
அறிவியல் துளிகள் தொடரில் பாக்யா 2015, நவம்பர் 13ஆம் தேதி இதழில் வெளியான கட்டுரை
Compiled by S NAGARAJAN
Date: 17 November 2015
POST No. 2336
Time uploaded in London :– 14-40
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!
DON’T USE THE PICTURES;
THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
ச.நாகராஜன்
விஞ்ஞான உலகத்தையே திகைக்க வைத்த குதிரை ஒன்றை ‘மிருக உலகின் கணித விந்தை’ என்று விஞ்ஞானிகள் புகழ்ந்த சம்பவம் நிஜமாக நடந்த ஒன்று,
எல்பர்ஃபெல்ட் குதிரை)கள் (Elberfeld horses) என்று புகழ்பெற்ற அந்த குதிரைகளைப் பற்றி ‘உளவியல் உலகில் மிகவும் பரபரப்பூட்டிய சம்பவம்’ என்று டாக்டர் இ. க்ளாராபிட் (Dr E.Clarapide) வர்ணித்தார்.
1891ஆம் ஆண்டு நடந்த விஷயம் இது!
இந்தக் குதிரைகளின் அபார புத்திசாலித்தனத்தை முதலில் கண்டு பிடித்தவர் வில்லியம் வான் ஆஸ்டன் என்பவர். அவர் ஒரு பள்ளி வாத்தியார். அவர் குதிரைகளை ஒரு விசேஷமான முறையில் பயிற்றுவித்தார். விளைவோ அபாரமாக இருந்தது.
க்ளூஜ் ஹான்ஸ் என்ற குதிரை கணக்குப் போடும் திறனைக் கொண்டிருந்தது.
ஒரு மேஜை மீது கொட்டைகளை வைத்தால் அதில் எத்தனை இருக்கிறது என்பதை தனது குளம்புகளைத் தட்டிக் காட்டி அது சொல்லும்! வான் ஆஸ்டன் முதலில் நம்பர்களை உரக்கச் சொல்வார். பின்னர் ஒரு கரும்பலகையில் அந்த எண்ணை எழுதிக் காண்பிப்பார். அதைப் பார்க்கும் குதிரை அப்படியே அந்த எண்ணை உட்கிரகித்துக் கொண்டு தன் குளம்புகளால் அந்த எண்ணைத் தட்டிக் காண்பிக்கும்! ஆனால் இதை மோசடி என்று பல பேர் சொல்ல ஆரம்பித்தார்கள். தனது அபாரமான குதிரையின் கணிதத் திறமையைப் பாராட்டாவிட்டாலும் சரி, மோசடி என்கிறார்களே என்று மனமுடைந்த வான் ஆஸ்டன் அந்த விரக்தியிலேயே இறந்து போனார். ஆனால் பல விஞ்ஞானிகள் அந்தக் குதிரையை ஆராய்ந்த பின்னர் மோசடி ஒன்றும் இல்லை என்று கூறினர். என்றாலும் அவர் இறந்தது இறந்தது தானே!
1909இல் அவர் இறந்த பின்னர் அவரது பயிற்சி உத்தியால் கவரப்பட்ட எல்பர்பெல்ட் நகரைச் சேர்ந்த ஒரு நகை வியாபாரி அந்தப் பயிற்சியைத் தொடர்ந்தார். அவர் பெயர் ஹெர் க்ரால் (Herr Krall). க்ரால் பொறுமையாக தன்னுடைய சொந்தக் குதிரைகளுக்குப் பயிற்சியை அளிக்க ஆரம்பித்தார்.
குதிரைகள் அடிப்படை கணிதத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தலைக் கற்றுக் கொண்டன.
முஹம்மது, ஜரீஃப், பெர்டோ மற்றும் ஹான்சென் ஆகிய பெயர்களை உடைய தனது நான்கு குதிரைகளுக்கு இந்தக் கணித வித்தையை அவர் கற்றுக் கொடுத்தார். நான்கு மாதங்களில் ஒரு அபாரமான முன்னேற்றம் ஏற்பட்டது. குதிரைகள் வர்க்கம் மற்றும் க்யூப் ரூட்டையும் போட ஆரம்பித்தன (Square and cube roots). அத்துடன் ஆங்கில ஸ்பெல்லிங்கையும் கூடக் கற்றுக் கொண்டன.
34 என்ற எண்ணை உரக்கக் கூவினால் நான்கு குதிரைகளும் இடது கால் குளம்பை மூன்று தடவையும் வலது கால் குளம்பை நான்கு தடவையும் தட்டும்! க்ரால் ‘Denkende Tiere’ என்ற ஒரு நூலை இது குறித்து எழுதினார். அது உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஞ்ஞானிகள் இந்த விந்தையால் பெரிதும் கவரப்பட்டனர்.
ஒன்றன் பின் ஒன்றாக விஞ்ஞானிகளின் குழு குதிரைகளின் மீது ஆய்வு நடத்த வர ஆரம்பித்தது. ஏராளமான கடுமையான சோதனைகள் நடத்தப்பட்டன. பல விஞ்ஞானிகள் திகைப்புடனும் ஆச்சரியத்துடனும் தங்கள் ஆய்வு முடிவுகளை அறிவித்தனர் – இது உண்மை தான் என்று!
நோபல் பரிசு பெற்ற பிரபல சிந்தனையாளரான மௌரிஸ் மேடர்லிங்க் (Maurice Materlink) (பிறப்பு 28/8/1862 மரணம் 6/5/1949) நேரடியாக எல்பர்பெல்ட் நகருக்கு வந்தார். முஹம்மதைப் பார்த்தார். அந்தக் குதிரைக்கு அவர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். உடனடியாக குதிரை அவரது பெயரை குளம்புகளினால் தட்டிக் கூறியது. மேடர்லிங்க் பல கணக்குகளைப் போடச் சொன்னார். அத்தனை கணக்குகளையும் முஹம்மது மிகச் சரியாகப் போட்டது. ஒரு நம்பரின் ஸ்குயர் ரூட்டை கேட்ட போது குதிரை அதைப் போட மறுத்தது. பின்னால் தான் அது ஸ்குயர் ரூட் போடுவதற்கான சரியான எண் இல்லை என்பதை மேடர்லிங்க் புரிந்து கொண்டார்.
சோதனைகள் மிக்க கவனமுடன் நடத்தப்பட்டன. யாரேனும் சிக்னல் தருகிறார்களா என்ற சந்தேகத்தை சில விஞ்ஞானிகள் கிளப்பினர். உடனே டெலிபோன் மூலம் எண்கள் குதிரைகளுக்குத் தரப்பட்டன. ஹெட் போனை குதிரைகளின் காதில் மாட்டி விட்டனர். எண்கள் உரக்கச் சொல்லப்பட்டு கேள்விகள் கேட்கப்பட்டன. சில சமயம் ப்ளாக்போர்டில் எண்கள் எழுதப்பட்டு கணக்குகள் எழுதப்பட்டன. சில சமயம் எண்களை குதிரைகளின் முதுகில் எழுதிக் காட்டினர்.
அத்தனை சோதனைகளிலும் குதிரைகள் தேறின!
ஆனால் ஆறு மாதங்கள் கற்ற பின்னர் அதற்கு மேல் ஒரு முன்னேற்றமும் அவைகளுக்கு ஏற்படவில்லை.
டாக்டர் எடிங்கர், ஃப்ராங்க்பர்ட் நகரைச் சேர்ந்த பிரபல நியுராலஜிஸ்டான டாக்டர் ஹெச் க்ராமர் மற்றும் ஸ்டட்கார்ட் நகரைச் சேர்ந்த டாக்டர் ஹெச். ஈ. ஜைக்லர் மற்றும் பேசெலி நகரைச் சேர்ந்த டாக்டர் பால் சாராஸிஸ் ஆகியோர் இந்த சோதனைகளை நிகழ்த்தி ‘கணக்குப் போடும் குதிரைகள் ஒரு மாபெரும் அற்புதம்’ என்று நற்சான்றிதழைத் தந்தனர்!
க்ரால் ஒரு குட்டி யானையையும் பயிற்றுவிக்க ஆரம்பித்தார். ஆனால் அந்த சோம்பேறி யானை எதையும் கற்க மறுத்து விட்டது.
இன்று வரை விஞ்ஞான உலகம் எல்பர்ஃபெல்ட் குதிரைகள் எப்படிக் கற்றுக் கொண்டன என்ற புதிரை விடுவிக்கவில்லை!
விஞ்ஞானம் விளக்க முடியாத ஏராளமான புதிர்களுள் கணக்குப் போடும் குதிரைகளும் ஒன்று!
அறிவியல் அறிஞர் வாழ்வில்….
பிரபல இரசாயன இயல் விஞ்ஞானியான ஹெர்மன் ஃபிஷர் (1852-1959) தூக்க வியாதிக்கு வெரோனல் என்ற மருந்தைக் கண்டு பிடித்து 1902 ஆம் ஆண்டு நோபல் பரிசைப் பெற்றார்.
ஒரு முறை அவர் பிரபல நாவலாசிரியரான ஹெர்மன் சுடர்மானைச் (Hermanna sudarmann) சந்தித்தார்.
சுடர்மான் ஃபிஷரைக் கிண்டல் செய்யும் விதமாக, உங்கள் வெரோனலைச் சாப்பிடக் கூட வேண்டாம். அதைப் பார்த்த மாத்திரத்திலேயே எனக்கு தூக்கம் வந்து விடுகிறது” என்றார்.
உடனே ஃபிஷர் பதிலடி கொடுத்தார் இப்படி:” அடடா! என்ன ஒற்றுமை பாருங்கள்! உங்கள் நாவல்கள் அனைத்தையும் படிக்க வேண்டும் என்று வாங்கி அடுக்கி வைத்திருக்கிறேன். அதைப் பார்த்தாலேயே போதும், நல்ல தூக்கம் வந்து விடுகிறது!’
இருவரும் நகைத்தனர்! எழுத்தாளருக்கு விஞ்ஞானி சோடையா, என்ன?
******
You must be logged in to post a comment.