Research article written by S NAGARAJAN
Post No.2207
Date: 2nd October 2015
Time uploaded in London: 5-52 am
(My elder brother S NAGARAJAN is a regular contributor to Bhagya, Jnanalayam, Nilacharal, Ezine and several other magazines and blogs: swaminathan)
தற்பொழுது விற்பனையாகி வரும் ஞானஆலயம்அக்டோபர் 2015 இதழில் வெளியான கட்டுரை.
பாரத ரத்னா அப்துல்கலாம் அவர்கள் கனவு காணுங்கள் என்று இளைஞர்களை ஊக்குவித்தார். கனவு காண எப்படி வேண்டுதல் புரிய வேண்டும் என்ற மந்திரத்தோடு அபூர்வமான விஷயங்களைப் போதிக்கிறது நம் அக்னிபுராணம்!
கனவில் கண்ட உலக சரித்திரம்!
அக்னி புராணமும் ஆர்னால்ட் டாய்ன்பியும்!!
ச.நாகராஜன்
துஸ்ஸ்வப்ன நாசன:
நல்ல கனவுகளைக் காணுங்கள் என்பதே ஹிந்து சாஸ்திரங்கள் தரும் உபதேசம்! துஸ்ஸ்வப்ன நாசன: (தீய கனவுகளை நாசம் செய்பவன் நாமம் 926) என்றே விஷ்ணுசஹஸ்ரநாமம் விஷ்ணுவைத் துதிக்கிறது. அசோகவனத்தில் திரிஜடா, சீதையிடம் தான் கண்ட நல்ல கனவைத் தெரிவிக்க, அதன் பின்னர் அனுமன் சீதையை தரிசிக்க அதுவே ராமாயணத்தின் முக்கிய திருப்புமுனைக் கட்டமாக அமைகிறது!
அக்னிபுராணம் தரும் அறிவுரை
கனவுகளைப் பற்றி அக்னி புராணம் பிரமிக்கத் தக்க விஷயங்களை அள்ளித் தருகிறது. பல்வேறு கனவின் பலன்கள், எந்த ஜாமத்தில் கண்டவை பலிக்கும் என்பன போன்றவை அதில் துல்லியமாக விளக்கப்பட்டுள்ளன. ஒரு நல்ல கனவை முதலில் கண்டு விட்டுப் பின்னர் கெட்ட கனவைக் கண்டால் கெட்ட கனவே பலிக்கும். ஆகவே நல்ல கனவைக் கண்ட பின்னர் உறங்காதே என்ற ஆலோசனையையும் அது அன்புடன் வழங்குகிறது. ஆகவே தான் நம் முன்னோர்கள் நல்ல கனவைக் கண்டவுடன் மகிழ்ச்சியுடன் எழுந்து அனைவரிடமும் அது பற்றிக் கூறி மகிழ்வர்; நல்லதை எதிர்நோக்கிக் காத்திருப்பர்.
ஹஸ்டன் ஸ்மித் என்ற அறிஞர் இந்து மதத்தில் மதமே கலை; கலையே மதம் என்று பொருத்தமுறக் கூறுகிறார்.
நமது கோவில் சிற்பங்கள், அங்குள்ள நாட்டியங்கள், இசை, அலங்காரம் என்று அனைத்தையும் அலசி ஆராய்ந்தால் நமது மதமே நமது கலை; நமது கலையே நமது வாழ்க்கை முறை என்பது விளங்கும்.
ஆனந்த குமாரஸ்வாமி (1877-1947) ஒரு பெரும் கலைஞர். இந்து மதச் சிறப்புகளை கலைஞனுக்கே உரித்த வகையில் நுணுக்கமாக உலகினருக்கு விவரித்தவர். அவர் அக்னி புராணத்திலிருந்து ஒரு அழகிய மந்திரத்தை எடுத்துக் காட்டி ஒரு கலைஞன் பெரிய காரியத்தைத் தொடங்கும் முன்னர் முதல் நாள் இரவில் கனவில் அதை நிறைவேற்றுவதற்கான வழிகளைக் காண்பிக்குமாறு வேண்டுதல் புரியும் மந்திரத்தைக் கூற வேண்டும் என்கிறார். கலை என்பது ஒரு யோகம் என்கிறார் அவர். கனவுக்கும் பெரிய திட்டத்தை நனவாக்கும் செயலுக்கும் உள்ள நெருக்கத்தை நல்ல முறையில் அடைய அக்னி புராணம் கூறும் முறையில் பிரார்த்தித்துச் செய்தால் அது பிரம்மாண்டமான வெற்றியைப் பெறும் என்கிறார் அவர். Visualization என்னும் காட்சிப்படுத்தல் பற்றி ஆதிசங்கரரும் அற்புதமாக விளக்கியுள்ளார்.
கனவுப் படைப்பாளிகளுக்கு நவீன வரலாற்றில் பஞ்சமே இல்லை. நூற்றுக்கணக்கான பேர்களில் மாதிரிக்கு 14 பேரை அட்டவணையில் தனியே காணலாம்!
ஐன்ஸ்டீனின் மனச்சித்திரம்
உலகின் அதிசயமான கண்டுபிடிப்புகள் எல்லாம் விசுவலைசேஷன் என்ற காட்சிகள் மூலமாகவே பெரும்பாலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஐன்ஸ்டீனும் விதி விலக்கல்ல. ஒளியின் வேகத்தின் மீதேறிச் செல்வது போன்ற காட்சியே உலகின் பிரம்மாண்டமான கண்டுபிடிப்பான தியரி ஆஃப் ரிலேடிவிடியயைக் கண்டுபிடிக்க அவருக்கு உதவியது. அதனால் தான் அடிக்கடி அவர் மனச்சித்திரத்தை வற்புறுத்தி வந்தார் வாழ்நாள் முழுவதும்.
ஆர்னால்ட் டாய்ன்பியின் உலக சரித்திரம்
உலகின் சரித்திரத்தை எழுதிய ஆர்னால்ட் டாய்ன்பி (1889-1975) ஒரு அற்புதப் படைப்பாளி. ‘A STUDAY OF HISTORY’’ என்ற அவரது படைப்பு 30 லட்சம் சொற்கள் அடங்கியது. 26 நாகரிகங்களைப் பற்றி 12 தொகுதிகளில் அவர் விளக்கியுள்ளார். ஒரு மனிதனால் இப்படி துல்லியமாக சரித்திரக் காட்சிகளை எழுதி விட முடியுமா என்ன/
இதை எப்படி எழுத முடிந்தது என்பதை அவரே விளக்கியுள்ளார். படுத்தவுடன் கனவில் பக்கம் பக்கமாகச் சொற்கள் அடங்கிய காட்சிகள் விரியுமாம். எழுந்தவுடன் அதை அப்படியே எழுதி விடுவாராம். கனவில் அகக் கண்ணில் விரிந்த காட்சிகள் படலம் படலமாக வர உலக சரித்திரம் மிளிர்ந்தது. அக்னி புராணம் கூறும் கனவுக் காட்சிகளுக்கு அவரே சரியான சான்று. கனவின் மூலமாக உத்வேகம் பெற்ற அறிஞர் அவர்.
பற்றிக் கொள்; காத்திரு
கடவுளைப் பற்றியும் கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பைப் பற்றியும் விளக்கப் புகுந்த அவர் இதற்கு விடையாகத் தனது கனவு ஒன்றையே விவரிக்கிறார்!
இந்தக் கனவில் சிலுவையின் அடிப்பாகத்தைப் பிடித்துக் கொண்டு தான் இருப்பதை அவர் கண்டார். யார்க்ஷைரில் ஆம்பிள்ஃபோர்த் அப்பேயில் (Abbey of Ampleforth) பெனிடிக்ஷன் பீடத்தின் மேல் உள்ள சிலுவையையே அவர் கண்டார்.
பிறகு தெளிவான லத்தீனில் கம்பீரமான ஒரு அசரீரி ஒலித்தது!
“ஆம்ப்ளெக்ஸஸ் எக்ஸ்பெக்டா”
இதன் பொருள்? “பற்றிக் கொள்; காத்திரு” (CLING AND WAIT என்பதாகும்.
(ஷீர்டி சாயி அன்பர்களுக்கு அவர் கூறும் ச்ரத்தை; பொறுமை என்ற இதே அர்த்தம் தொனிக்கும் இரு வார்த்தைகள் நினைவுக்கு வருகிறதா!)
சென்ற நூற்றாண்டின் மாபெரும் சிந்தனையாளரான அவரது கனவு நமது உள்ளத்தில் சிலிர்ப்பூட்டும் இறை நினைப்பை ஊட்டுகிறதல்லவா?
ஆரம்பத்தில் கிறிஸ்தவத்தில் அபார பற்று உடையவராக அவர் இருந்தார். 1944ஆம் ஆண்டு அவர் மனைவி ரோஸலிண்ட் மர்ரேயை விவாகரத்து செய்ய வேண்டி இருந்தது. தன் மனைவி தன்னை விட்டுப் பிரிய கிறிஸ்தவ மதத்தின் வறண்ட ஒரு கொள்கையே காரணம் என்ற முடிவுக்கு அவர் வந்தார். கிறிஸ்தவ மதத்தின் மீதான பிடிப்பு தளரவே புத்த மதம் அவரை ஈர்த்தது.
சமரஸ மத நோக்கு கொண்ட மகாத்மா காந்திஜியை அவர் பெரிதும் போற்றினார். “சமுதாயத்தைக் காக்க வந்த நவீன மீட்பர்” (Modern savior of Society) என்று அவர் காந்திஜியைக் கொண்டாடினார்.
அவரது விரிந்த பார்வை ஹிந்து மதத்தின் பால் திரும்பியது. ஹிந்து மதம் காட்டும் உண்மைகளை உணர்ந்து பெரிதும் அதிசயித்தார் அவர்.
