
மெத்தப்படித்து புத்தி மோசம் போன கதை! சம்ஸ்கிருதத்தால் வந்த சனியன்!
Compiled by London swaminathan
Date: 21 November 2015
Post No.2348
Time uploaded in London :– 6-43 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
பழைய கால நகைச் சுவை நூலான — பக்கத்திற்கிருமுறை கெக்கெக்கெவென்று சிரிக்க வைக்கும் விகடக் கற்கண்டென்னும் “விநோத விகட சிந்தாமணி” என்னும் நூலிலிருந்து எடுத்த கதை.
நூல் கொடுத்துதவியவர்- சந்தானம் சீனிவாசன், சென்னை
சோமளேஸ்வரன் பேட்டையில் சம்ஸ்கிருத பாஷையில் பூரண பாண்டித்யமுடைய கோகர்ண தீக்ஷதர் என்பவர் ஒரு நாள் இரவு சாஸ்திரப் புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். அதுசமயம் திருடன் ஒருவன் பூட்டாமல் திறந்திருந்த தீக்ஷதர் வீட்டுக் கதவைச் சத்தமின்றித் திறந்து உள்ளே நுழைந்து கதவைச் சத்தமுண்டாக்கும்படி சாத்தினான்.
அப்போது தீக்ஷதர், “கபாட சப்தம் கிம்?”, அதாவது கதவு சாத்தப்பட்டதே யார்? என்றார். அதற்குத் திருடன் பயமின்றி, “சோ” என்று சொன்னான். அதைக் கேட்ட சம்ஸ்கிருத வித்வானாகிய தீக்ஷதர் சோ—வென்ற பதத்துக்குத் தாத்பர்யம் தெரியாது அகராதியைத் திருப்பித்திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தார். இதற்குள் உள்ளே நுழைந்த திருடன், ரொக்கசொக்கம் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, பாத்திரப்பண்டங்கள் பாக்கியன்னியில் கொல்லைப்புறம் கடத்திவிட்டு, மறுபடியும் வெளியே போகும்போது சத்தமுண்டாக்கும் வண்ணம் கதவைச் சாத்தினான்.
அப்போது தீக்ஷதர், “புன கபாட சப்தம்கிம்?”, அதாவது மறுபடியும் கதவில் சத்தம் உண்டாக்குவது யார்? என்றார். அதற்குப் பக்காத் திருடன் “ரன்” என்று சொல்லி ஓடிவிட்டான்.
‘ரன்’ என்ற சொல்லுக்குப் பொருள் தெரியாதபடி, தீக்ஷதர் மீண்டும் அகராதியைப் புரட்டினார். இரண்டு நாழிகையாகியும் அவருக்கு அர்த்தம் புலப்படாததால், முதலின் என்ன சொன்னான், ‘சோ’, பின்னர் என்ன சொன்னான் ‘ரன்”!
அடக் கடவுளே இரண்டையும் சேர்த்துப் பார்த்தால் “சோரன்” என்று வருகிறதே என்று சொல்லிப் பதறினார். “சோரன்” என்றால் திருடன் என்று பொருள்.
ஒஹோ! திருடனல்லாவா வந்திருக்கான் என்று அறிந்து கையில் விளக்கை எடுத்துக்கொண்டு வீட்டில் தேடிப் பார்க்கையில், வீட்டில் தூசி தும்பட்டை எதுவுமில்லாமல் ஜாடாக எல்லாவற்றையும் திருடன் கொண்டு சென்றது தெரிந்தது. “ஐயோ, ஐயோ” என்று கத்திக்கொண்டு வெளியே சென்று பார்க்கையில் அங்கு எவரு மில்லை. பின்னர் வயிற்றிலும், வாயிலுமடித்துக்கொண்டு, “தன்படிப்பே தனக்குத் தண்டாவாச்சுதே” என்று விசனப்பட்டுக் கொண்டு வேறு ஜீவனம் செய்து காலம் கழித்து வந்தார்.
(சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ஜோக்)
–மேலும் வரும்………………………………………………..
You must be logged in to post a comment.