment.