
WRITTEN BY S NAGARAJAN
Date: 17 December 2015
Post No. 2398
Time uploaded in London :– 6-08 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
அறிவியல் துளிகள் தொடரில் 18, டிசம்பர் 2015 தேதியிட்ட பாக்யா இதழில் வெளி வந்த கட்டுரை
இறந்த பிறகும் எழுதிய அதிசய எழுத்தாளர்!
ச.நாகராஜன்
இறந்த பிறகு உலகம் உங்களை மறக்காமல் இருக்க ஒரு வழி இருக்கிறது, ஒன்று மற்றவர்கள் படிக்க உகந்த எதையேனும் எழுதுங்கள், அல்லது மற்றவர்கள் உங்களைப் பற்றி எழுத உகந்த செயல்களைச் செய்யுங்கள் – பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்
உலக பிரசித்தி பெற்ற நாவலாசிரியரான சார்லஸ் டிக்கன்ஸின் (பிறப்பு 7-2-1812; மறைவு 8-7-1870) நாவல்களைப் படிக்காதவர்களே இருக்க முடியாது. அவரது கதாபாத்திரங்கள் அனைத்துமே உயிர் சித்திரங்கள். ஷேக்ஸ்பியருக்கு அடுத்தாற் போல மகோன்னதமான படைப்புகளைப் படைத்தவர் என்று உலகம் டிக்கன்ஸைக் கொண்டாடுகிறது.

அதீத உளவியலில் அவர் பெரிதும் ஆர்வம் கொண்டிருந்தார். அற்புதமான பேய்க் கதைகள் பலவற்றை அவர் எழுதியிருக்கிறார். To be taken with a Grain of Salt மற்றும் The Signalman ஆகிய அவரது இரு பேய்க் கதைகள் பிரபலமானவை.
The Mystery of Edwin Drood என்ற மர்ம நாவலை அவர் எழுதிக் கொண்டிருந்த போது இறந்து விட்டார். இதற்குச் சில காலம் கழித்து டி.பி.ஜேம்ஸ் என்ற ஒரு அமெரிக்கருக்கு சார்லஸ் டிக்கன்ஸ் மூலம் ‘ஆவி உலகச் செய்தி’ வந்தது.
ஜேம்ஸ் படிக்காத ஒரு மெக்கானிக். வெர்மாண்ட் என்ற இடத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அவருக்கு ‘ஆட்டோமேடிக் ரைடிங்’ என்ற ‘ஆவி ஒருவரின் மேல் ஆவிர்பித்து எழுதுகின்ற முறை’ மூலம், நாவல் டிக்கன்ஸ் மறைந்த போது விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தது.
1872ஆம் ஆண்டு கிறிஸ்துமஸிலிருந்து தொடங்கி 1873ஆம் ஆண்டு ஜுலை முடிய தவறாமல் நாவலின் அத்தியாயங்கள் ஜேம்ஸுக்கு ‘ஆட்டோமேடிக் ரைடிங்’ முறை மூலம் வந்தது.
இறந்த பிறகு சார்லஸ் டிக்கன்ஸ் இப்படி எழுதிய அத்தியாயங்கள் அவர் உயிருடன் இருந்த போது எழுதியதை விட அதிகமானவை. அந்த அத்தியாயங்கள் அற்புதமான முறையில் தொடர்ச்சி, அவரது நடை, சிந்தனா முறை ஆகியவற்றைக் கொண்டிருந்தது.
இறப்பதற்கு முன்னர் மற்றும் இறப்பதற்குப் பின்னர் எழுதிய இரண்டு பகுதிகளும் இணைந்து ‘தி மிஸ்ட்ரி ஆஃப் எட்வின் ட்ரூட்’ என்ற தலைப்பில் நாவலாக வெளி வந்தது. எழுதியவர் – சார்லஸ் டிக்கன்ஸ் என்று வேறு பிரசுரிக்கப்பட்டிருந்தது.
இதைப் படித்த சார்லஸ் டிக்கன்ஸின் உலகெங்கிமுள்ள ரசிகர்கள் மற்றும் ஆவி உலக அபிமானிகள் அனைவரும் இதைப் பாராட்டினர். ஆவி உலகம் இருப்பதற்கு இந்த நாவல் ஒன்றே அத்தாட்சி என்று அவர்கள் உரக்கக் கூறினர்.

ஆனால் இதை கடுமையாக விமரிசனம் செய்த ஒருவரும் இருந்தார். அவர் பெயர் தியோடர் ஃப்லோராய். உளவியலாளரான அவர் இதற்கும் சார்லஸ் டிக்கன்ஸுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றும் ஜேம்ஸ் தனது ஆழ்மனதில் உதித்த கற்பனை மூலமாகவே இதை எழுதினார் என்றும் கூறினார்.
இரு பெண்மணிகள் சந்திக்கும் ஒரு சீன் மிக அற்புதமாக சார்லஸ் டிக்கன்ஸ் எழுதியது போலவே இருக்கிறது என்று விமரிசித்த ஜெனிவா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மேடம் கே. ஃபேர்பேங்க்ஸ் என்ற பெண்மணி இதர பல பகுதிகள் அவரது வழக்கமான நடை போல இல்லை என்றார்.
இதற்கிடையில் சார்லஸ் டிக்கன்ஸின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஜான் ஃபோர்ஸ்டர் என்பவர் டிக்கன்ஸின் நோட்புத்தகங்கள், பேப்பர்களிலிருந்து இந்த நாவலில் பின்னால் வரப் போவதை அவர் முன் கூட்டியே ஒரு அத்தியாயமாக எழுதி வைத்திருந்ததைக் கண்டுபிடித்துக் கூறினார். அத்தோடு மட்டுமின்றி ஆவி உலகத்திலிருந்து டிக்கன்ஸ் எழுதிய பகுதியில் மூன்றே மூன்று கதாபாத்திரங்களே சேர்க்கப்பட்டிருப்பதையும், இதை எழுதிய ஜேம்ஸ், தான் டிக்கன்ஸ் எழுதிய நாவலின் முற்பகுதியைப் படித்திருப்பதை ஒத்துக் கொண்டதையும், டிக்கன்ஸ் இறந்த பின்னர் சுமார் இரண்டரை ஆண்டுகள் கழித்தே இதை எழுதியிருப்பதையும் ஃபோர்ஸ்டர் சுட்டிக் காட்டினார்.
ஆனால் எது எப்படி இருந்த போதிலும் இறந்த பின்னரும் சார்லஸ் டிக்கன்ஸ் ‘எழுதிய’ நாவல் நன்றாகத் தான் இருந்தது!
டிக்கன்ஸ் மெஸ்மரிஸத்தை நன்கு பயின்றவர். அதனால் அவர் வாழ்வில் ஏற்பட்ட சுவையான சம்பவங்கள் ஏராளம் உண்டு.
இதே போல ஏராளமான மீடியம்கள் ஆவி உலகத் தொடர்பினால் பல புத்தக்கங்களை எழுதி உள்ளனர்.
ஆயிரத்தி தொள்ளாயிரமாவது ஆண்டு தொடங்கிய போது செயிண்ட் லூயிஸ் என்ற இடத்தில் இல்லத்தரசியாகத் திகழ்ந்த பேர்ல் குரண் என்பவர் தன்னிடம் பேஷன்ஸ் ஒர்த் என்பவரின் ஆவி தொடர்பு கொண்டிருப்பதாகக் கூறினார். ஆவி உலகத் தொடர்பினால் வரும் செய்திகளை அறிந்து கொள்ளப் பயன்படும் ஊஜா போர்டை அவர் பயன்படுத்தினார். இதன் மூலம் 5000 கவிதைகள், ஒரு நாடகம், பல நாவல்களை அவர் எழுதினார். நாளடைவில் ஊஜா போர்டைத் தூக்கிப் போட்டு விட்டு சாதாரண நிலையிலேயே அவர் ஆவியின் மூலம் எழுத ஆரம்பித்தார்.

இப்படி ஆவி மூலம் எழுதிய இன்னொரு பிரபல பெண்மணி ஹெலன் ஸ்மித் என்பவர். காதரீன் எலிஸ் முல்லர் என்ற புனைபெயரில் அவர் எழுதலானார். இந்த புனைப் பெயருக்கு உரியவர் 1863இல் ஜெனிவாவில் பிறந்த ஒரு மீடியம். அவர் தனது முந்தைய ஜென்மத்தில் ஹிந்து குருக்களாக இருந்ததாகக் கூறினார். அராபிய மொழியில் அவர் எழுத ஆரம்பித்தது அனைவரையும் வியக்க வைத்தது. தனது மொழியானது செவ்வாய் மற்றும் யுரேனஸ் கிரகத்தின் மொழி என்றார் அவர்.
இதை ஆராய வந்த ஜெனிவா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உளவியல் பேராசிரியர் தியோடர் ஃப்ளர்நாய் என்பவர் ஹெலன் ஸ்மித்தின் ஆழ்மனமே இவற்றைப் படைத்தது என்றார். கற்பனை வளம் வாய்ந்த ஒரு பெண்மணியின் மொழியே செவ்வாய் கிரக மொழி என்றார் அவர். ஆனால் ஹெலன் மிகவும் பிரபலமான ஒருவராகத் திகழ்ந்தார்.
பிரேஜில் நாட்டைச் சேர்ந்த மீடியமான பிரான்ஸிஸ்கோ சேவியர் 1910ஆம் ஆண்டில் பிறந்தவர். வரலாறிலேயே ஆட்டோமேடிக் ரைடிங்கிற்காக அதிகப் புகழ் பெற்றவர் இவர். ஒரு லட்சம் பக்கங்களை ஆவியின் மூலமாக இவர் எழுதித் தள்ளி விட்டார். அவர் பள்ளியில் படித்ததே இல்லை என்பது தான் பெரிய அதிசயம்! விஞ்ஞானம், இலக்கியம் என பல்துறை புத்தகங்களை அவர் எழுதியது அனைவரையும் வியக்க வைத்தது! ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளிலும் எழுபதுகளிலும் அவர் உலகெங்கும் நடத்திய டாக்-ஷோக்கள் மிகவும் பிரபலமாயின. தன் புத்தகங்களிலிருந்து வந்த வருமானத்தை அறக்கட்டளை நிறுவி தர்ம காரியங்களுக்காக அவர் செலவழித்தார்.
இப்படி சார்லஸ் டிக்கன்ஸ் போல இறந்தும் எழுதியோர் அநேகர் உண்டு. ஆவிகளாக எழுதினாலும் கூட அவர்களின் நூல்கள் சுவையாகத் தான் உள்ளன!

அறிவியல் அறிஞர் வாழ்வில்….
ஜெர்மானிய விஞ்ஞானியான பரோன் அலெக்ஸாண்டர் வான் ஹம்போல்ட் (Baron Alexander Von Humboldt) ஒரு முறை அமெரிக்கா வந்த போது அமெரிக்க ஜனாதிபதி ஜெஃபர்ஸனை (Jefferson) அவரது அலுவலக அறையில் சந்தித்தார். அங்கு மேஜை மீது ஜனாதிபதி ஜெஃபர்ஸனைத் திட்டிக் கேவலமாகவும் ஆபாசமாகவும் எழுதி இருந்த பத்திரிகை ஒன்றைக் கண்டு திடுக்கிட்டார்.
“இந்த பத்திரிகையை இன்னும் ஏன் தடை செய்யவில்லை?” என்று ஆச்சரியத்துடன் கேட்ட அவர், “இதன் ஆசிரியரை சிறையில் அடைத்தாயிற்றா? இவருக்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது?” என்று கேட்டார்.

ஜெஃபர்ஸன் புன்முறுவல் பூத்தார்.
‘அதை உங்கள் கையில் எடுத்துக் கொள்ளுங்கள், பரோன்” என்ற ஜெஃபர்ஸன்,
“உங்களிடம் யாரேனும் அமெரிக்காவில் சுதந்திரம் இருக்கிறதா என்று சந்தேகப்பட்டுக் கேட்டாலோ அல்லது அமெரிக்காவில் கருத்துச் சுதந்திரம் இருக்கிறதா என்று கேட்டாலோ, இந்தப் பத்திரிகையைக் காண்பியுங்கள். இதை எங்கிருந்து நீங்கள் பெற்றீர்கள் என்பதையும் சொல்லுங்கள்” என்றார்.
அமெரிக்க ஜனாதிபதி என்றால் அமெரிக்க ஜனாதிபதி தான்!
************
You must be logged in to post a comment.