உலக சரித்திரத்தை எழுதியவர் உலகின் எதிர்காலமே இனி ஹிந்து மத நோக்கில் சென்றாலேயே செழிக்கும் என்று முத்தாய்ப்பாக இறுதியில் எழுதி தனது பத்தாவது பாகத்தை முடித்தார்.
கனவில் அவர் கண்ட காட்சி எதிர்காலத்தை ஆளும் ஹிந்து மதக் காட்சி என்றால் அது சரியான காட்சி தானே! தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் உரியவன் அல்லவா!
அவர் கூறுவதை அப்படியே காண்போம்: – “The indian religions are not exclusive minded. They are ready to allow that there may be alternative approaches to the mystery. I feel sure that in this they are right and that this catholic minded Indian religions spirit is the way of salvation for human beings of all religions in an age in which we have to learn to live as a single family if we are not to destroy ourselves.”
“இந்திய மதங்கள் மற்ற எதையும் ஒத்துக்கொள்ளாத மனப்பான்மை கொண்டவை அல்ல. இறைமர்மத்திற்கு விடை காண இன்னும் வேறு பல அணுகுமுறைகளும் உண்டு என்பதை அவர்கள் அனுமதிக்கத் தயார்! இதில் அவர்கள் கூறுவது சரியே என்பதில் நான் உறுதி கொள்கிறேன். நம்மை நாமே அழித்துக் கொள்ளாது, ஒரே குடும்பமாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ள ஒரு யுகத்தில் வசிக்கும் எல்லா மதங்களையும் சார்ந்துள்ள மனிதர்களுக்கு இப்படிப்பட்ட பரந்த மனப்பான்மையுள்ள இந்திய மதங்களின் உணர்வே உய்வதற்கான வழியாகும்.”
பெரிய மேதை தன் கனவில் கண்ட அகக்காட்சியில் உலகம் உய்வதற்கும் அனைத்து மதத்தினரும் ஏற்றுக் கொள்ளும் அற்புதமான பரந்த மனப்பான்மை இந்து மதத்தில் உள்ளது, அதை ஏற்போம் என்று கூறுவது இன்றைய நிலையில் எவ்வளவு பொருத்தமாக உள்ளது!
********************
கனவுப் படைப்பாளிகள்
———————————————————————————————————————————————-
எண் கண்டவர் பெயர் படைப்பு
————————————————————————————————————————————————
01 ஐன்ஸ்டீன் தியரி ஆஃப் ரிலேடிவிடி
02 ராபர்ட் லூயி ஸ்டீவன்ஸன் 1892இல் எழுதிய Across the Plains
03 ஆர்னால்ட் டாய்ன்பி உலக சரித்திரம்
04 சாமுவேல் டெய்லர் கூல்ட்ரிட்ஜ் குப்ளாகான் (கவிதை)
05 ராமானுஜன் கணிதக் கண்டுபிடிப்புகள்
06 கெக்குலே பென்ஸீனில் கார்பன் அணுக்கள் அமைப்பு
07 பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் பல கணிதத் தீர்வுகள்
08 ஜேம்ஸ் காமரான் ஹாலிவுட் படம் – தி டெர்மினேடர்
09 ரெனி டெஸ்கார்டெஸ் அறிவியல் அணுகுமுறை மற்றும் கார்டீஸியன்
கோ ஆர்டினேட் சிஸ்டம்
10 மேரி ஷெல்லி உலகின் முதல் அறிவியல் நாவலான
“ப்ராங்கென்ஸ்டீன்”
11 பால் மக்கார்ட்னி பிரசித்தி பெற்ற இசைப்பாடல் “Yesterday”
12 நீல்ஸ் போர் அணுவின் அமைப்பு
13 ஃப்ரெடெரிக் பாண்டிங் (நோபல் பரிசு பெற்றவர்) பெனிசிலின் இஞ்ஜெக்ஷன்
14 எலியாஸ் ஹோ தையல் மெஷின்
————————————————————————————————————————————————————







R Nanjappa
/ October 2, 2015This is a splendid piece.
Dreaming is not just imagining but a state of communication, of a
different order. Freud and even Jung did not understand it fully.
Prof. Howard Gardner of Harvard, explaining his theory of “*multiple
intelligences” mentions both Einstein and Friedrich Kekule as examples of
“SPATIAL INTELLIGENCE” , vide page 190-191 of his book “Frames of Mind”
(Basic Books, 1993). But I feel the expression was spatial, but the source
much deeper, the admission of which makes our academics uncomfortable.*
*I am very happy that you mentioned our own Ramanujam in this connection.
This fact is obscured by writers in English. I am very grateful for the
full list.*
Santhanam Nagarajan
/ October 3, 2015very very interesting to note new points from Sri Nanjappa as usual! Frames of Mind – I would like to read! “multiple intelligent’ itself is a very big subject! Thanks again! very inspiring!